கொழும்பு: 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வித்தியாசமானவராக மாறி போனதாகவும் அவரை பதவிக்கு கொண்டு வர பாடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய உட்பட ஏனைய கட்சிகளை அவர் மறந்து போனதாகவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கும்புக்கெட்டே நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருக்கு வழிகாட்டிய கல்விமான்கள், புத்திஜீவிகளை மறந்து போனார். அவருக்கு ஆசி வழங்கிய மக்களையும் அவர் மறந்து போனார். ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்து தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற தேவையே அவருக்கு இருந்தது. சுகாதார அமைச்சர் என்ற வகையில் கடந்த 5 வருடங்களாக நாட்டின் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் முன்வைத்த யோசனைகளை ராஜக்ஷவினர் அனுமதிக்கவில்லை.
அதற்கான சட்டங்களை கொண்டு வர முயற்சித்த போதெல்லாம், மா மன்னரும், அவரது சகோதரர் இளவரசனும் அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கவில்லை. அவர்கள், இரசாயன கிருமி நாஷனிகளால் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் இருக்கவில்லை. கோடிக்கணக்கில் தரகு பணம் கிடைக்கும் பல்தேசிய நிறுவனங்களுடன் அவர்கள் இருந்தனர். இதுவே அதற்கான காரணம்.
இதனால், ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் அமைக்கும் அரசாங்கத்தில் விஷ கிருமி நாஷனிகளை கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டு வருவோம்.
அத்துடன் நாட்டில் வாழ்வதற்கு போதுமான வருமானம் இன்றி வாழும் 27 லட்சம் குடும்பங்கள் உள்ளன. அந்த குடும்பங்கள் பற்றிய எந்த அக்கறையும் ராஜபக்ஷவினருக்கு இல்லை. நாடு முன்னேறி விட்டதாகவும் அபிவிருத்தியடைந்து விட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவைக் கூட உண்ண முடியாது வாழ்கின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுப்போம். மக்கள் பட்டினியால் வாடும் போது அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்து எந்த பயனுமில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
Published by

Leave a comment