கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று காலை கொழும்பில் நடைபெற்றது.
தயா கமகே அவர்களின் பிரத்தியேக அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் அதன் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத் மற்றும் பிரதித் தவிசாளர் MJM. மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து பிரச்சாரங்களை ஒருங்கமைப்பது தொடர்பாகவும் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
பொது எதிரணிகளின் கூட்டமைப்பில் பங்காளிக்கட்சியாக இயங்குகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, கிழக்கு மாகாணத்திலும் அதற்கு வெளியேயுள்ள பிரதேசங்களிலும் தொடர்ச்சியான பிரச்சார நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசிய கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் 27ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கிழக்கு மாகாண பிரதேசங்கள் பலவற்றுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment