காத்தான்குடி: இலங்கை கிரிக்கட் அணியின் 1996 உலகக் கிண்ண வெற்றிக்கும், அதன் பின்னரான வெற்றிகளுக்கும் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கிய முன்னாள் வீரர்களான அர்ஜூனா ரணதுங்க மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரின் இடத்தை எவ்விதக் குறையுமில்லாமல் நிவர்த்தி செய்தவர்களே இன்றைய இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான குமார் சங்கக்காரவும், மஹேல ஜயவர்த்தனவும் ஆவர்.
இவர்கள் இருவரினது வருகையின் பின்னர் இலங்கை கிரிக்கட் அணி, பற்பல சாதனைகளை நிகழ்த்தி பல வெற்றிகளையும் பெற்றிருந்ததுடன், இவ்விருவரும் ஐ.சி.சி யின் உயர்ந்த விருதுகளையும் பெற்று இலங்கைக்கு புகழை தற்போதும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இதனடிப்படையில் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமும், சிறந்த துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார, இலங்கையில் விளையாடும் அவரது இறுதிப்போட்டி இன்றாகும். இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் 7வதும் இறுதியுமான போட்டி, குமார் சங்கக்கார இலங்கையில் விளையாடும் இறுதிப்போட்டியாகும்.
குமார் சங்கக்கார 27 ஒக்டோபர் 1977ம் வருடம், மாத்தளையில் பிறந்தவர். சங்காவின் தந்தை ஓர் சட்டத்தரணி. சங்காவின் குடும்பம் பின்னர் கண்டிக்கு குடிபெயர்ந்து, இலங்கையில் உயர் பிரசித்திபெற்று விளங்கும் கண்டி ட்ரிணிட்டி கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியையும், இரண்டாம் நிலைக் கல்வியையும் கற்றுவந்தார்.
ஓர் புகழ்பெற்ற பாடசாலைக்குரிய விளையாட்டுப் பிரிவுகள் அனைத்திலும் சிறந்து விளங்கினார். அதாவது, பெட்மிட்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுக்களில் பாடசாலை ரீதியாக சிறந்து விளங்கி, பாடசாலை மற்றும் தேசிய மட்டத்திலும் பல விருதுகளையும் தனது பள்ளி வாழ்க்கையில் பெற்றார்.
சங்காவின் திறமையை வியந்த அப்போதய கல்லூரி அதிபர் லியோர்னார்ட் லீ அல்விஸ், சங்கக்காரவின் தந்தையை அழைத்து, உங்களது பிள்ளையை கிரிக்கட் விளையாடுவதற்கு ஆர்வப்படுத்துங்கள் என கூறினார்.
இதன் பின்னர் 13, 15 மற்றும் 17 வயதுக்கிடைப்பட்ட கல்லூரி அணியில் விளையாடி உள்ளுர் மட்டத்தில் பல சாதனைகளையும் நிகழ்த்தினார்.
தனது கல்லூரி வாழ்க்கையில் சகல துறைகளிலும் சிறந்து விளங்கியதால் ட்ரினிட்டி கல்லூரியால் வழங்கப்படும் ‘தெ ரைட் கோல்ட் மெடல்’ எனும் சகலதுறை மாணவர் அதி உயர் விருதையும் பெற்றிருந்தார்.
சங்கக்காரவின் திறமையும் புகழும் கொழும்பைச் சென்றடைந்தது. அதன் பின்னர் 1996 இல் இலங்கை கிரிக்கட் சங்கக்காரவை உள்வாங்கியது. 1998-99இல் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் இலங்கை ஏ அணிக்கு விளையாடி, அப்போட்டியில் 156 ஓட்டங்களைப் பெற்று தனது திறமையை மென்மேலும் வலுவடையச் செய்தார்.
உயர்தரப் பிரிவில் கலைத்துறையில் கல்வி கற்று, உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று, கொழும்பு சட்டக்கல்லூரிக்குத் தெரிவானார்.
இக்காலப்பகுதியில் இலங்கை கிரிக்கட் அணிக்கு நிலவிய சிறந்த வீரர்கள் பற்றாக் குறையாலும், சங்கக்காரவின் புதிய திறமைகளாலும் முழு நேர வீரராக இலங்கை கிரிக்கட் சங்கக்காரவை உள்வாங்கியது.
இதனால் சட்டத்துறையில் பட்டம் பெறமுடியாமல் தனது கல்வித்துறையை இடைநிறுத்திவிட்டு, இலங்கை அணிக்காக தன்னை அர்ப்ணித்தார்.
இருபது20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் எந்தப் போட்டியிலும் சிறப்பாக ஆடக்ககூடிய உலகிலுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய வீரர்களுள் சங்கக்காரவும் ஒருவர்.
அதுமாத்தரிமன்றி, மஹேல ஜயவர்த்தன மற்றும் டில்சான் ஆகியோரது இறுதிப்போட்டியாகவும் இன்றைய போட்டி சில வேளை அமையலாம். உலகக் கிண்ணத்தை இலங்கை வெற்றியீட்டினால் அந்த கௌரவத்துடன் மேற்படி மூவீரர்களும் கிரிக்கட்டிலிருந்து விடைபெறுவர். அல்லது அதிர்ச்சித் தோல்விகளை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சந்தித்து, உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறினாலும் சில அதிருப்திகளில் வீரர்கள் இராஜினாமாவச் செய்வது உலகக் கிரிக்கட்டில் இருந்துவரும் வலாற்றுச் சான்றுகள்.
இலங்கை அணிக்கு சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், சிறந்த விக்கட் காப்பாளராகவும், அனுபவமிக்க வீரராகவும் திகழும் குமார்சங்கக்கார இலங்கையில் விளையாடும் இறுதிப்போட்டி இன்றாகும்.
மைதானம் நிறைந்த இரசிகர்கள் சங்கக்கார இலங்கையில் விளையாடும் இறுதிப்போட்டியை நேரடியாகக் காண கெத்தாராமவில் அணிதிரள இருக்கின்றனர்.
குமார் சங்கக்கார இலங்கையில் விளையாடும் இறுதிப்போட்டியும், 2015 உலகக் கிண்ணமும் அவருக்கு மென்மேலும் உச்சாகத்தையும், சாதனைகளையும் நிலைநாட்ட வழிசமைக்க வேண்டும் என YourKattankudy வாசகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
Published by






Leave a comment