சிட்னி சம்பவம்: விசாரணை தொடர்கிறது

sydneyசிட்னி: சிட்னி நகரில் லிண்ட் கஃபே உணவகத்தில் பிணைக் கைதிகள் பிடித்துவைக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையின் நடவடிக்கை குறித்த விசாரணை துவங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காவல்துறையினர் அதிரடியாக அந்த உணவகத்திற்குள் புகுந்ததில், பிணைக் கைதிகளைப் பிடித்துவைத்திருந்த துப்பாக்கிதாரி தவிர, மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்திலும் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு கொல்லப்பட்ட மன் ஹரோன் மோனிஸ் என்ற தீவிரவாதியின் நோக்கம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். நியூ சவுத்வேல்ஸ் படையினரால் மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கைகள் குறித்த விசாரணையும் துவங்கியுள்ளது.

ஹரோன் மோனிஸ் தவிர, அந்த உணவகத்தின் நிர்வாகியான டோரி ஜன்ஸன், சிட்னியில் வழக்கறிஞராக இருந்துவந்த கத்ரினா டாஸன் ஆகியோரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் நான்கு காவல்துறையினரும் காயமடைந்தனர். இந்த உணவகத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களில் இரண்டு கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

sydney

துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த மேலும் மூன்று பேர் தற்போது நலமாக உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளை மோனிஸ்தான் சுட்டாரா என்பது குறித்து காவல்துறை எதையும் தெரிவிக்கவில்லை. ஈரானில் பிறந்த மதகுருவான மோனிஸ், 1996ல் அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தார்.

தனது முன்னாள் மனைவியைக் கொல்வதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த மோனிஸ் தற்போது பிணையில் இருந்துவந்தார். 40க்கும் மேற்பட்ட பாலியல் மற்றும் அநாகரீகமான தாக்குதல் குற்றச்சாட்டுகளும் இருந்தன. மோனிஸிற்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது, பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்தது எதற்காக என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தவிருக்கிறது.

Published by

Leave a comment