கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் ஒருவார காலத்தின் பின்னரே முடிவு செய்யவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், உயர் உறுப்பினர்கள் தாருஸ்ஸலாம் கட்சி தலைமையகத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்திய பின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இது தொடர்பான உறுதி மொழியை முஸ்லிம் தலைவர்கள் முன்னிலையில் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்வரும் நாட்களில் கட்சியின் இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும் மு.காவின் அரசியல் அதியுயர் பீடம் கண்டியில் கூடி முக்கிய விடயங்களை ஆராய்கிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் தலைமையிலான தூதுக்குழுவினரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்து நடத்திய பேச்சின்போது முஸ்லிம்களின் நீண்ட கால பிரச்சினை களுக்குத் தீர்வு வழங்க அரசு தரப்பில் உறுதி வழங்கப்பட்டது.
குறிப்பாக, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களில் நீடித்து வரும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலாளர் அலுவலகம் அமைப்பது என்பன போன்ற விடயங்கள் தொடர்பில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இந்த வாக்குறுதிகள் தொடர்பில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதை அவதானித்து தேர்தல் ஆதரவு தொடர்பில் இறுதி முடிவெடுப்போமென தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
Published by
![slmc[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/slmc14.jpg?w=150&h=113)
Leave a comment