டெல்அவிவ்: ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினருடன் ஏற்பட்ட மோதலை அடுத்து பலஸ்தீன அமைச்சரான செயித் அபு அயின் கொல்லப்பட்டுள்ளார். அதிக கண்ணீர்ப்புகை காரணமாக மூச்சுத் திணறிய நிலையிலேயே நேற்று அவர் கொல்லப்பட்டுள்ளார். வடக்கு ரமல்லாவில் துர்முஸய்யா கிராமத்திற்கு அருகில் தடுப்புச் சுவருக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே இஸ்ரேல் படையினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
அபு அயின் ரமல்லாஹ் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துள்ளார். இவர் குடியேற்ற பகுதிகளை பிரிக்கும் எல்லை வேலிகளுக்கு எதிரான பலஸ்தீன ஆணைக்குழுவின் தலைவருமாவார்.
இதில் அலியத் சட்டவிரோத யூத குடியேற்றப்பகுதியில் செயற்பாட்டாளர்கள் ஒலிவ் மரங்களை நட முயற்சித்ததை அடுத்து படையினர் அவர்களை தாக்கி இருப்பதோடு அதிக அளவில் கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
அபு அயின் இஸ்ரேல் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானதாக சம்பவ இடத்தில் இருந்த இஸ்ரேல் ஊடகவியலாளர் மற்றும் ராய்ட்டர் படப்பிடிப்பாளர் குறிப்பிட்டுள்ளனர். ஆர்ப்பாட்டப் பேரணியின்போது இஸ்ரேல் படையினர் அபூ அயின் மீது துப்பாக்கி முனை மூலமும் அணிந்திருந்த தலைக்கவசத்தைக் கொண்டும் தாக்கியதாக பலஸ்தீன பாதுகாப்பு தரப்பு ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளது.
Published by


Leave a comment