தெஹ்ரான்: பெட்ரோலியப் பொருட்களில் பெரிய அளவிலான விலை வீழ்ச்சி மத்திய கிழக்குப் பகுதிக்கும், இஸ்லாமிய உலகுக்கும் எதிரான அரசியல் சதி என்று ஈரானிய அதிபர் ஹசான் ரொஹானி குற்றம்சாட்டியுள்ளார்.கச்சா எண்ணை விலை குறைவால், இரானின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இது குறித்து ரொஹானி தெரிவித்த மிகவும் கடுமையான கருத்துக்கள் இவை.
கச்சா எண்ணையின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டொலர்கள் என்ற அளவுக்கு இருந்தால்தான் இரானால் தன்னுடைய பட்ஜெட் செலவுகளை சரிக்கட்ட முடியும்.
சமீபத்தில் நடைபெற்ற எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பின் கூட்டத்தின் போது, எண்ணை உற்பத்தியை குறைத்து அதன் மூலம் கச்சா எண்ணையின் விலையை தூக்கி நிறுத்த வேண்டும் என்று ஈரான் வலுவாக வாதிட்டது. ஆனால் பிற நாடுகள் இதை ஏற்கவில்லை.
அமெரிக்காவும், கனடாவும் பாறைகளில் இருந்து ( ஷேல் எண்ணை) அதிக அளவில் எண்ணை உற்பத்தியை மேற்கொண்டு வருவதன் காரணமாகவும், உலக அளவில் பெட்ரோலியத் தேவையை விட உற்பத்தி அதிகமாக இருப்பதாலும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலை சர்வதேசச் சந்தையில் குறைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, பெட்ரோலியப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு நன்மை ஏற்பட்டாலும், பெட்ரோலிய ஏற்றுமதியை சார்ந்து இருக்கும் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
Published by

Leave a comment