தனியார் உயர்கல்வி நிறுவனங்களை மாணவர்கள் தமது இறுதித் தெரிவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ‘இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் தனியார் உயர்கல்வித் துறையானது மாணவர்களுக்கு பல வாய்ப்புக்களைக் கொடுக்கிறது. இருந்தாலும் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் தமது இறுதித் தெரிவாகவே தனியார் உயர் கல்விநிறுவனங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என பீகாஸ் கெம்பஸ் உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த  06.12.2014  அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  இவர் இவ்வாறு தெரிவித்தார்.

பீகாஸ் கெம்பஸ் மட்டக்களப்பு வளாகத்தினால் நடாத்தப்பட்ட இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாள் அப்துர் ரஹ்மான் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

‘உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்யும் மாணவர்களில் பெரும்பாண்மையானோர் தமது உயர் கல்விக்காக தனியார் உயர் கல்வி நிறுவனங்களை நாடிச் செல்வது ஒரு புதிய போக்காக மாறியிருக்கின்றது.

அரச பல்கலைக் கழகங்களில் அனுமதிகள் கிடைக்காத மாணவர்களுக்கு தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பல வேறு மாற்று வாய்ப்புக்களை வழங்குகின்றன என்பது உண்மையே.

இருந்தாலும் அரசாங்க பல்கலைக் கழகங்களில் இருக்கின்ற கற்றல் வசதிகள், வளங்கள் மற்றும் கற்கை சூழல் என்பவற்றுக்கு ஈடான வளங்களை இலங்கையில் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் கொண்டிருக்கவில்லை என்பது மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

மேலும், வெளிநாட்டு பல்கலைக் கழகம் வழங்கும் தகைமைக்காக மாணவர்கள் உள்நாட்டில் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கற்க முடியும் என்றாலும் கூட, அந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் சிறந்த ஆய்வுகூட மற்றும் ஏனைய வசதிகளை மாணவர்கள் இலங்கையில் பெற முடியாது.

எனவே, உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு நான் எப்போதும் கூற விரும்புகின்ற அறிவுரை என்னவென்றால்…..நீங்கள் எதிர் பார்க்கும் துறைகளில் உயர் கல்விக்கான அனுமதியினை அரசாங்க பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொள்வதுவே உங்களது தலையாய இலட்சியமாக இருக்க வேண்டும்.

அதற்காக மீண்டும் மீண்டும் உயர்தரப் பரீட்சையின் ஊடாக நீங்கள் முயற்சிப்பது மிகப் பெறுமதியானதாகும்.

அவ்வாறு மூன்று முறை முயற்சித்ததன் பின்னரும்கூட அரச பல்கலைக் கழக அனுமதி கிடைக்கா விட்டால் உங்களின் இறுதித் தெரிவாக தனியார் உயர் கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொள்ள முடியும்’  என அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த வருடங்களில் ஏ.எல். பரீட்சை எழுதிய மட்டக்களப்பு பிரதேச மாணவர்களுக்கான ஒரு வார கால  இலவச பாடநெறி ஒன்றினை பீகாஸ் கெம்பஸ் மட்டக்களப்பு வளாகம் அண்மையில் நடாத்தியிருந்தது.

உயர்கல்வியைத் தொடரவிரும்பும் மாணவர்களுக்கு , அவர்கள் விருத்தி செய்யவேண்டிய பல்வேறு திறன்கள் தொடர்பான ஆரம்பப் பயிற்சிகளை வழங்கும் நோக்கிலேயே இப்பயிற்சி நெறி நடாத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பயிற்சி நெறியினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மாணவர்கள் 193 பேருக்கு குறித்த நிகழ்வின்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு பீகாஸ் கெம்பஸ்  மட்டக்களப்பு வளாகத்தின் முகாமையாளர் முஹம்மட் மிர்ஷான் தலைமை தாங்கினார்.

This slideshow requires JavaScript.

Published by

One response to “தனியார் உயர்கல்வி நிறுவனங்களை மாணவர்கள் தமது இறுதித் தெரிவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்”

  1. Well done sir. U r the only person to provide services to the society without any selfish intention

Leave a reply to Rafaideen Cancel reply