மட்டக்களப்பு: மீனவள் இன்னிசை பாடும் மட்டுமாநகரினிலே வாய்மொழியையும் கேட்கும் வல்லமையையும் இழந்த மாணவ மணிகளுக்காக வை.எம்.சீ.ஏ.யின் அணுசரனையுடன் நடாத்தப்படுவதே இவ்வாழ்வோசைப் பாடசாலையாகும். இப்பாடசாலையானது 1999ம் ஆண்டு 3 ஆசிரியர்களுடனும் 11 மாணவர்களுடனும் தனது பணியை ஆரம்பித்தது. இப்பாடசாலையின் ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு வாடகைக் கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது தனக்கென ஒரு பெரிய கட்டடத்திலேயே தனது பணியை மேற்கொள்கின்றது.
மேற்படி பாடசாலையானது இவ்வருடம் 15 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது.
இப்பாடசாலையின் பணிகளோ பல வகையில் பல வகையில் மாணவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தி அவர்களை வெற்றிப்படிகளிலும் ஏற்றிச் செல்கின்றது.
இப் பாடசாலையில் ஆரம்பந் தொடக்கம் இன்று வரை 205 மாணவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது 64 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
ஏனைய மாணவர்கள் வீடுகளில் இருந்து சுயதொழிலினையும் பல தனியார் நிறுவனங்களிலும் மாநகர சபையிலும் அரசாங்கத் திணைக்களங்களிலும் தொழில்புரிகின்றனர். இங்கு பத்து ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.
அத்துடன் கற்றலில் இடர்பாடுடைய மாணவர்களுக்கென வகுப்புக்கள் மேலதிகமாக நடைபெறுகின்றன.
புதிய ஆண்டில் தரம் 7 க்குரிய வகுப்புக்களும் ஆரம்பிக்க உள்ளது.
இங்கு கல்வி கற்பிக்கும் அனைவரும் பல வகையிலும் பல இடங்களிலும் குறிப்பாக இந்தியா வரை சென்று சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்.
மாணவர்களுடைய வாழ்வில் எவை எல்லாம் முக்கிய விடயமாக கருதப்படுகின்றதோ அவற்றிற்கு எல்லாம் இங்கு பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
கைவேலைகள், தையல் வகுப்புக்கள், வாழ்த்து அட்டை தயாரித்தல், ஆடை அலங்காரம் செய்தல், நடன வகுப்புக்கள் , கணனி வகுப்புக்கள் போன்றவற்றிற்கான பயிற்சிகள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன.
எமது பாடசாலை மாணவர்களுக்கு சாதாரண பாடசாலையில் கற்பிக்கப்படும் பாடவிதானத்திற்கேற்ப பாடவிடயங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இப்பாட விடயங்கள் அனைத்தும் சைகை மொழியிலேயே நடாத்தப்படுகின்றன.இங்கு கல்வி கற்கும் மாணவர்களில் 2 பேர் புலமைப் பரீட்சையிலும் தோற்றியுள்ளனர்.
இம் மாணவர்களுடைய கற்றல் நடவடிக்கைகளில் மேலதிகமான பாடங்களாக ஒலி கேட்டல், ஒலிநயம், சைகை மொழி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களின் பேச்சுத்திறனை வழப்படுத்துவதற்காக பேச்சுப்பயிற்சியும் கொடுக்கப்படுகின்றது.இதன் மூலம் மாணவர்கள் ஓரளவு அன்றாட தேவைக்கான சொற்களை ஓரளவு தெளிவின்றி உச்சரித்துச் கூற முடியும். அத்துடன் ஓரளவு சத்தத்தையும் ஏற்படுத்த முடியும்.
இந்த வகையில் பயிற்றுவிக்கப்பட்ட 4 மாணவர்கள் சாதாரண பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் காது கேட்கும் திறனின் அளவிற்கு ஏற்ப இவர்களுக்கு கேட்டல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை சுற்றாடலில் உள்ள சத்தத்தை மாணவர்கள் சற்று புரிந்து கொள்ள உதவி புரிகின்றது. இப்பாடசாலையில் பல தரப்பட்ட சமய மாணவர்களும் கல்வி கற்கின்றனர்.
தூர இடங்களில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்காக எமது பாடசாலையில் விடுதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென விடுதிப் பொறுப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சற்று அண்மித்த தூரத்தில் உள்ள மாணவர்கள் வந்து கல்வி கற்று செல்வதற்கான வாகன வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
எமது மாணவர்களுக்கு நடைபெறும் தவணைப் பரீட்சைக்குரிய வினாப்பத்திரங்கள் அனைத்தும் எமது மாவட்டத்திலுள்ள சாதாரண பாடசாலையில் உள்ள மாணவர்களால் செய்யப்படும் மாவட்ட மட்ட ,மாகாண மட்ட வினாப்பத்திரங்களே ஆகும். எமது பாடசாலையினால் கற்றலுடன் தொடர்புடைய பல கண்காட்சிகள் எமது பிரதேச பாடசாலையிலும் ஏனைய பிரதேசப் பாடசாலையிலும் நடைபெற்றுள்ளது.
மேலும் விளையாட்டுப் போட்டிகளும் ,ஓவியப் போட்டிகள் செவிப்புலன் அற்ற மாணவர்களுடனும் ,ஏனைய சாதாரண மாணவர்களுடனும் நடைபெற்றது.
இதில் எமது மாணவர்கள் வெற்றி பெற்று எமது பாடசாலைக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண மாணவர்களுக்கு எத்தனையோ பல பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனிலும் இவ்வாறு பேச்சுத்திறன் அற்ற வாய்பேச முடியாத மாணவர்களுக்காக அவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட பாடசாலை இப்பாடசாலை ஒன்றே ஆகும்.
Published by




Leave a comment