பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்துகொள்ளவிருந்த நிகழ்வினை தடுத்து நிறுத்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினர் முயற்சி

ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

PMGG-Logo[1]காத்தான்குடி: மஞ்சந்தொடுவாய் பிரதேச பாலர் பாடசாலை நிகழ்வொன்றில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த காரணத்தினால், அதனை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினரால் தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஞ்சந்தொடுவாய் பிரதேச பாலர்களின் ஆங்கிலக் கல்வியினை மேம்படுத்தும் வகையில் இயங்கிவரும் ஹிக்மா கல்வி நிலையத்தின் வருடாந்த கலை நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு மஞ்சந்தொடுவாய் அமீரலி வித்தியாலய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வை இவ்வாறு தடுத்து நிறுத்தவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று மாலை 4 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகவிருந்த நிலையில் பின்னேரம் 2.30 மணியளவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரீம் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், தான் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், இந்த நிகழ்வுக்கு அப்துர் ரஹ்மான் எஞ்சினியர் போன்றவர்களை அழைக்கக்கூடாது என்றும் அதனடிப்படையில் இந்த நிகழ்வினை நிறுத்துமாறும் கூறியிருக்கிறார். அவ்வாறு செய்யமுடியாது எனவும் ஒரு பொது நிறுவனம் என்பதன் அடிப்படையில் எல்லாத் தரப்பினரையும் அனுசரித்தே செல்ல வேண்டி இருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதன்பின்னர் காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியூடாக அமீரலி வித்தியாலய அதிபருக்கு இந்நிகழ்ச்சியை ரத்து செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக பின்னேரம் 3 மணியளவில் வேறு இடத்திற்கு இந்நிகழ்ச்சியை மாற்றவேண்டிய நிலைக்கு ஏற்பாட்டாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பின்னேரம் 4 மணிக்கு நிகழ்சிகளை ஆரம்பிக்கவேண்டிய இக்கட்டான நிலையில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அங்கிருந்த குர்ஆன் மதரசா கட்டடம் ஒன்றிற்கு இந்நிகழ்ச்சி அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டு பல்வேறு அசௌகரிகங்களுடன் நடாத்தி முடிக்கப்பட்டது.

ஏற்கனவே உள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாக இந்தக் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேற்படி ஏற்பாட்டாளர்களினால் கடந்த சில தினங்களில் மூன்று வெவ்வேறு நிகழ்சிகளை நடத்தப்பட்டது என்றும் முன்னைய இரண்டு நிகழ்சிகளிலும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லியும் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Published by

One response to “பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கலந்துகொள்ளவிருந்த நிகழ்வினை தடுத்து நிறுத்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினர் முயற்சி”

  1. இதக் கூட செய்யல்லயன்டா அந்த கதிரைக்கு என்ன மரியாதை?

Leave a reply to Aman Cancel reply