“சிறுபான்மையிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களே ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் ஆணி வேர்கள்” – அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா

Mashoor-Moulana[1]கொழும்பு: இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முஸ்லிம்களுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமையப் போகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம் என்னவென்பதை அறிய, உள் நாட்டு அரசியல் நோக்கர்கள் உட்பட சர்வதேச நாடுகள் ஆழமாக அவதானித்துக் கொண்டிருக்கின்ற காலகட்டம் இதுவாகும்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குரிமையின் பலம் என்ன? அதன் பலவீனம் என்ன? முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் என்ன? எமக்குள்ளான எதிர்ப்புகள் என்ன? எமது பெறுமதியான வாக்குகளை நாம் யாருக்கு அளிக்க வேண்டும்? என்பன குறித்த கேள்விகள் எமக்குள் தொக்கி நிற்கின்றன.

இப்படியானதொரு சூழலில் நாட்டில் இனம் ஐக்கியம் குறித்தும், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சம்பந்தமாகவும் ஜனாதிபதி அவர்களிடமும்- அரசின் உயர் மட்ட உறுப்பின்ர்களிடமும், சர்வமத அமைப்புகளிடமும் தொடர்ந்து பேசி வருகின்றவர் என்கிற அடிப்படையில் முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சற்று ஆராய்வோம்.

இலங்கையைப் பொறுத்தளவில் முஸ்லிம்களின் பலம் என்று சொல்லுகிற போது பலவற்றை சொல்லலாம். அவற்றில்

1. முஸ்லிம்கள் வியாபாரத்தில் அன்றிலிருந்து இன்று வரை உச்சத்தில் இருத்தல்.

2. பூரண மத சுதந்திரம் மற்றும் எமது அனுஷ்டானங்களுக்கான
சம உரிமை (மற்ற நாடுகளை ஒப்பிடுகையில்)

3. இலங்கையின் தேசிய ஊடகங்களில் எமக்கான மத ரீதியான போதிய சலுகைகள் வழங்கப்படுதல். குறிப்பாக, ஐவேளை அதானை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபனத்தில் ஒலிபரப்புதல், முஸ்லிம்களின் பண்டிகைக் காலங்களில் அரசு விடுமுறைகள் வழங்குதல் போன்ற இன்னும் பல்வேறு விடயதானக்களை இங்கு கூறலாம்.

3. பாராளுமன்றில் முஸ்லிம்களுக்கான போதிய இட ஒதுக்கீடு

4. கருத்து சுதந்திரம், முஸ்லிம் ஊடக சுதந்திரம், வழிபடும் சுதந்திரம், பேச்சுரிமை, வாக்குரிமை, எமது மத ரீதியான சட்ட நடைமுறைகள் என்பன இலங்கையில் மற்ற நாடுகளை விட தாராளமாகவே வழங்கப்படுவதை காணலாம்.

அடுத்தது, முஸ்லிம்களின் பலவீனங்கள் பற்றி ஆராயுமிடத்து-

1.எமது சமூகத்தில் ஒற்றுமையின்மை இன்று பரவலாக காணப்படுகிறது. எமது அன்றைய சேர். ராஸிக் பரீத், டி.பி.ஜாயா, பதியுதீன் மஹ்மூத் மற்றும் கடந்த தசாப்தங்களில் எம்முடன் செயற்பட்ட மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் போன்ற தலைவர்கள் கட்டிக் காத்த ஒற்றுமை என்ற இறுக்கமான கயிறு இன்றுகளில் எமது தலைவர்களின் பலவீனங்களால் அறுந்து விடும் சூழலில் காணப்படுகிறது. எனவே, எமது சமூகம் எம்மை வழி நடாத்தக் கூடிய ஆளுமையுள்ள ஒரு தலைவரை இனம் காணுதல் சமகாலத்தில் அவசியமாகிறது.

2. மேலும், சமூகத்தில் ஒருவருக்கொருவர் சேறு பூசும் நடவடிக்கைகள் மலிந்து விட்டன. இதனால் கை சேதப்படுவது தனி மனிதனன்றி முழு சமூகமேயாகும்.

3. எடுப்பார் கைப்பிள்ளைகள் போல காலத்திற்கு காலம் கொள்கைகளை மாற்றிக் கொண்டிருத்தல், நேர்மையற்று இருத்தல், சந்தர்ப்பங்களை நழுவ விட்டு பின்னர் ஆதங்கப்பட்டுக் கொண்டிருத்தல், கிடைக்கும் வாய்ப்புகளை குறைத்து மதிப்பிடுதல், பல்லின சமூகத்தில் வாழும் வழிமுறைகள் பற்றி அறியாதிருத்தல், இனத்தை காட்டிக் கொடுத்தல், குறைகளை வெளிப்படுத்தல், நன்றி மறத்தல் என்பன எமது சமூகத்தின் பாரிய பிழைகளாக அறியப்படுகிறது.
மேலும், இன்றைய எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களிடம் வாக்குறுதிகள் பல கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டு அவற்றை நிறைவேற்றாமல் பதவிக் காலங்களில் கதிரையை சூடாக்கி அமர்ந்திருந்து விட்டு பின்னர் அரசை குறை கூறித் திரிவதும் மிகப் பெரிய பலவீனங்களாக இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அத்துடன் அன்றைய தலைவர்கள் போல் இன்றைய தலைவர்கள் பேரம் பேசும் சக்தியை அதிகளவில் வளர்த்துக் கொள்ளவில்லை. இதனால் இன்று இலங்கையில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்களின் கல்வி அறிவு, பொருளாதார நடவடிக்கைகள் பின் தங்கி இருப்பதையும் மறுப்பதற்கில்லை. சதா உரிமைகள் பற்றி பேசுவதில் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை. சமூகத்தின் சலுகைகள் பற்றியும் தீர்க்கமாக சிந்தித்து செயலாற்றுதல் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பொறுப்பாகும். எனவே அல்லாஹ் தந்த ’அமானிதமான’ பதவிகளை சமூகத்தின் விடிவுக்காய் அரசியல்வாதிகள் பயன்படுத்த வேண்டுமென்பதை இத்தருணம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இலங்கையில் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்திகில் முஸ்லிம்களுக்கும் சகல துறைகளிலும் கணிசமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அமைச்சுப் பதவிகள், உயர் மட்ட பதவிகள், இராணுவம்- பொலிஸ், புலனாய்வுத் துறை, குடிவரவு-குடியகல்வு போன்ற வெற்றிடங்களில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கான வரலாறு மற்றும் கலாச்சாரம், பாரம்பரியம் மிகவும் நெடியது. இது பல நூற்றாண்டுகளை தாண்டியதும் கூட. சர்வ் மதங்களுடன் மிக சிறப்பான உறவு பூண்டு வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு இடையிடையே மாற்று சமூகத்தால் அநீதிகள் இழைக்கப்பட்ட வரலாறுகளும் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது பல்லின சமூகம் வாழுகிற ஒரு நாட்டில் தவிர்க்க முடியாத விடயமாகவே காணப்படுகிறது. இலங்கை எமது தாய் நாடு. எனவே இந்த நாட்டின் நன்மைக்காய் நாம் எல்லோரும் உழைக்க வேண்டும். வேறு நாடுகளுக்கு போய் நாம் வாழ முடியாது. நமமை அரவணைத்து வாழும் தாய் நாட்டிற்கும் அதன் தலைமைக்கும் முஸ்லிம்களாகிய நாம் நன்றி பாராட்டுதல் காலத்தின் தேவையாகும்.

இன சுத்திகரிப்பு, துவேசம், வன்முறை, பழிவாங்கல் என்பன முஸ்லிம்கள் மீதும் மேலாதிக்கம் கொண்ட அரசுகளால் அவ்வப்போது அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. இலங்கை முஸ்லிம்களுக்கு இப்படியான வன்முறைகள் தமிழர்கள் சிங்களவர்கள் என்ற பாகுபாடின்றி இரு சமூகத்தாலும் நடந்தேறி இருக்கின்றன.

1990 களில் எது வித அவகாசமும்- மனிதாபிமானமும் இன்றி யாழ்ப்பாணத்து பூர்வீக முஸ்லிம்கள் அங்கிருந்து மிலேச்சத்தனமாக அப்புறப்படுத்தப்பட்டமை இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் ஒரு துயரமான பதிவாகும். இதனை புலிகள் அமைப்பு பிற்பட்ட காலத்தில் வெறுமனே ஒற்றை வார்த்தையில் ‘அதுவொரு துன்பியல் சம்பவம்’ என கூறி முஸ்லிம்கள் மீது அரங்கேற்றிய அரஜாகத்துக்கு நியாயம் கற்பிக்க முனைந்தனர்.

ஆனால், அதே கொடூர பயங்கரவாதிகள், மிலேச்சத்தனமான 30 வருடங்கள் கோரத் தாண்டவமாடிய பயங்கரவாதம் என்பன எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் முற்றாக அழிக்கப்பட்டு நாடு அமைதி பெற்று, மீண்டும் வட பகுதியில் எமது முஸ்லிம்கள் தமது பூர்வீக நிலங்களுக்கு குடிபெயர வழி சமைத்தது. இது ஜனாதிபதியின் சாணக்கியமான தலைமைத்துவத்தால் மாத்திரமே சாத்தியமானது. ஆனால், அதற்கு முன்பிருந்த அரசுகள் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்து, மக்களை அச்சமும் பீதியும் நிறைந்த சூழலில் அடிமைப்படுத்தி வைத்திருந்து, தங்களுக்கான சுய லாபங்களை மாத்திரமே தேடிக் கொண்டன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் காலத்தில் புத்தளம் பள்ளிவாசல் சம்பவம் முஸ்லிம்கள் மனதில் ஆறா வடுவாக ரணப்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும், புலிகளால் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள், ஏறாவூர் படுகொலைகள், குருக்கள் மடம் படுகொலை, இன்னும் கடத்தல் கப்பம் பறித்தல், காணிகள் ஆக்கிரமிக்கபட்டமை என்பன பசுமரத்தாணியாய் பதிந்திருக்கின்றன.

அதேபோல் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற பேருவளை தர்ஹா நகர் சம்பவங்களும் இலகுவில் மறக்க கூடிய ஒன்றல்ல. இருந்த போதிலும் ’பிச்சைகாரனின் ஆறாத புண் போல’ இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிகளை மீட்டி, எதிர்கால சந்ததிகள் மனதிலும் சகோதர இனம் மீதான வெறுப்புகளை விதைத்தலும், அச்சத்தை ஏற்படுத்தலும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல.

எல்லா இனங்களிலும் இனக் குரோதம் நிறைந்த அடிப்படைவாதிகள் இருந்து கொண்டிருப்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. எனவே, நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனவாதத்தை நாம் நமது அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்லுதல் வரும் காலத்தில் சமூகங்களுக்கிடையே சிறந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாது என்பதனை நாம் எல்லோரும் அறிந்திருக்க வேண்டும்.

சகோதர சமூகத்தினர் எப்போதும் எமது முஸ்லிம்களுடன் நட்புறவுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவே ஆசைப்படுகின்றனர் என்பதை சர்வ மதங்களின் ஐக்கியம் தொடர்பான வேலைத்திட்டத்தை தலைமை தாங்கி முன்னெடுப்பவன் என்கிற வகையில் என்னால் வெகு சிறப்பாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களும் இது தொடர்பாக மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

பேருவளை-தர்ஹா நகர் அசம்பாவிதங்கள் நடைபெற்ற போது பொலிவியா சுற்றுப் பயணத்தில் இருந்த ஜனாதிபதி, உடனடியாக தாயகம் திரும்பி, சம்பவ இடங்களுக்கு வருகை தந்து, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து துரித வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, புனரமைப்பு மற்றும் மீள் கட்டமைப்பு பணிகளை ஆரம்பித்து தற்போது அவற்றை பூர்த்தியும் செய்துள்ளார். நாட்டின் அனைத்து மக்களுக்கும் பாகுபாடற்ற ஜனாதிபதி என்ற முறையில் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் தர்ஹா நகரின் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று சேதங்களை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதலும் அனுதாபங்களும் தெரிவித்தார்.

Mashoor-Moulana[1]
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா

எனவே, நாம் நாட்டை நேசிக்கும் ஒரு உன்னத தலைவரிடம் எமது பெறுமதி வாய்ந்த நாட்டை ஒப்படைக்க வேண்டும். பதவி மோகம் கொண்டவர்களிடம் எமது நாட்டை ஒப்படைத்தால் மீண்டும் 30 வருடங்கள் நாம் அனுபவித்த இருண்ட யுகத்தை மீண்டும் சந்திக்க வேண்டி வரலாம். நாட்டின் நலனில் கரிசனை கொண்ட தலைமத்துவம் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் மூலமாகவே ஏற்படுத்த முடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

ஆதலால், முதலில் எமது முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து நாட்டில் நிலவும் நெருக்கடி சூழலுக்கு முற்றுப் புள்ளி வைத்தல் அவசியமாகும். பிளவுபட்ட ஒரு சமூகமாக நாம் மாற் விடக் கூடாது. எமக்கான தனித்துவ அரசியல் முகவரியை தேடிக் கொள்ள வேண்டும். இலங்கையில் பூர்விகமாய் வாழுகிற இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரு போதும் அரசியலில் அனாதைகள் ஆகி விடக் கூடாது. இதர மக்களுடன் கலந்து வாழுகிற முறைமையை முஸ்லிம்கள் பேணி நடத்தல் அவசியமாகும்.

எனவே அமைப்பு ரீதியாக நாங்கள் ஒற்றுமைப்பட்டு பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களில் முஸ்லிம்களுக்கு அதிக நன்மை செய்பவர் யார்? செய்தவர் யார்? யாரது ஆட்சியில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்தோம்? என்பது குறித்தெல்லாம் நாம் சிந்தித்து ஆழமான முடிவுகள் எடுக்க வேண்டிய ஒரு தருணத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். கடந்த காலங்களை மனதில் இருத்தி ’பகை கொண்ட உள்ளம், துயரத்தின் இல்லம்’ என எதிர்கால நிலைமைகளை நாம் மாற்றி விடக் கூடாது.

இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழலில் முஸ்லிம்களாகிய நாம் தீர்மானிக்கப் போகும் தீர்க்கமான முடிவு என்ன? அதன் பிரதிபலனாக எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கப் போகும் பிரதிபலன்கள் என்ன? என்பதையெல்லாம் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். அரசியல் பற்றி போதிய தெளிவற்ற ஒரு சிலர், பொது வேட்பாளர் மைத்திரிபால அவர்களை ஆதரிக்கின்ற போக்கிலே முஸ்லிம்களை தூண்டுகிற பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். தூர சிந்தனையில்லாத இந்த விசமப் பிரச்சாரம் ஒரு போதும் வெற்றியளிக்காது என்பதை நாம் உணர வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் இன்ஷா அல்லஹ் மீண்டும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது சாத்தியமாகி இருக்கும் நிலையில், முஸ்லிம்களை இந்த அரசில் இருந்து தூரப்படுத்தும் முயற்சிகளில் ஒரு சில சுய லாபம் தேடும் சக்திகள் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான சுய நலவாதிகளின் ஏமாற்று வலைகளில் முஸ்லிம்கள் ஒரு போது சிக்கி விடக் கூடாது.

நாட்டில் இனவாதத்தை முழுமூச்சுடன் விதைத்து – முஸ்லிம் எதிர்ப்பு கோசத்தை அப்பாவி பெரும்பான்மை சமூகத்திடம் கொண்டு சென்ற முஸ்லிம்களின் பரம வைரியான சம்பிக்க ரணவக்க போன்ற உச்சக்கட்ட இனவாதிகள் நிரம்பி இருக்கிற முஸ்லிம் எதிர்ப்பு கூடாரமாக பொது வேட்பாளர் மைத்திரியின் அணி காணப்படுகிறது. இதனை ஒவ்வொரு முஸ்லிம்களும் நன்கு சிந்திக்க வேண்டும்.

மேலும், இப்போது முஸ்லிம்களுக்காய் நீலிக் கண்ணீர் வடிக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பேருவளை தர்ஹா நகர் கலவரத்தின் போது ஒரு வார்த்தை கூட முஸ்லிம்களுக்காக பரிந்து பேசவில்லை. ஒரு அனுதாப அறிக்கையேனும் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறவில்லை.ஆனால், இன்று ‘பாட வந்தால் கிழவியும் பாடுவாள்’ எனும் பழமொழிக்கேற்ப முஸ்லிம்கள் மீது அனுதாப மழை பொழிகிறார்.

தர்ஹா நகரில் அன்று நடந்த அட்டூழியங்களை வேடிக்கை பார்த்து மௌனம் சாதித்த மைத்திரியால் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித நன்மைகளும் கிட்டப் போவதில்லை. இதுவே யதார்த்தம். மைத்திரியை விட இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் தான் முஸ்லிம்களை ஆத்மார்த்தமாக நேசிக்க கூடியவர். இன்று மைத்திரி எதுவித கூச்சமுமின்றி மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக தான் மாத்திரமே ’முஸ்லிம்களின் பாதுகாவலன்’ என பம்மாத்து காட்டுகிறார். ஒரு போதும் முஸ்லிம்கள் இந்த கபட நாடகத்திற்கு சோரம் போகக் கூடாது.

அதே போல், பொது அணியில் சேர்ந்திருக்கும் சரத் பொன்சேகா அவர்களும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து ஒரு போதும் ஆர்வம் காட்டாதவர் என்பதை முஸ்லிம்கள் நன்கு சிந்திக்க வேண்டும். முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்று பொது மேடைகளில் முழங்கிய சரத் பொன்சேகாவும் இன்று மைத்திரியின் களத்தில் ஆதரவு தெரிவிப்பது முஸ்லிம்களுக்கு குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல.

ஆனால், எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் சிறுபான்மை-பெரும்பான்மை எனும் வித்தியாசாமின்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றி வருவதை நன்றி உணர்வுடனும்,இதய சுத்தியுடனும் சிந்திக்க கூடிய எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

எனவே முஸ்லிம்கள் உணர்ச்சி அரசியலுக்கு ஆட்படாமல், தூர சிந்தையுடன் செயற்பட்டு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை வழங்க வேண்டும்.ஜனாதிபதியின் மேல் காழ்ப்புணர்வை வெளிப்படுத்த, தற்போது வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கூட்டு சேர்ந்திருக்கும் பொது வேட்பாளர் மைத்திரி தலைமையிலான இந்த ‘ஒரிஜினல் இனவாதக் கும்பலின்’ போலி முகத்திரைகளை முஸ்லிம்கள் கிழித்தெறிந்து இன்றைய ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

மலரப்போகும் வளமான எதிர்காலத்துடன் கூடிய மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் ஆட்சியின் பங்காளர்களாக இன்றைய இலங்கையின் ஒவ்வொரு முஸ்லிமும் மாற வேண்டும். எதிர்வரும் காலத்தில் முஸ்லிம்களின் நன்மைக்காக சுதந்திரக் கட்சியில் முஸ்லிம்களுக்கான பிரிவொன்றை ஸ்தாபிப்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளேன். இந்த அமைப்பின் ஊடாக முஸ்லிம்களின் சகல தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதோடு இன நல்லிணக்கமும் மேம்படும். எனவே தோழமையுடன் எம்மை அரவணைக்கும் ஜனாதிபதி அவர்களை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்.

ஜனாதிபதி அவர்கள் நாட்டில் முஸ்லிம்களுக்கு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் , வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இவ்வாறான முஸ்லிம்களுக்கான ஜனாதிபதியின் அபிவிருத்தி பணிகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.அரச மட்டத்தில் முஸ்லிம்கள் நன்றி மறந்தவர்கள் எனும் போக்கை ஏற்படுத்த ஜனாதிபதியின்அரசியல் எதிரிகளால் இவ்வாறான விடயங்கள் கையாளப்படுகின்றன.

மேலும், அரசோடு ஒட்டி இருக்கும் எமது முஸ்லிம் தலைமைகளும் தமக்குள்ளான முரண்பாடுகளை களைந்து விட்டு ஜனாதிபதியின் அபிவிருத்தி பணிகளை போதிய கரிசனை செலுத்தி, மக்கள் மயப்படுத்தல்அவசியமாகும். இஸ்லாம் எப்போதும் நன்றியுணர்வை வெளிப்படுத்துகிற மார்க்கமாகும்.நீறு பூத்த நெருப்பாய் பகைமையுணர்வு எமக்குள் கொழுந்து விட்டு எரியக் கூடாது. அத்துடன் கசப்புணர்வுகள் களையப்பட வேண்டும்.

நாட்டின் தேசிய நலனில் மிகுந்த அக்கறை செலுத்திய இனமாக கடந்த பல நூற்றாண்டுகளாக எமது முஸ்லிம் சமூகம் மிளிர்ந்து வருகிறது. எமது மூத்த முஸ்லிம் தலைமைகளின் வழியொட்டி, நாமும் எமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காய் உழைக்க வேண்டும். பேரினவாத தலைமைகளில் இருப்பவர்களில் சிறப்பானவர் யார் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தல் அவசியமாகும். இனவாத கும்பல்களின் சதி வலையில் சிக்கி எமது உன்னத வாக்குகளை நாம் வீணடிக்க கூடாது.

ஏகோபித்த மக்கள் ஆதரவுடனும்,வெற்றி வாய்ப்புகளுடனும் உலா வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு ஏகோபித்த ஆதரவை வழங்குவதன் மூலம் பொது வேட்பாளர் அணியில் கூடாரமடித்திருக்கும் நாட்டில் இனவாதத்தை வளர்த்த ஆபத்தான தரப்பினருக்கு நாம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, இன வாதத்தை எமது அடுத்த தலை முறைக்கும் கொண்டு செல்லாது மகிழ்ச்சியான ஒரு தேசத்தை கட்டியெழுப்ப முஸ்லிம்களாகிய நாம் திட சங்கற்பம் பூண வேண்டும்.

ஆதலால், எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில்- நாட்டில் சகல இன மக்களும் விரும்புகிற ஆளுமையுள்ள தலைவர், மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு வாக்களித்து- நாட்டில் தொடர்ந்தும் அமைதி சூழலையும், ஆரோக்கியமானஅபிவிருத்தியையும், வளமான எதிர்காலத்தையும், நீடித்த சுபீட்சத்தையும் பெற்றுக் கொள்வோம். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் துணை செய்ய உங்களைப் போல, நானும் பிரார்த்தனை செய்கிறேன்.

அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
முஸ்லிம் சிங்கள் ஒருமைப்பாடு தொடர்பான வேலைத்திட்டத்தின் தலைவர்,
மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகர்.

Published by

Leave a comment