காத்தான்குடி: 1979 ஆம் ஆண்டிலிருந்து ‘வஹ்ததுல் வுஜூத்’ எனும் எல்லாம் அவனே எனும் அத்வைதக் கொள்கையை காத்தான்குடியில் பிரச்சாரம் செய்து, அக்கொள்கையை தனக்கு முடியுமானவரை நிலைநாட்டிவரும் அப்துல் ஜவாத் அப்துர் ரஊப் மௌலவி, தற்பொழுது தனது கொள்கைக்கு எதிரான பிரச்சாரங்களையும் சவால்களையும் சந்திக்க முடியாமல் இருந்து வருவதை உலகளவில் மக்கள் அவதானித்து வருகின்றனர்.
1979 இல் காத்தான்குடியில் முதன் முதலாக ஏற்பட்ட மார்க்கப் பிளவுகளின் பின்னர், தனது ஆதரவாளர்களால் ‘ரஊப் மௌலவி’ மற்றும் ‘மௌலவி’ எனவும், அதன் பின்னர் 1990 ஆண்டுகள் அளவில் ‘மௌலவி அவர்கள்’ அல்லது ‘மௌலவி அவங்க’ என, அப்துர் ரஊப் மௌலவி அழைக்கப்பட்டு வந்தார்.
1989 பொதுத் தேர்தலின் போது ஐ.தே.க.யில் போட்டியிட்ட றிஸ்வி சின்ன லெவ்வையை ஆதரித்ததன் மூலம், தனது அரசியல் ஆதரவில் தனது கொள்கைக்கு சில நன்மைகளைப் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர், காத்தான்குடியில் அப்துர் ரஊப் மௌலவிக்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் அரசியல் ஆதரவுகளின் பிரதிபளிப்பால் தளர்த்தப்பட்டன.
இதன் பின்னர் 1991-1995 காலப்பகுதியில், தனது நெருங்கிய நண்பரும், சிறந்த பேச்சாளருமான மறைந்த பாரூக் மௌலவியுடன் இணைந்து எல்லாம் அவனே என்ற கொள்கையை காத்தான்குடியின் மூலை முடுக்குகளிலும், அயல் கிராமங்களான காங்கேயனோடை, பாலமுனை மற்றும் பூநொச்சிமுனை ஆகிய இடங்களிலும் மேடைகள் அமைத்து, காத்தான்குடி உலமாக்களை எதிர்த்து, அவர்களுக்கு சவாலாக அத்வைதப் பிரச்சாரத்தை வாரந்தோரும் மேற்கொண்டு வந்தார்.
இதன் காரணமாக அயல் கிராமங்களில் இருந்தும் அப்துர் ரஊப் மௌலவிக்கு ஆதரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. அப்துர் ரஊப் மௌலவிக்கு எதிராக அவ்வப்போது மிம்பர்களிலும், மேடைகளிலும் குரல்கொடுத்து வந்த காத்தான்குடியின் சில உலமாக்களின் பிரச்சாரங்கள், தப்லீஹ் ஜமாஅத்தின் வருகையை அடுத்து முடக்கப்பட்டன.
இதன் காரணமாக காத்தான்குடியில் அப்துர் ரஊப் மௌலவியின் செல்வாக்கும், கொள்கையும் அதிகரித்து, இவ்வூரில் ஓர் தனியிடத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய அமைப்பாக பத்ரிய்யா உருவானது.
இதன் விளைவு, 1994 பிரதேச சபைத் தேர்தலில் அப்துர் ரஊப் மௌலவி, தராசு சின்னத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றார். இது அப்துர் ரஊப் மௌலவிக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் கிடைத்த ஓர் வெற்றியாகவே அமைந்தது.
அப்துர் ரஊப் மௌலவியின் அரசியல் திருப்பம், சில அரசியல் வாதிகளைத் திரும்பிப்பார்க்க வைத்தது.
இந்நிலையில், 2004 மற்றும் 2006 காலப்பகுதியில் காத்தான்குடியில் ஏற்பட்ட ஈமானியப் போராட்டத்தின் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சேகுதாவூத் பசீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆலிம் முகம்மது ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் கவனங்கள் அப்துர் ரஊப் மௌலவி தரப்பில் விழுந்தன.
குறிப்பாக 2006 இல், முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட அப்துல் ஜவாத் ஆசிரியரை ஆதரித்து அப்துர் ரஊப் மௌலவி தரப்பினர் ஆலிம் முகம்மது ஹிஸ்புல்லாஹ்வுடன் கைகோர்த்தனர். ‘மௌலவி’, ‘மௌலவி அவங்க’ என அழைக்கப்பட்ட அப்துர் ரஊப் மௌலவி, ‘செய்குனா’ , ‘வாப்பா’ எனவும் அதன் பிற்பட்ட காலப்பகுதியில் ‘பெரியவக’ எனவும் அழைக்கப்பட்டார்.
இன்று 11 புனிதஸ்தலங்களுக்குத் தலைவராகவும், அவ்லிய்யாக்களின் இறுதியானவராகவும், ஞான பிதாவாகவும், உலமாக்களின் சூரியனாகவும், மற்றும் கலாநிதியாகவும் அழைக்கப்படும் அப்துர் ரஊப் மௌலவியை நோக்கி, அவரது பயான் நிகழ்வில் இருந்தே பெறப்பட்ட இஸ்லாத்திற்கு முரணாண கருத்துக்கள், அல்குர்ஆன் மீதும், நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவ்லிய்யாக்கள் மீதும் தொடுக்கப்பட்ட பொய்கள் மற்றும் கட்டுக்கதைகள் என்றும் கூறி, தொகுத்து, காத்தான்குடியில் இயங்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கம் இதுவரையில் “மௌலவி அப்துர் ரஊப் நிரூபிப்பாரா?” என்ற 29 அமர்வுகளை நிகழ்த்தி, இறுவட்டுக்களாக வெளியிட்டு, அதன் காணொளிகளையும் சமூக வலைத்தளங்களிலும், தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பதிவேற்றப்பட்டிருக்கின்றன.
மேற்கூறப்பட்ட தனது ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட அத்தனை பெயர்களையும் கொண்டுள்ள அப்துர் ரஊப் மௌலவி ஏன் தேசிய தௌஹீத் ஜமாஅத்திற்கு பதில் கொடுக்க முடியாது?
தேசிய தௌஹீத் ஜமாஅத்திடம் இருக்கும் அதே குர்ஆன், ஹதீஸ் கிரந்தங்கள்தான் அப்துர் ரஊப் மௌலவியிடத்திலும் உள்ளது. இவ்வாறிருக்க, தான் செய்த பயான்களிலிருந்தே முடியுமானால் நிரூபியுங்கள் என சவால்விடும் தேசிய தௌஹீத் ஜமாஅத்திற்கு ஏன் அப்துர் ரஊப் மௌவி நிரூபிக்க முன்வரக்கூடாது?
பத்ரிய்யா பள்ளிகட்டப்பட் கணக்கு விபரங்களில் அதிருப்தியடைந்திருந்த சில ஆதரவாளர்கள் அன்று இருந்தாலும், பள்ளிவாயல் என்ற வகையில் அவர்கள் பொருந்திக்கொண்டனர். ஆனால் தேசிய தௌஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் மௌலவி அப்துர் ரஊப் நிரூபிப்பாரா என்ற தொடருக்கு ஏன் செய்ஹூனாவால் முற்றுப் புள்ளி வைக்க முடியாது என முரீதீன்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதன் விளைவுகள் பின்னால் பாரதூரமாக ஆகிவிடலாம் என்ற நிலைப்பாட்டைக் கருத்திற்கொண்டே, செய்குணாவிற்கு அருகிலுள்ள ‘ஹலீபா’ சுற்றுவட்டார நிர்வாகிகள், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு இறங்கினர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய முறைப்பாடுகள், வெலிகந்த இராணுவ அதிகாரி அழைத்துப் பேசுதல், உள்ளுர் அரசியல்வாதிகளின் ‘அன்புக் கட்டளை’கள் அதுமாத்திரமன்றி உலமாஉகள் மாநாடு போன்ற நடவடிக்கைகள் எதுவும், மௌலவிக்கு எதிரான இத்தகைய மார்க்க விமர்சனங்களைகாப்பாற்ற முடியாமல் போயின.
அதன் பின்னர், இறுதியாக 02-12-2014 அன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணை, அதுவும், ஓர் முஸ்லிம் நீதிபதி என்பதால் ஓரளவுக்கு சமரசமாக நிறைவடைந்திருக்கிறது.
இதைவிட, கொழும்பு நீதி மன்றத்தை நாடினாலும்கூட, முடிவுகள் எதுவும் எட்டப்போவதில்லை. ஏனெனில் இவ்விவகாரம் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தப்பட்டது. ஓர் தீர்ப்பை வழங்க வேண்டுமாயின் பிரச்சினை ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மௌலவியோ அல்லது றப்பானிகளோ இத்தொடரை வழிமறித்து, நிரூபிக்காதவரை பத்ரிய்யாவில் ஏற்பட்டுள்ள சலசலப்புக்களை தடுத்து நிறுத்த முடியாமல்தான் போகின்றது.
வஹாபிகளின் சி.டி. களை காணாதீர்கள், அவர்களின் பிரச்சாரங்களைச் செவி மடுக்காதீர்கள் என பத்ரிய்யாவில் தடுத்தாலும், சமூக வலைத்தளங்களைத் தடுக்க முடியாது. இதன் விளைவு அண்மைக்காலமாக குறிப்பாக மௌலவி அப்துர் ரஊப் நிரூபிப்பாரா என்ற தொடரின் பின்னர், மௌலவி தரப்பில் தளர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக சிலர் மௌலவியின் கொள்கையிலிருந்து வெளியேறியுள்ளனர். இன்னும் சிலர் பத்ரிய்யாவில் இடம்பெறும் வைபவங்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்தும் வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் அப்துர் ரஊப் மௌவியின் பயான் நிகழ்வுகளுக்கு உலகெங்கிலுமுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்கள் பல விமர்சனங்களையும், இடுகைகளையும் இட்டு வருவதையும் தவிர்க்க முடியாது.
ஓர் அரசியல் பின்புலத்தை நம்பிக்கொண்டு தனது கொள்கையை நிலைநாட்ட முடிந்தாலும், இத்தனை பதவிகளையும், பெயர்களையும் கொண்டுள்ள அப்துர் ரஊப் மௌலவி, தனக்கு எதிராக இடம்பெற்றுவரும் “மௌலவி அப்துர் ரஊப் நிரூபிப்பாரா?” என்ற தொடருக்கு தான் முன்வந்து, பதில் அளிக்காதவரை, இத்தொடரை நிறுத்த முடியாது! சட்ட நடவடிக்கையும்களும் கைகூடப்போவதில்லை (கடந்தகால உண்மைகள்)!!
Published by
![abdur-rauff-misbahi1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/abdur-rauff-misbahi11.jpg?w=150&h=113)

![abdur-rauff-misbahi1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/abdur-rauff-misbahi11.jpg?w=200&h=150)
![Hizbullah[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/hizbullah1.jpg?w=286&h=300)



Leave a comment