சாணக்கியம் பேசும் சாமர்த்தியன்
சமுகத்தின் தலைமையேற்ற சம்யுக்தியன்
ஆகாயம் போயுதிர்ந்த தலைமைக்குப் பின்
ஆதாயம் கண்டுகொண்ட அரும்புத்திரன்.
சமூகத்தின் அவலங்கள் சமூகம்சொல்வான்
சரியான இடம்சென்றால் மௌனம்கொள்வான்
தேர்தல் நெருங்கையிலே இவன் வீரம்
தெருவோர நாய்க்குக் கூட வால்நிமிரும்
விடியலுக்காய் கட்சியொன்று கொண்டுவந்து
கண்ணீரும் செந்நீரும் ஈந்து நின்று
எத்தனையோ தியாகங்கள் செய்த மக்கள்
எலிப்பிழுக்கை கணக்குமில்லை இவனுக்கெல்லாம்
சமுகத்தின் மனவுணர்வு மானம் ஈனம்
சஞ்சலங்கள் சாபங்கள் சலிப்பு கண்டும்
சரியான முடிவெடுக்க சலனப்பட்டே
சாக்கடைக்குள் போய் வீழ்வான் சற்றேபாரும்
முன்செய்த இழிசெயலும் ஏமாற்றும்
பின்வந்து கோப்பெனவே பயமுறுத்தும்
கழண்டுவர காரணங்கள் பலவிருந்தும்
கரையோரம் அரையோரம் கதைகள் சொல்வான்.
இவன் பேசும் ஏமாற்று மக்கள் கண்டார்
இழிசெயல்கள் இவைகளென்று தெளிவுகொண்டார்
இனிப் போதும் இவன் சொல்லும் விளக்கமெல்லாம்
இனியதொரு நாளைக்காய் நாம் இணைவோம்

Leave a comment