அறிமுக போட்டியிலேயே ஹெட்ரிக்: பங்களாதேஷ் பந்துவீச்சாளர் உலக சாதனை!
டாக்கா: பங்களாதேஷ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் தனது முதல் ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். ஸிம்பாப்வே அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய தைஜூல் இஸ்லாம் ஹெட்ரிக் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே ஹெட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் வீரரானார். 22 வயதாகும் தைஜூல் இஸ்லாம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 7 ஓவர்கள் வீசி, 2 ஓட்டமற்ற ஓவர்களையும், 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஸிம்பாப்வே அணி 30 ஓவர் களில் 128 ஓட்டங்களுக்கு சுருண்டது.
தைஜூல் இஸ்லாம்
ஸிம்பாப்வே அணி 26-வது ஓவர் முடிவில் 120-5 என்ற நிலையில் இருந்தது. அப்போது தைஜூல் இஸ்லாம் 27-வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அவர் சாலமன் மைர் என்பவரை அந்த ஓவரின் முதல் பந்தில் எல்.பி செய்தார். அதே ஓவர் கடைசி பந்தில் பன்யாங்கராவை போல்ட் செய்தார். பிறகு 29-வது ஓவரின் முதல் 2 பந்துகளில் நயம்பு மற்றும் சடாரா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹெட்ரிக் சாதனை புரிந்தார்.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஹெட்ரிக் எடுக்கும் 4-வது பங்களாதேஷ் பந்துவீச்சாளர் ஆவார் தைஜூல். இதற்கு முன்பு ‘ஹாதது ஹசைன், அப்துர் ரசாக், மற்றும் ரூபல் ஹூசைன் ஆகியோர் ஒருநாள் போட்டி களில் ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment