அன்புள்ளங்கொண்ட எமது வாசகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் காத்தான்குடி ரஸான்

razanகாத்தான்குடி: சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னால், உங்கள் இணையத் தளத்தில் சுய தொழில் உதவி கோரி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தேன். அதற்கு கிடைக்கப்பெற்ற உதவிகளை வைத்து, என்னை எப்படி வளர்த்துக் கொள்ள முடிந்தது என்ற விபரங்களை எனது ஆசான் மஸாஹிம் அவர்கள் மூலம் விபரித்து, புகைப்படம் மற்றும் வீடியோ இனைப்புடன் இத்துடன் அனுப்பியுள்ளேன். வாசகர்களின் பார்வைக்காக பிரசுரிக்கவும்.

உங்கள் உதவிகளுக்கு – நன்றி
Thanks & Regards
MJM Razan,

Chief Executive Officer,

Razan Graphics.
Contact: (+94) 77 48 44 364 | (+94) 77 34 38 149
www.razangraphics.info | razangraphics@gmail.com

எதையும் சாதிக்கும் இணைய ஊடகங்கள்.. செய்திக்கு பலன்

  • கே.எம்.மஸாஹிம், Chairman, MySoft-2U (Pvt) Ltd.

இணைய ஊடகங்கள் சிலருக்கு உயிர் மட்டுமல்ல, பலருக்கு வாழ்க்கையும் கொடுக்கிறது.

ஆம்.. நாம் அடிக்கடி இணைய ஊடகங்களில் பார்வையிடும் ஒரு செய்திதான், ‘உயிர் காக்க உதவுங்கள் – பாரிய சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்கள்..’

இவ்வாறான ஒரு உதவியிலிருந்து சற்று வித்தியாசமாக ஒரு விண்ணப்பம். அதுதான் ‘விஷேட தேவையுள்ள ஒருவர் சுயதொழிலுக்காக உதவி கோருகிறார்’ என்ற தலைப்புடன் சுமார் ஒருவருடங்களுக்கு முன்னாள், இணைய தளங்களில் பிரசுரமாகியிருந்த ஒரு செய்தி.

றஸான்.. இந்தப் பெயரை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அவரும் உங்களை மறக்கவில்லை அதனால்தான் சுமார் ஒரு வருடங்களின் பின்னால், நீங்கள் கொடுத்த ஊன்றுகோல் எவ்வளவு பலமானது என்பதை உங்களுக்கு காட்ட இன்று உங்கள் முன் மறுபடி நெஞ்சு நிமிர்த்தி வருகின்றார்.

razan

ஆம்.. அவ்வாறு ஒரு சுயதொழிலுக்கான விண்ணப்பத்தை இணைய தளங்களில் இட்டுவிட்டு அவரும் எதிர்பார்த்திருந்தார். அவரது கணக்கில் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் என ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை இட்டு சுமார் 25,000 ரூபாய் சேர்ந்திருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் ஒரு வைத்திய சகோதரர் மலேசியாவில் இருந்து சுமார் 10,000 ரூபாவுக்கான காசோலையை அனுப்பிருந்தார்.

பாடசாலை அதிபர் முதல்கொண்டு பலராலும் புறக்கணிக்கப் பட்டிருந்தாலும், அதுவரை எவரது உதவிகளையும் எதிர்பாராமல், றஸானின் உடல் குறைபாடுகளை ஒரு சுமையாகக் கருதாது, சுகமாகவே சுமந்துவந்த அவரது பெற்றோருக்கு சுமார் ஒருமாதங்கள் போலாகியும் 35,000 மட்டில்தான் சேர்ந்திருந்தது கவலையளித்தது.

றஸான் எதிர்பார்த்தபடி போட்டோகொப்பி, டிசைன் தொழிலை வெறும் 35,000 ரூபாயை வைத்து ஆரம்பிக்க முடியுமா..? ஏன் அவர் உங்களுக்கு சுமையாகிவிட்டாரா..? போன்ற குடும்பத்தாரின் தர்மசங்கடமான கேள்விகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது போன்ற ஒரு இக்கட்டான நிலமையில் அவர்களது மனம் இறைவனிடம் இறைஞ்சியது.

அவர்களது பிரார்த்தனை வீண் போகவில்லை. லண்டனில் இருந்து ஒரு அழைப்பு..

மறுமுனையில் அழைப்பிலிருந்த சகோதரர் பேசினார், ‘றஸான் உங்கள் செய்தியை படித்தேன், மிகவும் கவலையாக இருந்தது. எல்லாம் நன்றாக இருந்தும் சிலர் தொழில் செய்யாமல், பெற்றோருக்கு பாரமாக இருக்கும்போது நீங்கள் உங்கள் குறைபாடுகளை பொருட்படுத்தாமல் சுயதொழிலை ஆரம்பிக்க முன்வந்திருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.. உங்களுக்கு தேவையான ஆகவும் விலைகூடிய பொருள் என்ன..? இரண்டு ‘ஹை கன்பிக்ரேஷன் கம்ப்யூட்டர்’ வேணுமா..?’ என்று கேட்டார்.

அதற்கு றஸான், பக்கத்திலிருக்கு எனது ஆசானோடு பேசுங்கள் அவர் விபரம் சொல்வார் என்று என்னிடம் தந்தார். நான் அவரிடம் சுகநலன்களை விசாரித்து, ‘தற்போதைக்கு அவருக்காக நல்ல கண்டிசனில் செகன்ட்ஹேன்ட் கம்ப்யூட்டர்கள் இரண்டு போதும், ஆனால் மிகப்பெரிய தேவையாக உள்ளது போட்டோகொப்பி மெசின்தான் அதற்கு சுமார் 150,000 போல் தேவைப்படும்’ என்றேன்.

உடனடியாக அவர் சொன்னார், சரி நான் அவருக்காக இன்ஷா அல்லாஹ் 200,000 ரூபா அனுப்புகின்றேன். அவர்கேட்பதை வாங்கி கொடுங்கள் என்றார். அல்ஹம்துலில்லாஹ்.. அவர் சொன்னபடி செய்தார்.

razan (2)

எனவே, மிச்சமுள்ள காசையும் சேர்த்து எல்லாம் மொத்தமாக சுமார் 235,000 உடன் எனது பங்களிப்பாக 15,000 சேர்த்து 250,000 யில் உங்களிடம் றஸான் விண்ணப்பித்திருந்தபடி பதிய போட்டோ கொப்பி மெசின், நல்ல கன்டிசனில் 2 கம்ப்யூட்டர், சிக்கனமான விலைகூடிய பிரின்டர், லெமினேட்டிங் மெசின், கம்ப்யூட்டர் வைப்பதற்கான மேசை, அரைவிலையில் பிட்டிங்ஸ், பேப்பர் போன்ற ஸ்டேசனரி ஐட்டங்களை வாங்கினோம்.

முதற்கட்டமாக, அவர் கணனிக் கல்விகல்விகற்ற MySoft-2U  நிறுவனம் அருகிலேயே, தற்காலிகமாக வாடகைக்கு ஒரு கடையை எடுத்து, ஆரம்பகட்ட ஒழுங்குகளைச் செய்து, இறைவனின் உதவியால் உங்களின் பங்களிப்புகளோடு அவரது தொழிலை ஆரம்பித்தோம்.

இது அவருக்கு கிடைத்த வெற்றியல்ல. இணைய ஊடகங்களுக்கும் அதன் வாசகர்களுக்கும் கிடைத்த வெற்றியே. அதனால்தான், அவரது கைவண்ணத்திலே தயாரான Razan Graphics  என்ற பெயர்பலகையில் உங்கள் பங்களிப்பையும் ஞாபகப்படுத்தி Fund By : Web Community  என்று அவரது நிறுவனம் இயங்கும் காலமெல்லாம் நீங்கள் ஞாபகப்படுத்தப்படுமளவிற்கு செதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, அவருக்கு நீங்கள் செய்த இந்த உதவி அவரை பற்றி அரசாங்க ஊடகத்தில் தேசிய மட்டத்திலும், சமூக ஊடகங்களில் சர்வதேச மட்டத்திலும் பேசவைத்தது. ஆம்.. அவரைப்பற்றி அவர் உங்கள் மூலம் ஆரம்பித்த அந்த தொழிலைப் பற்றி – நேத்ரா தொலைக்காட்சி அதன் யாத்திரை நிகழ்ச்சியில் ஒரு youtube ஆக அவரை அறிமுகம் செய்து வைத்தது.

அதுவும் இணைய சமூகத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றிதான். அவரின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய முழு அறிமுகத்தை வழங்கிய அந்த நிகழ்ச்சியின் லழரவரடிந பதிவேற்றத்தை இங்கே பார்வையிடலாம். அந்த நிகழ்ச்சியிலும், இணைய சமூகத்தின் பங்களிப்பு ஞாபகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வுதவியால், தனக்கு மட்டுமன்றி, தனது உதவியாளர் ஒருவருக்கும் அவரால் தொழில் வழங்க முடிந்தது.

https://www.youtube.com/watch?v=zq98QmMI8EY

மூன்றாம் கட்டமாக தற்காலிகமாக அவரது தொழிலை நடாத்த பெற்றுக்கொண்ட கடையின் வாடகை சுமை காரணமாகவும் வீட்டிலிருந்து வந்துபோவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் அக்கடையை சுமார் 6 மாதங்களில் கொடுத்துவிட்டு வீட்டோடு பெற்றோரின் பங்களிப்புடன் நீங்கள் வழங்கிய மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு தனக்கான தொழிலை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றார். அத்துடன், நான்காம் கட்டமாக அதனுடன் இணைந்த அடிப்படையில் ஒரு புத்தக கடைக்கான ஆரம்பகட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவேஇ இந்த உண்மைச் சம்பவம் இணைய சமூகம் எத்தனை பலமானது..? அதனது ஒவ்வொரு செய்திகளும் உலக அரங்கில் எவ்வாறான பிரதிபலிப்புக்களை உருவாக்குகிறது..? அதனை எவ்வாறு ஆரோக்கியமான ஒரு சமூகவளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் என்பதற்கான ஒரு சிறு உதாரணமே ஆகும். (இந்த வாய்ப்பை உங்கள் சிறு சிறு தேவைக்காக யாரும் துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்)

இதுபோன்ற ஏராளமான நெகிழச் செய்யும் சம்பவங்களை அமைதியாக ஒவ்வொரு இணைய ஊடகமும் ஆங்காங்கே நடாத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

இன்றைய இலங்கை அரசியலில் கூட இணைய ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஆற்றும் பங்களிப்பு மிகப் பெரியது. அமைதிப் புரட்சிகளை உருவாக்கிவரும் இணைய வலையமைப்பில்இ ஒவ்வொரு அச்சு ஊடகங்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

ஒரு ஆரோக்கியமான சமூக கட்டமைப்பில், இணைய ஊடகங்களின் வகிபாகம் உணர்ந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டியதும் வளர்த்தெடுக்க வேண்டியதும் சமூக தலைமைகளின் கடமையாகும் என்று இவ்விடத்தில் நான் பதிவு செய்து கொள்கின்றேன்.

ஊடகங்களால் வெளிக் கொணரப்பட்டும், அதிகார தரப்புகளால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட றஸான் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அவருக்கான உதவிகளை இன மத வேறுபாடு மறந்து பணரீதியாகவோ, ஆலோசனை வடிவிலோ அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும், இணைய ஊடகங்களுக்கும், இறைவனுக்கும் மனமார்ந்த நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன், இது எமது தனிப்பட்ட வெற்றியோ பங்களிப்போ அல்ல என்பதனாலேயே அவருக்கு கிடைக்கப்பெற்ற கொடுப்பனவு விபரங்கள் அடங்கலாக, அதற்கு காரணமாக இருந்த அனைத்து ஊடகங்களுக்கும் தெளிவுபடுத்துவதோடு இணைய வாசகர்களுக்கும் அறிவித்து ஒரு வருடத்தின் பின்னால், நாங்கள் சாதித்தவை என்ன..? என்ற மகிழ்ச்சியோடு எங்களது வெற்றியை உங்களோடு பரிமாறிக் கொள்கின்றோம்.

நீங்கள் றஸானை இன்னமும் ஊக்கப்படுத்த, அவரது வடிவமைப்பில் மிளிர்ந்துள்ள தொழில்நுட்ப இணைய சஞ்சிகையாகிய http://razan-links.blogspot.com என்ற இணைப்பிற்கு சென்று உங்கள் LIKE களையும் போட்டுவிடுங்கள்.

இணைய ஊடகங்களும் அதன் வாசகர்களும் வாழ்க..

Published by

Leave a comment