ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உறுப்பினர்களை உடனடியாக கொழும்புக்கு வருமாரு அழைப்பு!

slmc[1]கொழும்பு: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு மாகாண சபையின் பங்காளிக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் உடனடியாக கொழும்பு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் என மாகாண சபை உறுப்பினரொருவர் தெரிவித்தார். இந்த அழைப்பு கட்சித் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்காகவே அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கொழும்பு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை காலை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும்பாலான கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் கோரமின்மையினால் இன்று மாலை நடைபெறவிருந்த வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு மாகாண சபைத் தவிசாளரால் நாளை காலை 09 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன் செங்கோலை எடுத்துச் செல்வதற்கு முயற்சித்தனர். இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Published by

Leave a comment