கிழக்கு மாகாண சபை வரவு செலவுக் கூட்டம் ஒத்திவைப்பு

141202113548_srilankaeasternprovincedemo_624x351_bbc_nocreditதிருகோணமலை: கிழக்கு மாகாண சபை வரவு – செலவு திட்ட விவாதத்திற்காக இன்று மீண்டும் கூடிய போது தற்போது சபையில் உருவாகியுள்ள நெருக்கடி நிலை காரணமாக சபை அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு முன்பாக ஒன்று கூடி எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட விவாதம் ஏற்கனவே நேற்று தொடக்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்திற்காக சபை இன்று 2ம் நாள் கூடிய போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் 22 பேரில் 12 பேரும் எதிர்கட்சியில் 15 பேரும் வந்திருந்தனர்.

ஆளும் தரப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான இரு அமைச்சர்கள் உட்பட 7 பேரும் ஆளும் தரப்பிலிருந்து தனித்து இயங்குவதற்கு ஏற்கனவே தீர்மானித்துள்ள அகில இலங்கை மக்கள் ( முஸ்லிம்) காங்கிரஸ் உறுப்பினர்கள் 3 பேரும் மற்றும் தேசிய காங்கிரஸ் உறுப்பினரொருவரும் என 11 உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.

இன்று சபை மீண்டும் கூடிய போது மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கா உரையாற்ற தொடங்கி ஒரு சில நிமிடங்களில், விடயத்திற்கு புறம்பாக பேசுவதாக எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்ததையடுத்து சில நிமிடங்கள் கூச்சலும் குழப்பமும் காணப்பட்டது. அவ்வேளையிலே சபையின் தவிசாளரான ஆரியவதி கலப்பதி சபையை ஒத்திவைத்தார்.

சபை ஒத்திவைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான போது எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டன. அவ்வேளையிலும் சபையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

கிழக்கு மாகாண சபையை பொறுத்தவரை தற்போது ஆளும் தரப்புக்குள் நெருக்கடியான நிலையொன்று தோன்றியுள்ள நிலையில் வரவு – செலவுத் திட்டம் கூட நிறைவேற்ற முடியாத நிலை தோன்றியதே சபை அமர்வு ஒத்தி வைப்புக்கான காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

சபை ஒத்தி வைப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ஆரியவதி கலப்பதி சபை இன்று வழமைபோல் கூடிய போது நேற்று சபையில் இடம் பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி இரு தரப்பினரும் பொருத்தமற்ற வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியதாக கூறுகின்றார்.

இதன் காரணமாகவே தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி சபையை தான் ஒத்தி அவைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

141202113548_srilankaeasternprovincedemo_624x351_bbc_nocredit

BBC Tamil

Published by

Leave a comment