கொழும்பு: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் அடங்கலாக 36 அமைப்புகளின் பிரதிநிதிகள் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். ‘நீதியான ஜனநாயக மற்றும் மக்கள் நலன் பேணுகின்ற ஆட்சிக்கான’ பொது மக்கள் நிகழ்ச்சித் திட்டம் உன்ற பெயரில் ஒன்றிணைந்துள்ள கட்சிகளும் அமைப்புகளுமே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரம் மிக்க தற்போதைய ஜனாதிபதி ஆட்சி முறையை 100 நாட்களுக்குள் ஒழித்து மக்களுக்குப் பொறுப்புக்கூறக்கூடிய நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டுவருதல் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளது. காவல்துறை, தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் பொதுச்சேவைகள் சுதந்திரமாக இயங்க வழிசெய்யும் 17-வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மீளவும் உயிரூட்டல், ஜனாதிபதிக்கு அளவற்ற பதவிக் காலங்களைக் கொடுக்கக்கூடிய 18வது திருத்தத்தை இல்லாது ஒழித்தல் ஆகிய விடயங்களும் பொது எதிரணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, விகிதாசார முறையையும் தொகுதிவாரி முறையையும் சேர்த்த பிரதிநிதித்துவ முறை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் பொது எதிரணியின் பிரதிநிதிகள் உடன்பட்டுள்ளனர். கொழும்பு விகாரமாதேவி திறந்தவெளி அரங்கில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுளுவாவே சோபித்த தேரர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உள்ளிட்ட எதிரணித் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் தலைவர்களும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஓர் இடைக்கால ஆட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையிலேயே 36 பிரதிநிதிகளும் இன்று கைச்சாத்திட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
Published by


Leave a comment