கொழும்பு: காலாகாலமாக தேர்தல்கள் வரும்போதெல்லாம் “பாராளுமன்ற ஜனாஸாக்கள்” என அழைக்கப்படும் முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள், முஸ்லிம்களின் உரிமைக்காவவே தாங்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும், ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுவதாகவும் தேர்தல் மேடைகளில் கொக்கரிப்பார்கள்.
அது அந்தக் காலகட்டத்தில் மக்களை மடையர்களாக மாற்றுவதற்கு சில உத்திகள் கைகொடுத்தன. ஆனால் நவீன சமூக வலைத்தள உலகில் அரசியல்வாதிகளின் குட்டுக்கள் அனைத்தும் வெளிக்கொணரப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தைத் தக்க வைப்பதற்காக மில்லியன் கணக்கான ரூபாய்களை கப்பமாக அல்லது அன்பளிப்பாகப் பெற்று, எமது பாராளுமன்ற ஜனாஸாக்கள் முஸ்லிம்களை திசை திருப்ப சந்தர்ப்பம் பார்த்து வந்தபோதும், சமூக வலைத்தளங்களுக்கு மத்தியில் இவர்களின் கூஜாக்கள் எடுபடுவதில்லை.
இந்நாட்டில் அன்று தொடக்கம் அண்மை வரைக்கும் இருந்து வந்த முஸ்லிம்களின் ஹலால் உரிமை பறிக்கப்பட்டமை, வர்த்தக உரிமை எரிக்கப்பட்டமை, வணக்கஸ்தலங்கள் உடைக்கப்பட்டமை, முஸ்லிம்களின் உயிர்கள் காவுகொல்லப்பட்டமை இத்தனை உரிமைகளும் இன்று பறிக்கப்பட்டிருக்கின்றன. அது மாத்திரமன்றி, முஸ்லிம்களுக்கு சவாலாக பர்மா கசாப்புக்கடைக்காரனை இலங்கைக்கு அழைத்து இலங்கை முஸ்லிம்களுக்கு பகிரங்கமாக அவமானப்படுத்தியமை.
உரிமைகளைப் பெற்றுத்தர பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் சுகதேகிகள், இருந்த உரிமைகளையும் அகற்றிவிட்டு 18ம் சரத்துக்கும் வாக்களித்து, மஹிந்தவின் குடும்பத்தை மகிழ்விக்க மாத்திரமே கடந்த 10 வருடங்கள் இவர்களின் பாராளுமன்ற சவகாசம் இருந்து வந்தன.
அழுத்கமை பற்றி எரியும் போது வாய் மூடி மௌனம் காத்ததன் பின்னர் இவர்களின் பச்சோந்தித் தன்மையம், இயலாத்தன்மையும் முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்துவிட்டன.
கடந்த ஊவாத் தேர்தலில் மஹிந்தவின் வேண்டுகோளுக்கிணங்க முஸ்லிம்களின் வாக்கு வங்கியில் குறிவைக்க கிளம்பிய குறிப்பிட்ட இரு அமைச்சர்களும், முஸ்லிம்களின் வாக்குகளால் நையப்புடைக்கப்பட்டிருந்தமை நல்லதொரு எடுத்துக் காட்டாகும்.மக்களுக்கு தேவை ஆட்சி மாற்றமே. இதற்கிடையில் பொதுபல சேனா மைத்திரியை ஆதரிக்கப்போவதாகவும், இதனால் முஸ்லிம் மக்களின் வாக்குகளை திசை திருப்பப் போவதாகவும் வதந்திகள் வந்தாலும், 70 வீதத்துக்கும் மேலான சிங்கள வாக்குகளை வைத்து ஒரு ஜனாதிபதியைத் தீர்மானிக்க முடியாது என்பதை ஆளும் கட்சியும், அரசியல் வல்லுனர்களும் உணர்ந்திருக்கும்போது, எதற்காக அன்று முஸ்லிம்கள் மீது உங்களின் காடைத்தனம் அவிழ்த்துவிடப்பட்டிருந்தது என இன்று கேட்கின்றோம்.
முஸ்லிமின் ஒவ்வொரு வாக்கும் மிகப் பிரதானமான மாற்றத்தை இன்ஷா அல்லா இந்நாட்டில் ஏற்படுத்தும். எனவே, சொத்து சுகபோக அரசியல் நரிகளின் வாய்ப்பேச்சை நம்பி, காது தாழ்த்தி மீண்டும் மடையர்களாக இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் தயாரில்லை. முஸ்லிம் ஒற்றுமைக்கு அழுத்கமை தாக்குதலைக் கண்டித்து அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளின் மத்தியில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஹர்த்தாலும் இலங்கை முஸ்லிம்களின் நல்லதோர் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துக்காட்டியது.
இவர்கள் அரசாங்கத்திடம் வாங்கிய பண, சொத்து விசுவாசத்திற்காக அவர்களின் குரல்கள் இறுதிவரை ஒலிக்கலாம். ஆனால் மக்களின் வாக்குகள் இவர்களை ஒழிக்கப்போகின்றன.
உரிமை பற்றி இவர்கள் மீண்டும் பேசினால், உரிமை என்றால் என்ன? எந்த உரிமைகளைப் பெற்றுத் தரப் போகிறீர்கள்? உங்களது கடந்த 10 வருட ஆட்சிக்காலத்தில் இழந்த உரிமைகளுக்கு உங்களின் பதில் என்ன? என இலங்கை முஸ்லிம்கள் கேட்கப் போகின்றார்கள் இன்ஷா அல்லாஹ்!
Published by





Leave a comment