கொழும்பு: இலங்கையின் அரசியல் களம் எதிர்வரும் ஏழு வாரங்களுக்கு மிகவும் உஷ்னப்பட்டதாகவே இருக்கப்போகிறது. கட்சித் தாவல்களும் காசுப் பரிமாறல்களும் மிக தீவிரமாக நடந்தேற இருக்கின்றன. அரசியல் என்பது மக்கள் பணி என்பதிலிருந்து பணம் கொழிக்கும் இலாபகரமான வர்த்தகமாக மாற்றப் பட்டிருக்கின்ற இந்த சூழலில் பல அரசியல் வியாபாரிகள் பெரும் கோடீஸ்வரர்களாக தம்மை நிலை நிறுத்திக்கொள்ள தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.
சிறுபான்மை வாக்களனைப் பொறுத்த அளவில் தனக்குப் பிடித்தவருக்கு வாக்களித்தல், தான் அதரவளிக்கும் அரசியல் தலைவருக்குப் பிடித்தவருக்கு வாக்களித்தல் என்ற உணர்ச்சிவசப்பட்ட வாக்களித்தலையும் தாண்டி, அவனது உணர்வுகள் குறிப்பிட்ட ஆட்சியாளனின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுகின்ற மனப் பதிவுகள் மனக் கிலேசங்கள் என்பனவற்றின் பிரதிபலிப்பாக வெளிப்படுவதும் உண்டு. இந்த வெளிப்பாடிற்கு விழிப்புணர்வும் கொஞ்சம் சிந்தித்து செயற்பட வேண்டிய தேவையும் உள்ளது.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அதிலும் குறிப்பாக கிழக்கில் ஊருக்கு ஒரு குறு நிலமன்னராக கோலோட்சிவரும் பசீர் சேகுதாவூத், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் போன்ற பலர் தமக்கான வாக்குத் தளத்தை வைத்துக் கொண்டு தமது அரசியல் வியாபாரத்தை கனகட்சிதமாக இதுகாலவரை நடாத்தி வருகின்றனர். இவர்கள் எல்லோரும் அரசின் அடிவருடிகளாக இருப்பதால் இம்முறை அரசியல்வியாபாரத்தில் காசு பார்ப்பது கொஞ்சம் காரிய சாத்தியமற்றதாகவே இவர்களுக்கு இருக்கும், ஆயினும் குத்துக் காரணங்களும் எதிர்பார்க்கமுடியாதவை அல்ல.
இவ்வாறான ஒரு சூழலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முஸ்லிம் சமுகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இனவாத அரசியலை தந்திரோபாயமாக பாவித்து அரசியல் நடத்திவரும் யுக்தியை ஜனாதிபதி மகிந்தவின் அரசு தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறது. இனவாதிகளுக்கு ஒரு முகமும் சிறுபான்மையினருக்கு ஒரு முகமும் என நாடகமாடி தமது ஆட்சிக் கதிரையை ஸ்திரப்படுத்திக் கொண்டு வந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி மகிந்தவின் முஸ்லிம் அரசியல் தரகர்கள் சிறந்த முறையல் கை கொடுத்தே வந்துள்ளனர்.
முஸ்லிம் சமுகம் இனவாதத்தின் கொடும் அட்டூழியங்களை பேருவளையிலும் தர்கா நகரிலும் களுத்துறையிலும் அனுபவித்துக் கொண்டிருந்த போது தத்துவங்களோடும் அறிக்கைகளோடும் தமது அரசியல் பணியினை முடித்துக் கொண்ட இந்த முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள். முஸ்லிம் சமுகத்தின் கண்ணீரை விட மகிந்த அரசுக்கு சங்கடம் ஏற்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர் இந்த கருத்தினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் பகிரங்கமாகவே வெளியிட்டார். முஸ்லிம் சமுகத்தின் அநியாயங்களை பெரும்பான்மை சமுகம் பொறுத்துக்கொண்டிருப்பது போல் பெரும்பான்மை சமுகத்தின் சிறிய எதிர்ப்புணர்வை முஸ்லிம் சமுகம் அலட்டிக் கொள்ளக் கொடாது என ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு ஆலோசனை சொன்னார். ஆயினும் முஸ்லிம் சமுகம் தன்னை சுதாகரித்துக்கொண்டு பொறுமை காத்தது. அரசியல் தலைமைகள் எப்படிப் போனாலும் மிகுந்த கரிசனையோடும் இறை நம்பிக்கையோடும் தன்னிலை அறிந்து செயற்பட்டது. சமுகமும் அதன் சிவில் தலைமைத் துவங்களும் மிகவும் நிதானமாக நடந்து கொண்டன.
இந்த வடுக்கள் ஆறுமுன்னமேயே இப்போது ஜனாதிபத்தி தேர்தல் அறிவிக்கப்பட்டு இலங்கையின் அரசியல் களத்தில் பெரும் அதிர்வுகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. எதிர்பாராத திருப்பங்களால் அரசு அதிர்ச்சியுற்றிருப்பதை அரசின் நடவடிக்கைகளும் பேச்சுக்களும் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன. இந்த சூழலில் முஸ்லிம்களைப் பிரதி நிதித்துவப் படுத்துவதாக பீற்றிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் தடுமாறி நிற்கிறது. கடந்த 23 ம் தேதிய கூட்டமும் எந்த முடிவும் எட்டப்படாமல் கலைந்து சென்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எமது பிரதிநிதிகளான கோடீஸ்வர அமைச்சர்கள் தமது சுய நல அபிலாசைகளுக்கு சமூக சாயம் பூசுவதில் கவனாமக் இருந்துள்ளனர். எந்த முறையிலாவது மகிந்த அரியாசனத்தைக் கைப்பற்றுவார் என்கின்ற நம்பிக்கையினை உறுப்பினர்களுக்குள் விதைப்பதில் சிலர் மிக கவனாமக இருந்துள்ளனர். கட்சியின் முடிவினைத் தாண்டியும் தமது சுய இலாபத்திற்காக முடிவுகளை எடுப்பதற்கு சிலர் தயார் நிலையில் இருந்ததனை கூட்டத்தில் கலந்துகொண்டோர் உணராமலில்லை.
நாட்டின் கள நிலவர மாற்றத்தைக் கருத்தில் கொண்டே சில இறுதிநேர முடிவுகளுக்கு கட்சி வரக்கூடும், ஆயினும் தற்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழல் இனவாத அரசியலைத் தாண்டி தேசியவாத இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசுதல் என்கின்ற பூச்சாண்டிகள் எடுபட வாய்ப்பில்லை, இதற்கான முன்னெச்சரிக்கையினை அரசியல் முறைமை மாற்றம் ஒன்று இந்த நாட்டில் நிகழவேண்டும் என்ற கருத்தினை முன்னிறுத்திப் போராடி அதில் வெற்றியும் பெற்றுள்ள மாதுலுவாவ சோபித தேரர் அவர்கள் கடும் தொணியில் இனவாத சிறுபான்மைக் கட்சிகளுக்கு எச்சரித்துள்ளார். எனவே அரசியல் மாற்றத்திற்காக தேசியம் சார்ந்த அரசியல் போராட்டத்தில் இணைந்து தியாகம் புரியுமளவிற்கு சமூகத்தினை ஏய்த்து அரசியல் பிழைப்பு நடாத்திவரும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஓரணியாக முன்வருவார்களா என்பது சந்தேகமே!
அமைச்சர் ரிஷர்டைப் பொறுத்த அளவில் தேசிய முஸ்லிம் அரசியலை விட தனது பிரதேச அபிவிருத்தி அரசியல் மற்றும் தனது வர்த்தக நடவடிக்கைகள் சார்ந்த நன்மைகளை நோக்கியதாகவே அவரது அரசியல் நகர்வுகள் இருக்கும். எனவே கட்சிக் கூட்டம் இறுதி முடிவு, அது இது என்று பொது மக்களுக்கு அறிக்கைகள் விட்டாலும் பசில் ராஜ பக்சவின் செல்லப் பிள்ளையான அவர் மகிந்த தரப்பைத் தாண்டி ஒரு அங்குலம் கூட நகர மாட்டார் என்பது திண்ணம். இந்த கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஹிஸ்புல்லா அவர்களும் மக்களைக் குழப்பும் அறிக்கைகள் விட்டாலும் அவரது கட்சி தாவும் தொடர் நடவடிக்கைகளால் அவரது கட்சிக்குள்ளேயே செல்வாக்கற்றவராகவே காணப் படுகிறார். எனவே இவரால் எந்த மாற்றத்திற்காகவும் குரல் ஒடுக்க முடியாது.
இந்த இரு முஸ்லிம் தரப்பும் மகிந்த அவர்களுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் இனத்துவேசம் பேசி, அரசின் நிழல் இனவாத அலகாக செயற்பட்டுவரும் பொது பல சேனா அமைப்பு அரசின் கட்டளைக்கு அமைவாக தற்போது மௌனமாக இருந்தாலும் பெரும் பாலும் மிருதுவாக்கப் பட்ட துவேச அரசியல் பிரச்சாரத்தோடு அரசுக்கு சார்பாக களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொது பல சேனா என்பன ஒரே மேடையில் அமர்ந்து பிரச்சாரம் செய்யும் கண் கொள்ளாக் காட்சிகளையும் நாம் காணக் கிடைக்கலாம்.ஆயினும் ஆரம்பத்திலிருந்து இந்த நகர்வுகளில் அதீத அக்கறையோடு செயற்பட்டு வருகின்ற நாலாட்சிக்கான் தேசிய முன்னனி என்கின்ற நல்லாட்சிக் கோட்பாடுகளை முன்னிறுத்திய முஸ்லிம் அரசியல் அமைப்பு முஸ்லிம்களுக்கான மாற்று அரசியல் சக்தியாக தம்மை நிலை நிறுத்திக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளும். இதற்கான ஆரம்பப் படிகளை கடந்த ஊவா மாகான சபைத் தேர்தலில் இந்த அமைப்பு நிருபித்திருந்தத்து. இது அரசுக்கு எதிரான உணர்வலைகளோடு இருக்கும் பெரும் பான்மை முஸ்லிம்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தகமில்லை.
எனினும் செப்டம்பர் மாதம் எழுதப்பட்ட “ஜனாதிபதித் தேர்தலும், முஸ்லிம் அரசியலும்” (பகுதி I) எனும் எமது முன்னைய கட்டுரையல் குரறிப்பிட்டிருந்தது போல பெரும்பான்மை வாக்குகள் சரிசமமாகப் பகிரப் பட்டாலும் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப் பட்டாலும், தமிழ் சமூக வாக்குகள் மிக காத்திரமான தீர்மானிக்கும் சக்தியாக இந்த தேர்தலில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Published by

Leave a comment