காத்தான்குடி: நாட்டின் ஜனாதிபதியின் பிறந்த தினத்தை வருடாந்தம் காத்தான்குடி பள்ளிவாயல்களில் கொண்டாடி வருவது வாடிக்கையாகிவிட்டது. இஸ்லாத்தைக் கற்று, போதிக்க வேண்டிய உலமாக்களே, பள்ளிவாயலில் அமர்ந்து ஓர் மனிதனின் பிறந்த நாளுக்கு பிரார்த்திக்கும் நிகழ்வு நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடியில் நிகழ்ந்துவருவது வெளிப்படையானது.
காத்தான்குடியில் சுமார் 2000ம் ஆண்டிற்குப் பின்னர், அரசியல் ஊடுருவலில் உலமாக்கள் தங்களது இஸ்லாமியப் போதனைகளை சுயமாக மேற்கொள்வதற்கு முடியாமல் இருக்கின்றனர்.
இஸ்லாம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, அரசியல் காத்தான்குடியில் முதற்படிக்கு நின்று ‘பேயாட்டம்’ ஆடிக்கொண்டிருக்கின்றது. அன்று மிம்பர்களில் முழங்கிய உலமாக்கள் இன்று வாய் மூடி மௌனித்து, அரசியலுக்காக கூஜா தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இதனால்தான் பிறந்த நாள், இசை, நடனம், வட்டி வங்கிகளுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அத்தனைக்கும் உலமாக்கள் முன்வரிசைகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதுமாத்திரமன்றி, வட்டி நிறுவனங்கள் தைரியமாக இஸ்லாமிய பூமிக்குள் காலடிவைத்து, வட்டியை காலூன்றிவிட்டு செல்கின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம், தாயை மம்மி என்றும், தந்தையை டடா என்றும் அழைப்பதை யூத நஸாராக்களின் வழிமுறைகள் என அன்று மிம்பர்களில் கண்டித்துவந்த எமது உலமாக்கள், இன்று அவர்களின் கைகளாலேயே பிறந்த தினத்துக்கு ஆசிவேண்டி பிராத்திக்கும் அவமானம் காத்தான்குடியில் நிகழ்ந்திருப்பது வேதனையானது.
அரசியல் எதைச் சொன்னாலும் தலைசாய்க்கும் இன்றைய உலமாக்கள், சத்தியத்தைப் போதிப்பதிலும், அவற்றைத் தடுப்பதிலும் பாராமுகமாக இருக்கின்றனர. உண்மையைச் சொல்லப்போனால் உலமாக்கள் மரணித்துவிட்டனர்!
அரசியல்வாதியின் கோரிக்கைக்கு தலைசாய்ப்பதை தவிர்த்து, இத்தகைய பிறந்த நாட்கள் நிகழ்வுகள் இஸ்லாத்தில் இல்லை எனவும், நீங்கள் உங்கள் தலைவரைத் திருப்திப்படுத்த வேண்டுமாயின் பள்ளிவாயலைப் பயன்படுத்தாமல் உங்களது அலுவலகத்தைப் பயன்படுத்துங்கள் என எடுத்துக் கூறவேண்டியிருக்க வேண்டிய உலமாக்கள் இன்று மரணித்துவிடுகின்றனர்.
தப்லீஹ் பள்ளியில் ஒரு பயான் நிகழ்த்த தௌஹீத் காரனுக்கு இடமில்லை. தௌஹீத் பள்ளியில் மஹல்லா வேலை செய்ய தப்லீஹ் காரனுக்கு அனுமதியில்லை. ஆனால் அரசியல்வாதி நினைத்தால் எந்தப்பள்ளியிலும் தான் நாடியதை சாதித்துவிட்டுப்போகும் ஓர் மடைமை சமூகமாக நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடியின் பரிதாப நிலை இன்றிருக்கின்றது.
தஃவா இயக்கங்கள் பல அரபிப் பணத்துக்கு அடிமையாகி அரசியல் சாக்கடைக்குள் மூழ்கிவிட்டனர். இதனால் யார் எதைச் செய்தாலும் செய்துவிட்டுப் போகட்டும். அரசியல்வாதியைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற முனாபிக் தனத்தில் காத்தான்குடி தஃவாத் தளங்கள் இருக்கின்றன.
இத்தகைய நயவஞ்சகக் கொள்கை எதிர்கால காத்தான்குடிக்கு வரவிருக்கும் அன்னிய கலாசார ஊடுறுவல்களை ஒருபோதும் தடுக்கப்போவதில்லை என்ற வேதனையுடன் விடைபெறுகிறேன்.
Published by



Leave a reply to Issadeen Cancel reply