காத்தான்குடி: இஸ்லாத்திற்கு விரோதமான ஷீஆ சிந்தனைகளை நமதூரில் பரப்பப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் பின்னணியில் அரசியல் பின்புலம் கொண்ட சிலர் தொழிற்படுவதாகவும் தெரிவிக்கும் கருத்துக்களும், விமர்சனங்களும் கடந்த இரண்டுவார காலமாக தீவிரமடைந்து வருகின்றன.
இந்த சந்தர்ப்பத்தை தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளமுனையும் சிலர், இந்த விமர்சனங்களை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு (PMGG) எதிராக திசை திருப்பி, அபாண்டங்களை சுமத்தி எமது பொது மக்களையும் குறிப்பாக தௌஹீத் சமூகத்தையும் பிழையாக வழிநடாத்த முயற்சிப்பதனை எமது சூறாசபை கவலையுடன் நோக்குகின்றது.
எமது பிரதேசத்தில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் PMGGயானது மார்க்க விடயங்களிலும், சமூக ஒழுக்க விவகாரங்களிலும் எவ்வாறான வரையறைகளையும் கட்டுக்கோப்புகளையும் பின்பற்றி வருகிறது என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
அதேபோன்று, ஏனைய அரசியல் தரப்புகள் தமது அற்ப அரசியல் இலாபங்களுக்காக எமது பகுதிகளில் எவ்வாறு மார்க் விரோத குழுக்களை பகிரங்கமாகவே வளர்த்து வருகிறார்கள் என்பதும் எமது உலமாக்களும் புத்தி ஜீவிகளும், இளைஞர்களும், தௌஹீத் சமூகமும் ஏனைய அத்தனைபேரும் அறிந்த விடயமாகும்.
கடந்த 8 வருடங்களில் எமது பிரதேசத்தில் பல தேர்தல்களை எதிர் கொண்ட PMGG எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மார்க்க மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது தமது தேவைக்காக மார்க்க விரோத கொள்கைகளை கொண்டோருடன் கூட்டுச்சேர்ந்து அவர்களை வளர்ப்பதற்கு எத்தனிக்கவோ இல்லையென்பதனை அத்தனைபேருமே அறிவர்.
எனவே, ஷீஆ உள்ளிட்ட எந்தவொரு மார்க்க விரோத சிந்தனைகளும் வளர்க்கப்படுவதற்கு PMGG ஒரு போதும் துணை போகவுமில்லை துணை போகவுமாட்டாது என்ற உறுதிமொழியினை மீண்டுமொருமுறை PMGGயின் சூறாசபை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.
மேலும், சூறாசபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் எவரும் இது போன்ற மார்க்க விரோத கொள்கைகளை கொண்டவராகவோ அல்லது அதனை வளர்ப்பவராகவோ நாம் அறிந்த வரையில் இல்லையென்பதனையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், PMGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் எவரும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதனை ஆதார பூர்வமாக எவரும் தெரியப்படுத்தினால் அதுதொடர்பில் உரிய நடவடிக்கைகளை PMGG மேற்கொள்ளும் என்பதனையும் சூறா சபை உறுதியளிக்க விரும்புகின்றது.
அத்தோடு, தஃவா அமைப்புக்கள் மற்றும் உலமாக்களை மிக விரைவில் சந்தித்து இது தொடர்பான தெளிவுகளை வழங்குவதற்கும் PMGG தீர்மானித்துள்ளது.
எமது முஸ்லிம் சமூகத்தில் மார்க்க மற்றும் சமூக விரோத சிந்தனைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு அந்தத் தீமைகளை அடையாளப்படுத்துவதும், அவற்றைப் பரப்புவோரைக் கண்டிப்பதும் அவ்வாறான தீமைகளிலிருந்தும் அவற்றைப் பரப்புவோரிடமிருந்தும் மக்களைப் பாதுகாப்பதும் நமது உலமாசபையினதும் தஃவா அமைப்புக்களினதம் உலமாக்களினதும் தலையாய பொறுப்பாகும். அந்த வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.
அதேவேளை, நம் சமூகத்தில் மிகவும் மங்கிப்போயிருந்த தீமைகளும் மார்க்க விரோத கொள்கைகளும் இன்று பெரிய விருட்சங்களாக வளர்வதற்கு பகிரங்கமாக துணை நின்ற அரசியல் வாதிகள் யார் என்பது நமக்குத் தெரியும். மேலும் இவ்வாறான தீமைகளைப் பரப்பு வோருக்கு சமூக அந்தஸ்த்தினையும், அரசியல் அதிகாரங்களையும் பெற்றுக் கொடுத்த அரசியல்வாதிகள் யார் என்பதும் நமக்குத் தெரியும்.
இருந்தாலும்இ உரியவர்களால் அவர்கள் நேரடியாக அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்படவோ அல்லது அவர்களின் நடவடிக்கைகள் சமூகத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டு தடுக்கப்படவோ அல்லது அவை உரிய முறையில் உரிய நேரத்தில் கண்டிக்கப்படவோ போதுமான காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனையும் இங்கு வேதனையுடன் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அவ்வாறன உரிய நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்குமேயானால் இன்று சமூகத்தில் அரசியல் வாதிகளால் வளர்க்கப்பட்டிருக்கும் பல தீமைகளிலிருந்து நம் சமூகத்தைப் பாதுகாத்திருக்க முடியும் என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.
மேலும், ‘நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்’ எனும் நமது அடிப்படைக் கடமையை மேற்கொள்ளும்போது நாம் பாரபட்சமின்றியும் நீதியாகவும் தர்மம் தவறாமலும் நடந்து கொள்ள வேண்டும். மார்க்க விரோத சிந்தனைகளோ சமூக விரோத நடவடிக்கைகளோ சமூகத்தில் காணப்படும்போது அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் எந்த அந்தஸ்த்தில் அல்லது எந்த அதிகாரத்தில் இருந்த போதிலும் கூட அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்த வகையில் துணிச்சலோடும் காத்திரமாகவும் மேற்கொள்ள வேண்டும்.
அந்த வகையில், ஒரு தீமையினை அல்லது மார்க்க விரோத நடவடிக்கையினை அதிகார பலம் கொண்டவர்கள் செய்யும் போது கண்டும் காணாதது போல அல்லது மிதமாக நடந்து கொள்வதானது இஸ்லாத்தின் அடிப்படைக்கு விரோதமானது என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும், இஸ்லாமிய தஃவா பிரச்சரத்தில் ஈடு படும் நாம் வெறும் சந்தேகங்கள் அனுமானங்கள் அடிப்படையில் கருத்துக்களை முன் வைப்பது தொடர்பிலும் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் பின் வரும் இறை வசனத்தையும், நபி மொழியையும் நினைவு படுத்துவது பொருத்தமாகும்.
‘ விசுவாசிகளே..! அதிகமாக சந்தேகங்களை நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். சில சந்தேகங்கள் பாவமாகும்.’ 49:12
‘உங்களை நான் சந்தேகத்தை விட்டும் எச்சரிக்கிறேன். சுந்தேகம் என்பது பேச்சுக்களில் மிகப் பொய்யானதாகும்.’ நபிகள் நாயகம், ஆதாரம் – சஹீஹூல் புகாரி, அறிவிப்பாளர் – அபூகுறைரா.இறுதியாக, மார்க்க மற்றும் சமூகப் பணிகளில் நாம் ஈடுபடும் போது நமது நேர்மையினையும் உளத் தூய்மையினையும் மக்கள் முன்னிலையில் அன்றி இறைவன் முன்னிலையிலேயே நிரூபிக்க வேண்டியது நமது கடமையென்பதை மறந்து விடக்கூடாது.
எனவே நமது சமூகம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற வேண்டும் என்ற உயர்ந்த தூய எண்ணத்துடன் செயற்படுகின்ற தஃவா அமைப்புக்கள் உலமாக்கள் சமூக நிறுவனங்கள், அரசியல் அமைப்புகள் ஆகிய நாம் அத்தனை பேருமே மேற்சொன்ன இஸ்லாமிய அடிப்படை நியமங்களை கண்டிப்பாக பின்பற்றுவோமேயானானல் நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை விரைவிலேயே கண்டு கொண்டு கொள்ள முடியம். அத்தோடு, நமது எண்ணங்களுக்கும் நடவடிக்கைகளுக்குமான நிறைவான கூலி இம்மையிலும் மறுமையிலும் நிச்சயம் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்!
நம் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் சத்தியத்தின் பாதையில் இறுதிவரை நிலைத்திருக்கச் செய்வானாக…
சூறாசபை,
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்,
காத்தான்குடி.
17.11.2014
Published by
![PMGG-Logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/pmgg-logo1.jpg?w=150&h=90)
Leave a comment