கூடவிருந்து கொல்லும் நீரிழிவு நோய்

rifasடாக்டர்: I.L.M. றிபாஸ் MBBS, MSc, MD (Reading at PGIM Colombo)

நவம்பர் மாதம் நீரிழிவு நோய்க்குரிய மாதமாக அந்த நோய் பற்றிய விளிப்புனர்வுக்குரிய மாதமாக உலகில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 14 ம் திகதியை உலக நீரிழிவு வியாதிக்கான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலக நாடுகளின் சுகாதார திணைக்களங்களும் வைத்திய துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்த தினத்தில் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வினை தூண்டி வருவதுடன்

இவ்வியாதியினை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த அடிப்படியில் எமது வாசகர்களுக்கும் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வை தூண்டும் முகமாக இக்கட்டுரைத் தொடர் வரையப்படுகிறது.

நீரிழிவு நோய் குறித்த சரியான புரிதல் மற்றும் அணுகுமுறை எம்மிடம் உருவாகிவருகிறதா என்பது குறித்தும், நீரிழிவு நோய் தோற்றுவித்திருக்கும் சுகாதார பொருளாதார சிக்கல்கள் குறித்தும் கூடவிருந்து கொல்லும் நீரிழிவு நோய் என்கிற இந்த தொடரின் அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கலாம். பெரும்பான்மை மக்களை பாதிக்கத்துவங்கியிருக்கும் இந்த இனிப்பு நோயின் கசப்பு உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

நீரிழிவு நோய் உலக அளவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் தொகையினை பாதித்து வருகிறது. வயது வந்தவர்களில் சுமார் நான்கில் ஒருவர் சீனி நோயாளி எனும் அளவிற்கு இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது அத்தோடு எமது நாட்டைப் பொறுத்தவரை சுமார் 20 மூ ஆனா அதாவது ஐந்தில் ஒரு நபர் சீனி வியாதியின் தாக்கத்திட்கு உட்பட்டவராகவே இருக்கிறார் என்கின்ற கசப்பான தகவல் எமது சுகாதார நிலை தொடர்பான அதிரச்சித்தகவலாக உள்ளது அத்துடன் எமது அண்டை நாடான இந்தியா உலக அளவில் சீனி நோயின் தலைமையகமாக மாறியிருக்கிறது. உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளார்கள் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் சுமார் நான்கறை கோடி இந்தியர்கள் சீனி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

dia

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் எமது ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுவதாக மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. பெருகிவரும் இந்த சுகாதார நெருக்கடி குறித்து நாம் அறிந்து கொள்ளாமல் அது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வாளாவிருப்பது எம்மையும் எமது சந்ததியினரையும் ஒரு ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடுவதோடு தரமற்ற பலகீனப்பட்ட ஒரு வாழ்க்கை நோக்கியே எம்மை இட்டுச்செல்லும்.

பொதுவாகவே வசதிபடைத்த நகர்புறவாசிகளின் நோயாக பார்க்கப்படும் சீனி நோய், இன்று இலங்கையின் கிராமப் புறங்களிலும் வேகமாக அதிகரித்துவருவதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இதேவேளை, இளைய தலைமுறை இலங்கையர்களிடம் பெருகிவரும் ஒபிசிடி எனப்படும் உடல் பருமன் என்பது எதிர்காலத்தில் நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்று எதிர்வு கூறுகிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.

எபிடெமிக் என்கிற ஆங்கில வார்த்தைய, இதுவரை நாம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிற ஒரு தொற்றுநோயாக குறிப்பிட்டு வந்திருக்கிறோம். சீனி நோயானது தொற்றுநோயைப் போல வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லஇ சீனி நோய் என்பது குறிப்பிட்ட குடும்பங்கள், சமூகம், மக்கள் தொகையில் ஒருவிதமான தொடர் தொற்றாக உருவாகியிருப்பதையும் நாம் காண்கிறோம் என்கிறார் உலக நீரிழிவுநோய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் பியர் லெபெர் ஒருவருக்கு சீனி நோய் வந்து விட்டால் அவர், தனது வாழ்நாள் முழுமையும் மருந்து மாத்திரைகளை சார்ந்தே உயிர் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார். இந்த மருந்து மாத்திரைகளை சார்ந்து வாழும் நிலைமை என்பது சீனி நோயாளிகளுக்கும் அவர் தம் குடும்பங்களுக்கும் மிகப்பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது.

பதிவு செய்யப்பட்ட மனித வரலாற்றில் சீனி நோய் குறித்து சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் அறியப்பட்டிருந்ததற்கான பதிவுகள் இருக்கின்றன.

கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சுஷ்ருதா என்கிற இந்திய மருத்துவர் இந்த சீனி நோய் குறித்த குறிப்பை பதிவு செய்திருக்கிறார்.

இதற்கான வலுவான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டில் தான் உருவானது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம் என்று கண்டறிந்தனர்.

அதுவரைஇ நீரிழிவு நோய் என்பது மருத்துவ சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியாத நோயாகவே மனிதர்களை அச்சுறுத்திவந்தது.

இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெரிக் பேண்டிங்கின் நினைவை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் மூலம் சீனி நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சர்வதேச பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், ஐநா மன்றம் இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடியாள சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐநா மன்றம் இப்படி தனியான ஒரு சின்னத்தை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐநா மன்றம் குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

மனித உடம்பின் அத்தியாவசியத்தேவைகளில் ஒன்று சீனி (குளுகோஸ்). நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சீனி (குளூக்கோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்து மனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சீனிஇ சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் சதையி ((Pancreas) (நமது வழக்கில் பல்லுக்கிட்டி என்று இறைச்சிக் கடையில் வாங்கும் சுவையான பகுதி) என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹோமோனை சுரக்க வேண்டும். இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் குளுகோஸை சக்தியாக மாற்றும்.

சதையி இல் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்றுபோனாலோஇ மனிதனின் ரத்தத்தில் இருக்கும் குளுகோஸ் அப்படியே தேங்கிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் குளுகோசின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான் சீனி நோய் என்று அறியப்படுகிறது.

சீனி நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை அவரின் ரத்தத்தில் இருக்கும் சீனியின் அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.

ஒருவர் உணவு சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில்இ நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் எழுபது மில்லிகிராம் முதல் நூற்றி பத்து மில்லிகிராம் சீனி வரை (குளுகோஸ்) இருக்கும். அதே நபருக்கு சாப்பிட்ட பிறகு, அவருடைய ரத்தத்தில் நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி அறுபது மில்லிகிராம் வரை சீனி (குளுகோஸ்) காணப்படும். இந்த அளவுக்கு மேல் ஒருவரின் ரத்தத்தில் சீனி (குளுகோஸ்) காணப்பட்டால் அவருக்கு சீனி நோய் வந்திருப்பதாக கருதப்படும்.

எனவே சீனி நோய் பற்றி நாம் இன்னும் விரிவாக அறிந்து வரும் முன் காக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது அவ்வியாதி எம்மை ஆட்கொண்டு விட்டால் அதன் பாரதூரமான விளைவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் நமது வாழ்வொழுங்கினை சீரமைத்துக் கொள்வதிலோ கவனக் குறைவாக இருந்து விடக் கூடாது என்பது எமது ஆலோசனையாகும்.

சீனி நோய் மற்றும் அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு குறித்தும், இதற்கு டயபடிஸ் மெலிடஸ் என்கிற பெயர் வந்தது குறித்தும், சீனி நோய் என்பது என்ன என்பது குறித்தும் இன்னுமொரு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Published by

Leave a comment