மன்னார் : இலங்கையின் நிர்வாக சேவையில் தமக்கென தனியானதொரு இடத்தை பிடித்து இலங்கை முஸ்லிம்களுக்கு அளப்பறிய பணிகளை செய்து வந்த நிலையில் நேற்று இரவு இறையடியெய்திய அல்-ஹாஜ். யு.எல்.எம். ஹால்தீன் சேர் அவர்களின் மறைவு குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், அன்னாரின் சுவன வாழ்வுக்காக தாம் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள முசலி பிரதேச சபையின் தலைவர் தேசமான்ய எஹியான், அன்னாரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசமான்ய எஹியான் மேலும் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
மர்ஹூன் ஹால்தீன் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்திருந்த ஒரு பொக்கிஷமாகும். அவரது பணிகளை எமது கட்சியின் தேசிய தலைவரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமாக இருந்துவருகின்றன அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் வைத்திருந்த மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளராக இருந்த போது கண்டிருக்கின்றேன். மக்களுக்கு பணியாற்றுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.
அமைச்சு செயலாளர் பதவியில் இருக்கின்ற போதும் மிகவும் எளிமையாக எல்லோரிடமும் நெருக்கமாக, பண்பாக பழகக் கூடிய ஒருவராக இருந்துள்ளதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். அதே போல் நான் முசலி பிரதேச சபையின் தவிசாளராக பதவியேற்றது தொடக்கம் இன்று வரை இந்த பிரதேச அனைத்து மக்களின் மேம்பாடுகளுக்காக எம்மால் முன் வைக்கப்படும் வேண்டுகோள்களை வடமாகாண சபையின் விவசாய, கால் நடை அமைச்சின் செயலாளராக இருந்து ஏற்று அதனை நடை முறைப்படுத்துவதற்கு தேவையான உதவிகளை செய்ததையும் நன்றியுடன் நினைவு கூற வேண்டியுள்ளது.
நல்ல பண்புகளையும், குணாதிசயங்களையும் கொண்ட எமது சகோதரரை நாம் இழந்துள்ளோம். அன்னாரின் ஜன்னத்துல் பிர்தெளஸ் என்னும் உயர் சுவனம் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகவும் இந்த அறிக்கையில் முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய எஹியான் குறிப்பிட்டுள்ளார்.
Published by

Leave a comment