மொசூல்: ஐ.எஸ். இஸில் மற்றும் இஸிஸ் ஆகிய பெயர்களையுடைய சிரியா-ஈராக் இணைந்த இஸ்லாமிய தேசத்தின் தலைவரான (ஹலீபா) அப்துல்லாஹ் பக்தாதி, தற்பொழுது அமெரிக்க கூட்டுப்படைகளின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என ஊர்ஜிதமற்ற செய்தி கசிந்து வருகிறது.
அண்மைய நாட்களாக ஈராக்கின் புராதன நகரமும் இஸ்லாமிய தேசத்தின் (ஈராக்) நிர்வாக பிரதேசமாகவும் இருக்கும் மொசூல் நகரில், பிரமாண்டமான வான் தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இத்தாக்குதலில் “இஸ்லாமிய தேசத்தின் ஹலீபா அப்துல்லாஹ் பக்தாதி கொல்லப்பட்டுள்ளார்” என்ற செய்தி ‘அல் அரேபியா’ செய்தி ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததுMJ.
எனினும், “எமது தாக்குதல் மொசூல் நகரில் பலமானதாகவே இருந்தது. இத்தாக்குதல் இஸ்லாமிய தேசத்தின் தலைமை பீட உறுப்பினர்களை இலக்குவைத்தே நடாத்தப்பட்டிருந்தது. தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்தில் அப்துல்லாஹ் பக்தாதி இருந்தார். ஆனால் அப்துல்லாஹ் பக்தாதி கொல்லப்பட்டார் என்பது எங்களுக்கு உறுதி செய்யப்படவில்லை” என அமெரிக்க இராணுவ கட்டளைப் பிரிவின் பேச்சாளர் பெட்ரிக் ரைடர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 5, 2014 – மொசூல் பள்ளிவாயலில் தன்னை ஹலீபாவாக அறிமுகப்படுத்தும் அப்துல்லாஹ் பக்தாதி
“அப்துல்லாஹ் பக்தாதி கடந்த வெள்ளிக்கிழமை இறந்தார் என்ற செய்தி மொசூல் நகரிலும், மற்றும் ஈராக்கிலும் பரவியிருந்தபோதிலும், இஸ்லாமிய தேசப் போராளிகளின் கட்டுப்பாட்டு விதிகளுக்குப் பயந்து பொதுமக்கள் நடந்ததை விபரிக்க மறுக்கின்றனர்” என பக்தாத் செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, 1500 அமெரிக்க இராணுவ வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பியிருந்தார். இத்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் 10 இராணுவ வாகனங்களும் தாக்கப்பட்டிருந்தன. ஐ.எஸ். இயக்க உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், ஈராக் அரசாங்கத்தின் தொலைக்காட்சி தனது செய்தியில், “குறித்த தாக்குதலில் அப்துல்லாஹ் பக்தாதி காயமடைந்திருந்தார். ஆனால் அவரது சேவகர் கொல்லப்பட்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்துல்லாஹ் பக்தாதி கொல்லப்பட்டிருந்தால் அமெரிக்கா வாய்மூடி இருக்கப்போவதில்லை. இருந்தாலும், இவ்வியக்கம் மீது ஆரம்பத்திலிருந்தே பல சந்தேகங்கள் இருந்து வருகின்றன. அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஈராக் இருந்த 2003 காலப்பகுதியில் அல்-கைதா போராட்டத்தாக்குதலில் அப்துல்லாஹ் பக்தாதி அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்MJ.
இந்நிலையில், அப்துல்லாஹ் பக்தாதி கொல்லப்பட்டாரா? அல்லது காயமடைந்தாரா? என்ற செய்திக்கு இதுவரைக்கும் ஐ.எஸ். அமைப்பிடமிருந்து எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை. அப்துல்லாஹ் பக்தாதி கொல்லப்படாமல் இருந்தால் அவர் விரைவில் ஓர் நிகழ்வொன்றில் தன்னை வெளிக்காட்டுவார் எனவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ரமழானில் தன்னை முதன் முதலாக உலகுக்கு இஸ்லாமிய தேசத்தின் ஹலீபாவாக அறிமுகப்படுத்திக்கொண்ட அப்துல்லாஹ் பக்தாதி, “தனது ஹிலாபத்திலுள்ள மக்கள் அனைவரும் தனக்குக் கட்டுப்பட வேண்டும்” என கேட்டிருந்தார். அதன் பின்னர் இன்றுவரைக்கும் அப்துல்லாஹ் பக்தாதி பற்றிய செய்திகளோ, புகைப்படங்களோ, வீடியோக்களோ எதுவுமே வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல்லாஹ் பக்தாதி கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கின்றாரா என்பதை ஐ.எஸ். அமைப்புதான் உலகிற்கு தெரிவிக்க வேண்டும்.
Leave a comment