கல்முனை: சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றபோது புராதன சின்னங்களில் மையினால் எழுதியதற்காக கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் விடுவிடுக்கப்பட்ட சம்பவபம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதானது,
கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்கள் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றபோது அதில் சென்ற மாணவி ஒருவர் அங்கு எழுதத் தடைசெய்யப்பட்டுள்ள புராதன சின்னங்களில் மையினால் எழுதியதினால் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு சீகிரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
புராதன சின்னங்களை மையினால் எழுதுவதோ அல்லது சேதப்படுத்துவதோ தொல்பொருள் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் பிணையில் வரமுடியாத குற்றமாகும். இதற்கு முன்பும் ஓட்டமாவடியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இவ்வாறான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தங்களோடு சுற்றுலா வந்த மாணவியை விடுவித்தால் மாத்திரம்தான் பொலிஸ் நிலையத்தைவிட்டு நகருவோம் என்று மாணவிகள் பொலிஸ் நிலையம் முன்பாக நின்றிருந்தனர். இச்சம்பவத்தை அடுத்து கல்முனைப் பிரதேசத்தில் பதட்டநிலை ஏற்பட்டது.
குறிப்பிட்ட இந்தச் சம்பவம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. உடனடியாக விரைந்து செயல்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், சம்பந்தப்பட்ட சீகிரியா பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது, மாணவியை விடுவிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்,
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் குறித்த பிரதேசத்தின் அரசியல் பிரமுகரும்இ காணி அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இவர்கள் இருவரும் மாணவியை விடுவிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
மாணவியை விடுவிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டபோது, மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரியவின் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்தார். அவரும் சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசீல் ராஜபக்ஸவின் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இவ்விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் தலைமையில் சீகிரியாவுக்கு அனுப்புவதற்கு அமைச்சர் பசீல் ராஜபக்ஸ ஏற்பாடுகளைச் செய்தார்.
சீகிரியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் கலந்துரையாடி மாணவியை விடுவித்தனர்.
இந்த விடயம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸிடம் வினவியபோது,
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவியை விடுவிப்பதில் பல முயற்சிகளைச் மேற்கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசீல் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்இ காணி அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன், மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய ஆகியோர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.
Published by

Leave a comment