நீலவானின் நீந்தும் நிலா

moonகவிஞர் இல்மி அஹமட் லெவ்வை

இலங்குகின்ற
இலக்கிய வானின்-
தங்க நிலா
தம்பிலெவ்வை தந்த
ஜவ்பர்கான்!
 
இவன்
விழுதுகள் விழுந்த
விருதுகள் குவித்த
வித்தக விருட்சம்!
தேசிய சாகித்திய மண்டல
‘சாகித்திய சூரி’ கண்ட
சாதனைச்சிகரம்!
 
அவன் பேனா தூக்கினால்
மானாக்களை
மிஞ்சுவான்
அரங்கிலேறினால்
அனல்தெறிக்கும்.
அவனருகில் நின்றாலே
கவி சுரக்குமப்பா!
அவனொரு சந்தனமரம்-நம்
சமூகத்தின் வரம்!
 
‘முறிந்த சிறகுகளும் என் வானமும்’;
இவனது இலட்சிய பயணத்தின்
ஐந்தாவது மையில்கல்!
 
தொண்ணுறுகளில்-இந்த
ஈமானியப் பூமியை
பாசிச வெறியர்கள்
குருதியால்
குளிப்பாட்டியபோது-
இமை மூடாத இரவுகளாக்கி
நெற்றியை நோக்கிய துப்பாக்கிகளுக்குள்ளும்
‘குருதியால் குளித்த காத்தான்குடி’ என
கவியேற்றி
நாடு முழுவதும்
செய்தி சொன்னவன்?
 
இந்த ஜே.கே
எந்த ஏ.கே.களுக்கும்
அஞ்சாதவன்-ஆனாலும்
அழ்ழாஹ்வின்
ஆணையை மட்டும்
மிஞ்சாதவன்.
 
வாலிபத்தில்
வறுமை
கொடியது என்பார்கள்
இவனது வாலிபத்தில்
இவன் வாழாமல்
இவனுக்குள் வாழ்ந்தது
வறுமைத் தீ !

ஆனாலும்
இவனது
ஆளுமை எழுத்துக்கள்
ஏழ்மையை
வீழ்த்தியது
ஏலுமை உள்ளவனாய்
ஏணிகளில் ஏற்றியது
அல்ஹம்துலில்லாஹ்-இன்று
ஜவ்பர்கான்
கவிதா உலகின்
ஜாம்பாவான் !
 
என்நோக்கில்
ஒருநாள் விடியலில்
இலக்கிய ஆய்வு வரும்,
புதை பொருள் ஆராட்சி
பொருட்களைப் போல
புதுமையாய் இவனது
படையல்களை நாளைய
இதிகாசம் நோக்கும்!
 
நீலவானின் நீந்தும் நிலா – நீ
வாழவேண்டும்!
வளர்ந்தோங்க வேண்டும்
வானத்து விண்பூக்கள்
வந்துனக்கு
வாழ்த்துரைக்கும் வரை
அல்ஹம்துலில்லாஹ் !

Published by

Leave a comment