சவுதி ஷியா பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி! 9 பேர் காயம்!!
– MJ
றியாத்: சவுதி அரேபியாவின் கிழக்குப் பிரதேசமும், ஷியா பிரிவினரின் தனிப்பிரதேசமாகவும் கருதப்படும், அல் அஹ்ஸா நிர்வாக எல்லைக்குள் உட்படும் அல் தல்வா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் பிஸ்டோல் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளை உபயோகித்திருந்ததாக சவுதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
“ஆஸூறாஹ் தினத்தை முன்னிட்டு “ஹூஸைனியா” நிகழ்வுகள், குறித்த சியா பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது, தங்களது முக அடையாளத்தை மறைத்துக்கொண்டு 3 இளைஞர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். இதனால் ஸ்தலத்தில் ஐவர் கொல்லப்பட்டு இரத்தக்கறையுடன் வீழ்ந்தனர்” என நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர். அதுமாத்திரமன்றி, இச்சம்பவத்தை தங்களது தொலைபேசியூடாகவும் சிலர் வீடியோ செய்திருப்பதாகவும் சாட்சியாளர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தையடுத்து றியாத் மற்றும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதல்களின் போது, 9 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருவதாக றியாத் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2011ஆம் ஆண்டின் கணக்கின்படி, சவுதி அரேபியாவில் ஷியா இனத்தவர்கள் ஒரு மில்லியன் பதிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment