அபுதாபி : அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அபுதாபி இறுதி டெஸ்ட் போட்டியை வென்ற பாகிஸ்தான் அணி, டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, யூனிஸ்கானின் இரட்டைசதம் மிஸ்பா உல் ஹக் மற்றும் அசார் அலி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 570 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று பாலோ-ஒன் ஆனது. இந்நிலையில் 309 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற போதிலும் பாகிஸ்தான் அணி பாலோ ஒன் கொடுக்காமல் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
அசார் அலி சதமடிக்க, மிஸ்பா உல் ஹக் அதிவேக சதம் அடித்தார். இந்நிலையில் இரண்டவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களை பெற்றிருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து அவுஸ்திரேலியாவிற்கு 603 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
4ஆவது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஸ்மித் 38 ஓட்டங்களுடனும் மார்ஷ் 26 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்றைய ஐந்தாவதும் இறுதி நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணிக்கு மார்ஷ் 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய சுமித் 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப, அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று 356 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஏற்கெனவே டுபாயில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 ‘வைட் வோஷ்’ என கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக மிஸ்பாவும், தொடர் ஆட்டநாயகனாக யூனிஸ்கானும் தெரிவு செய்யப்பட்டனர்.
எதிர்வரும் 9ஆம் திகதி நியூசிலாந்துடன் ஆரம்பமாகவுள்ள தொடர் மிக முக்கியம் வாய்ந்ததாக அமையுமென பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார்.





Leave a comment