பெண்களை வைத்து எதிரிகளை வீழ்த்தும் ஐ.எஸ்!

isis– AF- 90

மும்பை: சமீபத்தில் இந்தியா, ஹைதராபாத்தைச் சேர்ந்த சில பெண்கள் பிடிபட்டனர். இவர்கள் ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்று, ஈராக் வரை போய் வந்தவர்கள் ஆவர். இவர்களை மீட்டு, கவுன்சிலிங் கொடுத்து பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இவர்களிடமிருந்து பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன. பெண்களை எப்படி ஐ.எஸ். பயன்படுத்துகிறது என்பதும் இதிலிருந்து தெரிய வந்தது.

இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், போர்க்களத்தில் போரிடும் நடவடிக்கைகளில் பெண்களைப் பயன்படுத்துவதை ஐ.எஸ். விரும்பவில்லை. எங்களுக்கு ஐ.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளின்போது, இது நீண்ட காலப் போராக இருக்கும். நீண்ட காலம் போரிடும் நிலை ஏற்படும். அதனால் போரிடும் வீரர்களுக்கு உதவியாக நீங்கள் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

எங்களுக்கு பல தரப்பட்ட பணிகளும் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்று சமையல் வேலை செய்வது. போர்க்களத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையானதை நாங்கள் சமைத்துத் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டோம். நாங்கள் ஈராக்குக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் எங்களுக்கு புலனாய்வுத் தகவல்களை எப்படி சேகரிப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது

அப்போது உங்களை ஆயுதப் போரில் ஈடுபடுத்த மாட்டோம் என்று எங்களுக்குத் தெரிவித்தனர். நேரடிப் போரில் உங்களை ஈடுபடுத்த மாட்டோம் என்றும் கூறினர். நாங்கள் அங்கு போரிடும் எங்களது சகோதரர்களுக்கு உதவ நினைத்துத்தான் போனோம். ஆனால் அங்கு ஐ.எஸ்ஸின் திட்டம், நோக்கம் வேறாக உள்ளது. அது எங்களுக்குப் பிடிக்கவில்லை. தற்போது எங்களைப் போல அங்கு போரிடப் போயுள்ள நமது நாட்டு சகோதரர்களின் நிலை எங்களுக்குக் கவலை தருகிறது. அவர்களும் மீட்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இவர்கள் தவிர தேசிய புலனாய்வு அமைப்பும் ஐ.எஸ். குறித்து பல தகவல்களைச் சேகரித்துள்ளது. அதை வைத்துப் பார்க்கும்போது ஒரு முழுமையான ராணுவமாக மாற அந்த அமைப்பு முயற்சித்து வருவது தெரிகிறது. இந்தியா என்றில்லாமல் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் இந்த அமைப்பு ஆட்களைத் தேர்வு செய்து வருகிறது.

குறிப்பாக தனது படையில் பெண்களை அதிக அளவில் சேர்த்து அவர்களை ‘சப்போர்ட்டிங்’ என்ற வகையில் வைத்திருக்க இவர்கள் திட்டமிடுகிறார்கள். மேலும் எதிரிகளை ஆசை காட்டி வலை விரித்து வீழ்த்தவும் பெண்களை இவர்கள் honey traps போல பயன்படுத்துகின்றனர். உளவுத் தகவல்களை சேகரிக்கவும் பெண்களை வைத்து சாதிக்க முயல்கின்றனர்.

முன்பு பெண்களை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையுடன் இருந்து வந்தது ஐ.எஸ். ஆனால் அதில் இப்போது மாற்றம் தெரிகிறது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த பல பெண்கள் சிக்கி ஐஎஸ்ஐஎஸ் பக்கம் ஈர்க்கப்படுவது இந்திய புலனாய்வு அமைப்புகளை கவலைப்படுத்தியுள்ளது. மேலும் மேலும் பெண்கள் இதில் சேராமல் தடுக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment