உங்களது பத்திரிகையினை தொடர்ச்சியாக வாசிக்கின்றவர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் அதில் வெளிவரும் செய்திகள் ஆக்கங்கள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாக எனது சில முக்கிய அவதானங்களை தங்களுடன் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
அர்த்தமுள்ள ஜனநாயக சூழலை பாதுகாப்பதிலும் வலுப்படுத்துவதிலும் ஊடகங்களின் பங்கு இன்றியமையாததாகும். அந்த வகையில் ஊடகங்கள் மக்களில் குரல்களாக ஒலிப்பது மாத்திரமன்றி சமூகத்தினை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் சமூகத்தின் காவல் நாய்களாகவும் செயற்பட வேண்டியது சமூக நோக்கில் மிகவுமே முக்கியமானதொன்றாகும். அவ்வாறு தொழிற்பட முற்படுகின்றபோது ஒவ்வொரு ஊடகமும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களும், மதிக்க வேண்டிய தர்மமும் அதேயளவு முக்கியமானதாகும்.
இருந்தாலும், மக்கள் மூச்சுத்திணறும் அளவிற்கு செய்திகளை அள்ளிக் கொட்டும் ஊடகங்கள் ஊடக தர்மத்தை தமக்கு வசதியான முறைகளில் வரையறை செய்து கொண்டு செயற்படுகிறன என்பது மிகவும் துரதிஸ்டமானதாகும். இதன் பின்னனியிலேயே சில முக்கிய விடயங்களை உங்களிடம் சுட்டிக் காட்டவேண்டும் என நினைக்கின்றேன்.
சமூக நோக்கில் ஊடகக் கடமையினை செய்ய முற்படும் போது, சொல்லப்டுகின்ற செய்திகளின் உண்மைத் தன்மையும் முன்வைக்கப்படும் விமர்சனங்களின் நியாயத்தன்மைமையும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இதில் சுய விருப்பு வெறுப்புகளோ அல்லது ஏனைய சொந்த நலன்களோ பாதிப்பு செலுத்துவதை அனுமதிக்கக் கூடாது.
எம்.எம். அப்துர் ரஹ்மான் (பொறியியலாளர்)
ஒரு ஊடகத்தை பொறுத்தவரையில் பல்வேறு வழிகளிலும் செய்திகளும் தகவல்களும் கிடைத்த வண்ணமே இருக்கும். அவை ஒரு தனிநபர் சமபந்தப்பட்டதாகவோ அல்லது சமூக நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாகவோ இருக்கலாம். தகவல் வழங்கும் தரப்பினரின் நம்பகத்தன்மை மற்றும் வழங்கப்படும் தகவல்களின் உண்மைத் தன்மை என்பவற்றை உறுதி செய்து கொள்வது ஊடகங்களின் கடமையாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊடக நியமங்களின் அடிப்படையும் அதுவேயாகும்.
அந்த வகையில் ஒரு உதாரனத்தை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் காலப்பகுதியில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட கூட்டு உழ்ஹிய்யா தொடர்பான ஒரு குறுஞ் செய்தியினை என்னால் பார்க்க கிடைத்தது. உழ்ஹிய்யா கொடுப்பதற்கு கொள்வனவு செய்யப்பட்ட மாடுகளில் 31 மாடுகளை குறைந்த விலைக்கு சம்மேளனத்தில் ஏலத்தில் விற்று விட்டதாக அந்த செய்தி தெரிவித்தது. இது எப்படி நடக்க முடியும் என சிந்தித்த நான் உடனடியாக சம்மேளன கூட்டு உழ்ஹிய்யா திட்டத்தில் செயற்படும் ஒரு முக்கியமான உறுப்பினரை தொடர்பு கொண்டு வினவிய போது இவ்வருடம் கூட்டு உழ்ஹிய்யாவிற்கு அதிகமான மாடுகள் கிடைக்குமென எதிர்பார்த்த சம்மேளனம் முன் கூட்டியே மாடுகளை கொள்வனவு செய்து இருப்பில் வைத்திருந்ததாகவும், உழ்ஹிய்யாக் காலத்தில் மாடுகளுக்கு ஏற்படும் கிராக்கி மற்றும் அதிக விலை என்பவற்றைக் கருத்திற்கொண்டே இது மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் உழ்ஹிய்யாவிற்கு கிடைத்த நிதிப்பங்களிப்பு சற்று குறைந்ததன் காரணமாக ஒரு தொகை மாடுகளை விற்று விடத் தீர்மானித்ததாகவும் கூறப்பட்டது.
இங்கு சில விடயங்களை நிதானமாக புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.
முதலாவதாக, விற்கப்பட்ட மாடுகள் உழ்ஹிய்யாவிற்கென ஒதுக்கப்பட்ட மாடுகள் அல்ல. ஏனெனில் ஒவ்வொரு மாட்டிற்குமான நிதிப்பங்களிப்பு கிடைக்கின்ற போது மாத்திரமே அது உழ்ஹிய்யா மாடாக கொள்ளப்படுகிறது.
இரண்டாவதாக, நூற்றுக் கணக்கான மாடுகளை கொள்வனவு செய்து சுமார் 50 இற்கு மேற்பட்ட பள்ளிவாயலுக்கு பங்கு வைக்க வேண்டிய பாரிய நிர்வாக சுமையைக் கொண்டுள்ள சம்மேளனம் இத்திட்டத்தினை இலகுபடுத்தும் நன்நோக்கில் மாடுகளை முன்கூட்டியே கொளவனவு செய்து வைத்திருந்ததை குற்றமெனக் கூறமுடியாது. எந்தவொரு விடயத்திலும் நன்நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஏற்படும் தவறுகளை கூட அனுசரிக்க முடியும் என்பது ஒரு பொதுவிதியாகும். அந்த வகையில் முன்கூட்டியே கொள்வனவு செய்யப்பட்ட மாடுகளை மீள்விற்பனை செய்யும் போது ஒரு தொகை நஷ்டம் ஏற்பட்டாலும் கூட அதனை பாரிய குற்றமாக விமர்சிப்பது பொருத்தமல்ல எனக் கருதுகின்றேன். அத்தோடு இதுபோன்ற நஷ்டங்கள் ஏற்படாத வகையில் சம்மேளனமும் தமது திடடங்களை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தும் எனவும் நாம் நம்புகின்றேன்.
இருந்தாலும் நீங்கள் வெளியிட்ட செய்திகள் சம்மேளனம் இவ்விடத்தில் பாரிய தவறிழைத்து பொதுப்பணத்தை வேண்டுமென்றே நஷ்டப்படுத்தி விட்டது என்பது போல கடுமையாக விமர்சிப்பதாகவே அமைந்து இருந்தது. இத்தனைக்கும் இதில் நடந்தது என்ன என்பது தொடர்பான தகவல்களை சம்மேளன பிரதிநிதிகளிடம் நான் உறுதிப்படுத்திய பின்னர் அதனை உங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெளிவு படுத்தியிருந்தேன். இருந்தாலும் உங்களது செய்திகளில் அவ்வாறான தெளிவு படுத்தும் எந்தச் செய்திகளையும் நீங்கள் வெளியிடவில்லை என்பது எனக்கு கவலையளிக்கிறது.
இன்னுமொரு உதாரணத்தையும் நான் சுட்டிக் காட்ட வேண்டும். ஹஜ் பெருநாளை முன்னிட்டு கடற்கரையில் நடாத்தப்பட்ட களியாட்ட நிகழ்ச்சிக்கு அருகில் இருந்த வளவில் இருந்து திருட்டுத் தனமாக மின்சாரம் பெறப்பட்டது என்ற குறுஞ்செய்தியையும் நீங்கள் வெளியிட்டீர்கள். அது பற்றி மின்சார அத்தியட்சகர் சகோ. நவ்பர் அவர்கள் தாமாகவே உங்களிடம் தொடர்பு கொண்டு சில தெளிவுகளை வழங்கியதாக நான் அறிகிறேன். இருந்தாலும் அவற்றை உள்வாங்கியதாக எந்த செய்திகளையும் நீங்கள் பிரசுரிக்க வில்லை.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல கிடைக்கும் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டிய கடமை ஊடகங்களுடையது. இந்நிலையில் குறித்த செய்தியோடு சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து மேலதிக விளக்கங்களையும் தம்பக்க நியாயங்களையும் கூற வருகின்ற போது அவற்றை கண்டிப்பாக உள்வாங்கவேண்டும் ;அதனடிப்படையில் தங்களது செய்திகள் அமைய வேண்டும் என்பது என்னுடைய உறுதியான கருத்தாகும். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வார உரைகல் பத்திரிகையின் 300வது இதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நான் இவ்விடயத்தினை வலியுறுத்தி அங்கு பகிரங்கமாக உரையாற்றியதையும் இவ்விடத்தில் நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.
எனவே, மேலே நான் சுட்டிக் காட்டிய ஊடக தர்மத்தின் அடிப்படைப் பொறுப்பினை நிங்கள் உங்களது சுயவிருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்திக் கோருவதோடு அவ்வாறு நீங்கள் செய்வதானது உங்கள் ஊடகப் பணியினை சமூகத்திற்கு நிறைவான பிரயோசனமுள்ள ஒன்றாக மாற்றுவதாகவும் அமையும். அத்தோடு, அது இறைவனின் பெரும் அருளையும் உங்களுக்கு பெற்றுத் தரும் எனவும் நம்புகின்றேன்.
அல்லாஹ் நமது தூய பணியை அங்கீகரிப்பதோடு அவனது சத்திய பாதையில் நிலைத்திருக்க செய்வானாக!
Leave a reply to nafeel Cancel reply