’10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஹஜ்ஜிற்கு அழைத்து வருவதில் தடை விதிக்கப்படலாம்’!
– MJ
றியாத்: “அடுத்த வருட ஹஜ் வீசா நடை முறையில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் ஹஜ்ஜிற்காக அழைத்துவருவதற்கு தடை விதிக்கப்படலாம்” என சவுதி அரேபிய ஹஜ் அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
“தொற்று நோய் அபாயம் உலகில் பரவலாக ஏற்பட்டுவரும் இத்தருணத்தில், சிறுவர்களை இத்தொற்று நோய்கள் இலகுவாக தாக்குகின்றன. இம்முறை ஹஜ்ஜிற்கு அழைத்துவரப்பட்ட ஐயாயிரத்திலிருந்து, ஏழாயிரம் சிறுவர்கள்வரை நோய்வாய்ப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான விசேட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்தனர்”.
“மேலும், புனித ஆலயத்தில் சனநெருசலில் சிக்குண்டு மிதிபடக்கூடிய அபாயமும் எற்படுகின்றன. சில வேளை பெற்றோர்களிடமிருந்து தவறிவிடுகின்றனர். அது மாத்திரமன்றி, கல் எறியும் ஜம்ராத்திற்கும் சன நெரிசல் மிக்க நேரங்களில் அழைத்துச் செல்கின்றனர். எனவே இவைகளைக் கருத்திற்கொண்டு, அடுத்த வருட ஹஜ் விதி முறைகளில் மேற்படி மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம். இது ஓர் ஆலோசனையே தவிர, இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என ஹஜ் அமைச்சு தெரிவிக்கிறது.
ஹஜ்ஜின்போது சிறுவர்கள்-மகிழ்ச்சியுடன்
ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களை அழைத்துவரும் பெற்றோர்கள், “தங்களது குழந்தைகளுக்கு உண்மையான இஸ்லாமிய ஒற்றுமையையும், வணக்கத்தையும் காண்பிக்க ஹஜ் ஓர் இன்றியமையாத தருணம். இதனாலேயே தாங்கள் எங்களது குழந்தைகளையும் சிறுவர்களையும் அழைத்துவந்து காண்பிக்கின்றோம்” என மேலத்தேய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் பெற்றோர்கள் கடந்த ஹஜ்ஜின்போது தெரிவித்திருந்ததாகவும் சவுதி ஹஜ் அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.
Leave a comment