-டீன் பைரூஸ்-
காத்தான்குடி: சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று காத்தான்குடி5 பத்ரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் மௌலவி ஏ.ஜே.அப்துர் றஊப் (மிஸ்பாஹி) தலைமையில் மிகவும் சிறப்புடன் நடை பெற்றது.
இன்றைய நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஊக்குவிப்பு உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சர் “ ஞானத் தாரகை” பசீர் சேகுதாவூத் MP கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அரச படை அதிகாரிகள்,உலமாக்கள்,முஹிப்பீன்கள் என பலரும் படை சூழ ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பின் கொடி ஏற்றுதல் மற்றும் நினைவுப்பதாகை திரை நீக்கம் என்பன மௌலவி ஏ.ஜே.அப்துர் றஊப் மிஸ்பாஹி இனால் செய்யப்பட்டது.
நாட்டில் இன ஜக்கியம், ஒற்றுமை, சமாதானம் மலர வேண்டும், நாட்டுக்கும், நாட்டின் தலைவருக்கும், முப் படைகளுக்குமாக நல்லாசி வேண்டி கண்டி மாவட்டத்தின் முன்னால் காழிநீதிபதி முஹம்மது கனிபா அவா்களினால் சிங்களத்தில் துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது.
இன்று இடம் பெறுகின்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக தமிழ் நாடு,இந்தியா நேஷனல் பொறியியல் கல்லுாரியின் பேராசிரியா் கலாநிதி முனைவர் எச்.முஜிபுர்றஹ்மான் Ph.d , தமிழ்நாடு, இந்தியா கைறுல் பரீய்யா மகளிர் அரபுக் கல்லுாரியின் முதல்வர், ஸூன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவருமான அல்ஹாபிழ் அப்ழலுல் உலமா அஷ்ஷெய்ஹ் எம். அப்துல்லாஹ் ஜமாலி MA அவர்களும் நாடு,இந்தியா ஜமாஅத்துல் உலமாவின் உப தலைவர் மௌலவி பி.ஏ.ஹாஜாமுயீனுத்தீன் (பாகவி), ஆகியோர் உடபட இலங்கையிலுள்ள அறபுக்கல்லூரிகளின் அதிபர்கள்,உஸ்தாது மார்கள்,உலமாக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றும் நாளையும் நான்கு அமர்வுகளாக இடம் பெறவுள்ள உலமாஉகள் மாநாட்டில் விசேட சொற் பொழிவுகளும், முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
விசேட சொற் பொழிவுகளும், அதன் தலைப்புகளும்.
1) கூட்டு துஆவும், பறகத் பெறுதலும்.
2) நான்கு மத்ஹபுகளை பின்பற்றுதல்.
3) மௌலித் ஓதுதலும், கந்துாரி கொடுத்தலும்.
4) கப்றுகளை தரிசித்தலும்,கட்டிடம் கட்டுதலும்.
5) நன்மையை சேர்த்து வைத்தல்,தறாவீஹ் தொழுகை,தல்கீன் ஓதுதல்,ஸியாறத் செய்தல்.
6) ஸூன்னத்தும்,பித்அத்தும்.
7) வஸீலா தேடலும்,இரட்சிப்பு தேடலும்.
மேற்படி தலைப்புகளில் குர்ஆன் ,ஹதீஸ் ஒளியில் விளக்கமளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இம்மாநாட்டிக்கு என எதிர்பார்க்கப்பட்ட சுமார் 350 க்கும் மேற்பட்ட இலங்கை,இந்தியாவை சேர்ந்த உலமாஉகள் பலா் கலந்து கொண்டதினை காணக்கூடிதாக இருந்தது.












Leave a comment