2020இல் ஒரு இலட்சம் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க திட்டம்

Close up of a graduation cap and a certificate with a ribbonகொழும்பு: 2020 ஆம் ஆண்டிற்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதியாகும் மாணவர் தொகையை ஒரு இலட்சமாக அதிகரிக்க உத்தேசித்துள்ளதாகவும் அதற்கான செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்தார்.

நாட்டின் தேசிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இலங்கையை ஆசியாவின் அறிவின் கேந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் உயர் கல்வித் துறையை வெற்றிகரமான முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் வகையில் தற்போது பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐம்பெரும் கேந்திரமாக இலங்கையை உருவாக்கி ஆசியாவின் ஆச்சர்யமிக்க உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கமைய கப்பற்றுறை, விமானத்துறை, மின்சாரம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறிவின் கேந்திரமாக இலங்கையை மாற்றுவதும் முக்கியமாகிறது. மேற்படி துறைகளை ஆசியாவின் கேந்திரமாக மாற்றுவதற்குத் தேவையான மனித வளங்களை உருவாக்கிக் கொடுப்பது பல்கலைக்கழகங்களே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையை அறிவின் கேந்திரமாக்கும் திட்டத்துக்கு சர்வதேச மட்ட தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள். சர்வதேச மட்ட தொழில்வாய்ப்புக்கேற்ற பட்டதாரிகள் மற்றும் சர்வதேச கேள்விக்கு ஏறப தொழில்துறை சார் பட்டதாரிகளை உருவாக்குவது முக்கியமாகும். அதற்காக இளைஞர்களைத் தயார் செய்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிணங்க அரசாங்க பல்கலைக் கழகங்களைப் போன்றே அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலவசக் கல்வியை விரிவுபடுத்தும் அதேவேளை கல்விச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது பல சர்வதேச தர உயர் பல்கலைக்கழகங்களை இலங்கையில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இப்போதும் அரச சார்பற்ற பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் 54 இலங்கையில் இயங்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றை தரப்படுத்தும் வகையில் சட்டங்களை உருவாக்கும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment