அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றி வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது

acju jammiathul– ACJU

கொழும்பு: சில குறிப்பிட்ட இணையதளங்களில் வெளியான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளோ பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களோ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்து அல்-குர்ஆன் பிரதிகளை எடுத்துச் செல்லவில்லை. இவ்வாறு வெளியான செய்தியை கண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது விசனத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றது.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு எம்மிடம் சிங்கள, ஆங்கில அல்குர்ஆன் பிரதிகளை கேட்டு உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியது. இக்கடிதத்தை கொண்டுவந்து ஒப்படைத்த அதிகாரி எவ்வகையிலும் முறைகேடாக நடந்துகொள்ளவில்லை. அப்பிரதிகள் கிடைத்தால் அறிவிக்குமாறும் அதனை வந்து பெற்றுக் கொள்வதாகவும் கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து நாம் தொடர்புகொண்டு அறிவித்ததன் பேரில் அவ்வதிகாரி வந்து நாம் வழங்கிய சிங்கள, ஆங்கில பிரதிகளை பெற்றுச் சென்றார். அதுவன்றி எவரும் உள்ளே நுழைந்து அடாவடித்தனம் புரியவில்லை என்பதையும் அறியத்தருகிறோம்.

அல்-குர்ஆனை கேட்டுவரும் ஒருவருக்கு அதனை கொடுக்க மறுப்பது பொருத்தமற்ற செயலாகும். அதனைப் பெற்று யாரும் படிப்பினை பெறுவதாக இருந்தால் அது அல்-குர்ஆனின் தனிச் சிறப்பேயாகும். மேலும் நம்நாட்டுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் ஜனீவா சென்றமையையும் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முன் அனுமதியின்றி நினைத்த நேரத்தில் ஜனாதிபதியை சந்திக்கும் செல்வாக்கு பெற்றவர் என்ற பிழையான கருத்தையும் மேற்குறித்த விடயத்துடன் முடிச்சுப்போட்டு பிரச்சினைகள் உருவாக்காதிருக்குமாறும் இவற்றின் மூலம் அரசியல் இலாபம் அனுபவிக்க நினைப்போருக்கு துணைபோகாதிருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் முஸ்லிம்களது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் தேவைகளுக்கு ஏற்ப யாரை வேண்டுமானாலும் சந்திக்கும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

மேலும், சில குறிப்பிட்ட இணையதளங்களில் வெளியிட்ட பிழையான தகவலை நீக்கிவிடுமாறும், தகவல்களை வெளியிடும் போது அவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

அஷ்-ஷைக் பாழில் பாரூக்

செயலாளர் – ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Published by

Leave a comment