வரலாற்றுப் புகழ் யாழ்தேவி இன்று மீண்டும் பயணிக்கிறது

yal_devi_200_150[1]யாழ்: யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகின்றன. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன் முதல் அங்கமாக பளையில் இருந்து யாழ்தேவி இன்று யாழ்ப் பாணத்துக்கு பயணம் செய்கிறது.

பளையிலிருந்து யாழ்ப்பாணம்வரை ரயிலில் பயணிக்கும் ஜனாதிபதி, கொடிகாமம் மற்றும் நாவற்குழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களையும் திறந்துவைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ரயிலில் பயணிக்கும் அவர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தைச் சென்றடைந்து புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.

இன்று முற்பகல் 9.30 மணிக்கு பளையிலிருந்து ரயிலில் புறப்படும் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 10.30 மணிக்கு யாழ் ரயில் நிலையத்தைச் சென்றடையவுள்ளனர்.

class-m4-yaal-devi[1]
சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் யாழ்தேவி வடக்கில் தரித்து நிற்கையில்

கொழும்புக்கும் பளைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருக்கும் யாழ் தேவி ரயில் சேவை இன்று முதல் யாழ்ப் பாணம்வரை சேவையைத் தொடர்கிறது. பயணிகளின் வசதி கருதி கொழும்பு புறக்கோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மட்டுப்படுத் தப்பட்டிருந்த ரயில் சேவை கல்கிஸ்சை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்கிஸ்சையிலிருந்து தினமும் நகரங்களுக்கிடையிலான இரண்டு கடுகதி ரயில் சேவைகள் (இண்டர்சிட்டி) ஆரம்பமாகவிருக்கும் அதேநேரம், யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கும் இரண்டு ரயில்கள் கல்கிஸ்சையை வந்தடையும். இதனைவிட புறக்கோட்டையிலிருந்து மேலும் இரண்டு ரயில் சேவைகள் யாழ்ப்பாணத்துக்கு தினமும் இடம்பெறும்.

சுமார் 25 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் சேவை யாழ்ப்பாணத்துக்கு ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேலும் பலப்படுத்தியிருப்பதுடன், யாழ் குடாநாட்டின் பொருளாதாரத்துக்கு மேலுமொரு உந்துசக்தியாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

Published by

Leave a comment