– Dr. ILM. றிபாஸ்
தாய் மொழியில் கல்வி கற்க வேண்டுமா அல்லது ஆங்கில மொழியில் ஆரம்ப கல்வியைத் தொடர்வது சிறந்ததா எனும் வாதம் தொடர்ச்சியாக விவாதிக்கப் பட்டு வருகிறது. அத்தோடு இது தொடர்பான சாதக பாதகங்கள் பற்றியும் பலர் பல அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர்
இது தொடர்பில் மிக ஆழமாக சிந்த்திக்க வேண்டிய தேவை இருப்பதாகவே நான் உணர்கிறேன். கல்வியினை எந்த மொழியில் கற்றுக் கொண்டாலும் கல்வியின் தரம் தாழ்ந்து விடப்போவதில்லை என்பது ஓரளவு உண்மை என்றாலும் கல்வியினால் எதிர்பார்க்கப் படுகின்ற மாற்றமென்பது கல்வி கற்கின்ற இடம் சூழல் தொடக்கம் அந்த கல்வி கற்கப்படுகின்ற மொழி போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்றத்தாழ்விற்கு உற்பட்டே உள்ளது என்பது மறுக்க முடியாதது.
இந்த சிறிய கட்டுரையின் மூலம் மிகப் பெரும் விவாதத்திற்கு உற்பட்டிருக்கும் ஒரு கருப்பொருளை அளந்துவிட முடியாது. தமிழ் மொழியினைப் பொறுத்த அளவில் எந்த மொழிக்கும் சளைத்தது அல்ல என்பதும் அதன் வீச்சு அதிகம் என்பதும் ஒரு பொதுவான உண்மை ஆனால் இங்கு எனது அபிப்பிராயமாக இருப்பது எந்த மொழியினதும் வளர்ச்சி என்பது அம்மொழியில் படைக்கப் படும் இலக்கிய மற்றும் அறிவியல் படைப்புகள் சார்ந்ததாகவும் காலத்தின் தேவைக்கேற்ப அம்மொழி வளர்வதற்கான சொல் விருத்தியோடு கூடிய நெகிழ்ச்சித் தன்மை சார்ந்ததாகவும் உள்ளது.
இவ்வாறான ஒரு திட்டமிட்ட வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் தமிழ் மொழி பயணம் செய்கிறதா எனின் இல்லை என்பதே பொதுவான பதிலாக வருகிறது. ஆரம்ப காலங்கள் போல் சங்கம் வைத்து தமிழ் வளர்க்க யாரும் தயாராக இல்லை அவ்வாறு தமிழை பாதுகாக்க எண்ணுவோரும் காலத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்குமளவிற்கு சமுக பொருளாதார அரசியல் தளங்களில் செல்வாக்கனவர்களாக இல்லை. மாறாக ஆங்கில மொழி மோகமும் அதற்கான உற்சாகமூட்டல்களும் சகல தரப்பிலும் வீரியமாக நடை பெற்று வருகின்றது.
இவ்வாறான ஒரு சூழலில் தனது குழந்தைக்கு கல்வி வழங்க நினைக்கும் ஒரு சாதாரண குடிமகன் தடுமாறுகிறான் என்பது நிதர்சனம் அவனது கவலைகளெல்லாம் தனது குழந்தையின் எதிர்காலம் அவனது தொழில் வாய்ப்பு என்பது பற்றியே அல்லாது தாய் மொழி வளர்க்கவேண்டுமென எண்ணுவதாக இருக்க வேண்டுமென நாம் ஆசைப்பட முடியாது.
எனது இந்த கட்டுரையின் நோக்கம் இந்த விரிவான தலைப்பில் ஒரு சிறிய பகுதியாகிய தமிழ் மொழியிலுள்ள சிறுவர் இலக்கியம் தொடர்பான ஒரு விவாதத்தை தொடக்கி வைப்பதாகும்.
நவீன கால கணினி யுகத்தில் அதீத விஞ்ஞான வளர்ச்சி இடம்பெறும் இந்த காலத்தில்; காலத்தின் தேவை அறிந்து குழந்தைகளின் அறிவு வளர்ச்சி வேகத்திற்கும் மனோபாவ விருத்திக்கும் நடைமுறை ஒழுக்கங்களுக்கும் சிந்தனைப் பாங்கிற்கும் ஏற்றவாறான சிறுவர் இலக்கிய படைப்புகளை தமிழில் தேடுவது சிரமாக இருப்பதாக உணர்கிறேன் ஒரு தந்தை என்ற அடிப்படையில் எனது குழந்தைகளுக்கான வாசிப்பு ஆர்வம் ஊட்டலுக்கு பொருத்தமான தமிழ் எழுத்துப் படைப்புக்களை காண முடியவில்லை என்பது சிந்திக்க வைக்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய எழுத்து நடையே இன்றும் பெரும்பாலும் பின்பற்றப் படுகிறது பழைய பாணியில் அமைந்த கதைகளும் புனை படைப்புகளும் தான் இன்னும் தொடர்கிறது ஆந்திரேயும் தெனாலி ராமனும் பீர்பலும் முல்லாவும் தான் இன்னும் தமிழ் இலக்கிய ஹீரோக்களாக வலம் வருகின்றனர். ஆமை முயல் கதையும்இபாட்டி வடை சுட்டதும் அதனை காக்கையிடமிருந்து நரி சுட்டதும்தான் குழந்தைகளுக்கான கதையாடல்களாக உள்ளன. இந்த கதைகளில் பொதிந்திருக்கும் நீதிகளும் கேள்விற்குட்பட்டவை தனது வெற்றிக்காக விடாமுயர்ச்சியுடன் நடக்கும் ஆமை வெல்வதற்காக முயலை தூங்க விடுவதானது ஒரு போட்டிக்கு அழகான நீதியல்ல இந்த இடத்தில் ஆமை ஒரு இயந்திரத்தை தயாரித்து அதில் வேகமாக சென்று வெற்றியடைந்தது என்பது போன்ற விஞ்ஞான பாங்கு சேர்க்கப் பட்டால் தான் இன்றைய குழந்தைகளின் அறிவுத் தேடலுக்கு பொருத்தமாக இருக்கும் என்பது எனது பத்து வயது குழந்தையின் கருத்து.
மறுபக்கத்தில் எமது பழைய கதையாடல்களில் உள்ள பேய் பிசாசுகளையும் பூதங்களையும் அவற்றின் வீர பிரதாபங்களையும் இன்னமும் நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொண்டிருப்பது அவர்களது சிந்தனைத் திறனை கூர்மை மழுங்கச் செய்யும் என்பது சிறுவர் உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நமது கலாச்சார விழுமியங்கள் நம்பிக்கைக் கோட்பாடுகள் ஒழுக்கவியல் வரைமுறைகள் சார்ந்த விடயங்களை முன்னிறுத்திய அவற்றை எதிர்கால வாழ்வாதார வெற்றிகள் சார்ந்த நிறுவல்களோடு இலக்கியச் சுவை குன்றாது சிறந்த கவர்ச்சிகரமான படைப்புகளாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. மட்டுமல்லாது பல துறை சார்ந்ததாகவும் சிறுவர்களின் தற்கால சிந்தனைப் பாங்கினை உள்வாங்கியதாகவும் பல்வேறுபட்ட இலக்கிய படைப்புகள் உருவாக்கப் பட்டு நமது சிறார்களின் தெரிவுக்கு முன்வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
விஞ்ஞான விருத்திக்கும் காலத்தின் தேவைக்கும் ஏற்றவாறு மிக வேகமாகவும் குறைந்த வயதிலும் நிறையவே விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவைப் பாட்டோடு இன்றைய குழந்ததைகள் உள்ளனர் இதற்காக தமிழ் மொழியிலும் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற நமது சிறார்களுக்காக இலக்கியங்கள் புனையப்பட வேண்டும் இதனை விஞ்ஞான கணித உலவிய சார்ந்த துறையிலுள்ளோர் செய்ய வேண்டும் பலகலைக் கழக மாணவர்கள் ஆசிரியர்கள் கலை ஆர்வமிக்க இளைஞர்கள் விவேகத்தோடும் வீரியமாகவும் புதிய கலைப் படைப்புகளைக் உருவாக்க வேண்டும் இதற்காக தனி நபர் ஒருவர்தான் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை பாடசாலை ஆசிரியர்கள் பலகலைக் கழக பேராசிரியர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் சமூக இயக்கங்கள் குழுக்களாகக் கூட இந்த முயர்ச்சியில் ஈடுபட முடியும் வேற்று மொழிகளிகளிலுள்ள தலை சிறந்த சிறுவர் இலக்கியங்களை மொழிபெயர்ப்பின் மூலம் தமிழுக்குள் உள்வாங்க முடியும்.
இந்த முயற்சி யில்தமிழ் ஆர்வமும் திறனும் உள்ள சிருவர்களைக் கூட உள்வாங்கி அவர்களுக்கான எழுத்தார்வத்தை வெளிக்கொணர்ந்து படைப்புகளாக்க முடியும் இதனை பாடசாலைகளும் உள்ளூர் நிறுவனங்களும் தூண்ட முடியும் இவ்வாறு பல திட்டங்களை சமுக நம்பிக்கை சூழல் சார்ந்த விடயங்களை உள்வாங்கி செயற்படுத்தவேண்டியது சமுக கடமையாகும். அவ்வாறு நாம் செய்ய தவறுகின்றபோது வேற்று மொழி ஆதிக்கமும் மோகமும் அதிகரிப்பதாக நம்மை நாமே நொந்து கொள்ளமுடியாது.
நவீன கற்புல செவிப்புல ஊடகங்களின் ஆதிக்கத்துக்கு மத்தியில் சிறந்த இலக்கிய படைப்புகள் போட்டிட வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. சிறந்த சமகால இலக்கியங்களை சிறுவர்களுக்காக கொண்டுவருகின்றபோதுதான் சிறுவயதிலிருந்தே மொழி மீதான ஆர்வத்தை நேசத்தை சமுகத்தில் தூண்ட முடியும். இதனூடாக நாம் எதிர்பார்க்கும் ஒழுக்கவிழுமியங்கள் சார்ந்த நெறிசார் சமுக மாற்றத்தினையும் முன்னகர்த்த முடியும்.

Leave a comment