கொழும்பு: ‘இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் வகையில் தெற்காசியாவில் இந்து-புத்த அமைதி மண்டலத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்று இலங்கையின் புத்தமத கடும்போக்குவாதி அமைப்பான பொது பல சேனா தெரிவித்துள்ளது.
பொதுபலசேனாவின் முஸ்லிம்கள் மீதான இக்குற்றச்சாட்டிற்கு இலங்கையிலுள்ள எந்த முஸ்லிம் அமைப்புக்களும் தங்களது எதிர்ப்புக்களைத் தொடராத நிலையில், இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து உலகுக்கு எடுத்துக்காட்டும் முயற்சிகளை பொதுபலசேனா அண்மைக்காலமாகக் கையாண்டு வருகின்றது.
இந்நிலையில் பொதுபலசேனா அமைப்பின் செயலர் ஞானசார தேரர் கூறியதாவது:
தெற்காசிய பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் பெருகி வருவதால் பல நாடுகள் அச்சுறுத்தலில் சிக்கியுள்ளன. இதை தடுக்க இந்து-புத்த அமைதி மண்டலத்தை உருவாக்க பொது பல சேனா விரும்புகிறது. இதுகுறித்து இந்தியாவின் இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் பொது பல சேனா, இதே நோக்கத்திற்காக மியான்மர் நாட்டிலுள்ள 969 அமைப்புகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. இந்நிலையில் இந்தியாவிலும் அதன் கூட்டணியை தொடர விரும்பியுள்ளது.
ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி ராம்மாதவ் இதுகுறித்து கருத்து கூறுகையில், பொது பல சேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எங்களுக்கு எந்த வேண்டுகோளும் வரவில்லை. பொது பல சேனாவின் இந்த திட்டம் குறித்து ஆர்எஸ்எஸ்சுக்கு எதுவும் தெரியாது. ஆர்எஸ்எஸ்சை பொறுத்தளவில் சர்வதேச அளவிலான விவகாரங்களில் அது தலையிடுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Published by

Leave a comment