அன்புப் பொதுமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
காத்தான்குடி: நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி பெருநாள் தொழுகைகளை திறந்த வெளியில் நிறைவேற்றிட வேண்டும் எனும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் உதவியினால் அதனை தொடராக நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
இப்பணியினை பல ஆண்டுகளாக நாம் சிறப்பாக மேற்கொள்ள பொதுமக்களாகிய நீங்கள் வழங்கிவருகின்ற ஒத்துழைப்புக்கள் மகத்தானது அல்ஹம்துலில்லாஹ்.
ஓவ்வொரு தடைவையும் பெருநாள் தொழுகையினை உரிய நேரத்திற்கு நடாத்தி முடித்திட வேண்டும் எனும் எதிர்பார்ப்போடு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றோம். இருந்தபோதிலும் தொழுகையை ஆரம்பிக்கும் இறுதி தருணத்தில் ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக வருகை தருவதால் ஒரு சில நிமிடங்கள் தொழுகையை தாமதப்படுத்த வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்பட்டு விடுகின்றது.
இவ்வாறு நீங்கள் தாமதமாகுகின்ற காரணத்தினால் மைதானத்திற்கு நேர காலத்தோடு வருகைதரும் பல சகோதர சகோதரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்படுவதுடன் ஏற்பாட்டாளர்களாகிய நாங்களும் சூழ்நிலை அறியாத சிலரால் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுகின்றோம்.
அல்லாஹ்வின் தூதரை அதிகமாக நேசிக்கும் நாம் அவர்களது ஸுன்னாஹ்வை எம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதில் மிகவும் ஆர்வம் காட்டவேண்டும். தொழுகை ஏற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக பல சகோதரர்கள் இரவு பகலாக பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் செயற்பட்டு அனைத்து வித ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தும் உரிய நேரத்திற்கு நீங்கள் வருகை தராமையால் உங்களுக்காக மற்றொரு முஸ்லிம் காத்திருந்து, சிரமப்படுகின்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது.
அத்துடன் ஸுன்னாவை நடைமுறைப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட திடல் தொழுகை நிகழ்வில் மார்க்கத்தில் தெளிவில்லாத சிலர் முன்வந்து இரண்டாம் மூன்றாம் ஜமாஅத்துக்கள் என நடாத்துவதற்கு தாமதமாகிவருகின்ற உங்கள் நடைமுறை ஆதரவு வழங்குவதாக அமைந்துவிடும் அல்லவா?
அதேபோன்று வரக்கூடிய சகோதரர்களில் பலர் தங்களுக்கான விரிப்புக்களைக் கொண்டு வராமல் வெறுங்கையுடன் வருவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இறுதி நேரத்தில் வருகைதரும் உங்களைப்போன்ற சகோதரர்களுக்கு பாய் விரிப்புக்களை ஏற்பாடு செய்வது எங்களுக்கு சிரமமானதொன்றாகும் என்பதை கருத்திற் கொள்ளவும். அத்துடன் கீழ்க்குறிப்பிடப்படும் விடயங்களையும் அவசியம் கவனத்திற் கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
தங்களது வாகனங்கள், மோட்டார் சைக்கில்களை வீதிப் பாதுகாப்பு ஒழுங்கு விதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய உரிய இடத்தில் நிறுத்துவதுடன் வீதிப்பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுங்கு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பெண்கள் அபாயா போன்ற இஸ்லாமிய அமைப்பிலான ஆடைகளை மாத்திரமே அணிந்து வரவேண்டும்.இதுதவிர உங்களது பெண்களை இறுக்கமான அரை குறை ஆடைகளுடன் அழைத்து வந்து அந்நிய ஆண்களுக்கு காட்சிப்பொருளாகக் காட்டவேண்டாம். அவ்வாறு பொருத்தமற்ற ஆடைகளுடன் வரக்கூடிய சகோதரிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர்.
வரும்போது வுழு செய்து கொண்டு தங்களுக்கான (முஸல்லா) பாய் போன்ற விரிப்புக்களை கொண்டு வரவும்.
தொழுகை சரியாக காலை 6.15 மணிக்கு நடைபெறும்.
ஒரு தடவை மாத்திரமே ஜமாஅத் நடைபெறும்.
முதல் ஜமாஅத் முடிவுற்றதும் பல ஜமாஅத்துகள் நடாத்துவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளவும்.
தொழுகை முடிவடைந்ததும் நடைபெறும் குத்பாப் பிரசங்கத்தில் அனைவரும் கலந்து கொள்ளவும்.
தொழுகை முடிவடைந்து கலைந்து செல்லும்போது ஆண் பெண் கலப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ளவும்.
பிரசுரங்கள் வினியோகிப்பதற்கோ, வசூல்கள் மேற்கொள்வதற்கோ எவருக்கும் அனுமதிக்கப்படமாட்டாது.
எனவே, தொழுகைக்காக வருபவர்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களைக்; கருத்திற் கொண்டு செயற்படுமாறும், புனித இஸ்லாத்தினதும் எமதூரின் நற்பெயருக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுவதை தவிர்ந்து புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஏற்பாடுகளை சீராக மேற்கொள்ள எமக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
‘அனைவருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்’
ஏற்பாட்டுக்குழு
இஸ்லாமிக் சென்றர் – காத்தான்குடி
05.10.2014
Published by

Leave a comment