எங்களைக்கொஞ்சம் பாருங்களேன்!

1052864-Royalty-Free-Vector-Clip-Art-Illustration-Of-School-Kids-Carrying-Flowers-2[1]– காத்தநகர் முகைதீன்சாலி

இலங்கைத் திரு நாட்டின்
எம் இனிய உறவுகளே
கள்ளம் இல்லாத – எம்
இதயம் படும்பாட்டை
இப்போது கேளுங்களேன்!

புலமைப் பரிசில் எனும்
பொல்லாத அரக்கன் வந்து
எம் இளமைத் துடிப்பையெல்லாம்
இல்லாமல் ஆக்கியதே
கல்லாகி நிற்கிறோமே!

ஆற்றங் கரையோரம்
அலைபாயும் நதிபோலே
ஆடிப்பாடி மகிழ்ந்தோமே
அயிரை மீன்பிடித்து
அழகு பார்த்து வளர்த்தோமே!

பச்சை வயல் வெளியில்
இச்சை தீரும் வரை
பச்சிகளாய் பறந்தோமே
புலமைப் பரிசில் எங்கள்
இறகையெல்லாம் முறித்ததுவே!

காகங்கள் கரையுமுன்னும்
சேவல்கள் கூவு முன்னும்
அதிகாலை எழுந்தோமே
அறியாத பாடமெல்லாம்
அணியணியாய்ப் படித்தோமே!

விளங்காத போதெல்லாம்
விழி பிதுங்கி நின்றோமே
நாய் பேய் எருமை என்ற
ஏச்சோடும் பேச்சோடும்
அடி கூட வாங்கினோமே!

அம்மாவும் அப்பாவும்
அடிக்கடி எங்களை
படி படி என்று சொல்லி
பாடாய்ப் படுத்தினரே
மாடாய் உழைத்தோமே!

மூன்றாண்டு காலங்கள்
மூச்சு விடவில்லை நாங்கள்
படிப்பு படிப்பு என்று
பக்கத்துப் பிள்ளையுடன்
பேசி விளையாடவில்லை!

பச்சி போல பறக்கின்ற
பத்தாண்டு வயதினிலே நாங்கள்
சிறகொடிந்த பறவை போல்
சிக்கித் தவித்தோமே
வகுப்பிலும் வீட்டிலுமாய்!

வெட்டுப் புள்ளியென்ற
வெட்டும் கத்தி கொண்டு
வெட்டி வீழ்த்தினார்கள்
எம் மனதைப் பெரியோரே
எம் அறிவைப் பெரியோரே!

ஒரு புள்ளி கூடியதால்
மாலைகளும் மகிமைகளும்
அவர்களுக்கு அளிக்கிறார்கள்
நூற்றைம்பது புள்ளிபெற்றும் நாங்கள்
முட்டாள்கள் ஆனோமே!

நாடாளும் மன்னவரே
நம் இனிய பெரியோரே
வேண்டாம் எமக்கிந்த
வேற்றுமை பாராட்டும்
புரியாத புலமைப்பரீட்சை!

பத்தே வயதான
வித்தைகள் பல புரியும்
பச்சிளம் பச்சிகள் நாங்கள்
பாரெங்கும் எங்களை
சுதந்திரமாய் பறக்க விடுங்கள்!

Published by

Leave a comment