கொழும்பு: சர்வதேச ரீதியில் கடும்போக்கு வாதி என அடையாளம் காணப்பட்ட மியன்மாரின் அசின் விராது தேரருக்கு இலங்கை அரசாங்கம் வீஸா வழங்கியமை தேசத்திற்கு செய்யும் துரோகச் செயலாகும் என முஸ்லிம் உரிமைகளுக்கான ஜனநாயக அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மியன்மாரில் இயங்கி வரும் கடும் போக்கு அமைப்பான 969 இயக்கத்தின் தலைவர் அசின் விராது தேரர் பொதுபலசேனா அமைப்பின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்து அம்மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு அரசஙாங்கம் பூரண அனுசரனையை வழங்கியமை இந்நாட்டு முஸ்லிம்களைப் பற்றி எந்த கரிசனையும் இந்த அரசாங்கத்திற்கு கிடையாது என்பதை எமக்கு தெளிவாக்கியுள்ளனர்.
சமூக அபிவிருத்திற்கும் நாட்டில் சேவைகளை மேற்கொள்வதற்கும் வருகின்ற சர்வதேச தொன்டு நிறுவனங்களை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அவர்களால் நாட்டின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்நிறுவனங்களுக்கான விசாவை அரசாங்கம் இரத்துச் செய்தது. அத்தோடு இஸ்லாமிய தஹ்வா பணியில் ஈடுபடுவதற்காக நாட்டுக்கு வந்த வெளிநாடுகளை சேர்ந்த தப்லீக் ஜமாஆத்தினரை அரசு உடனடியாக வெளியேற்றியது.
ஆனால் நியுயோர்க்கின் டைம்ஸ் சஞ்சிகையினால் தீவிரவாதியாக சுட்டிக்காட்டப்பட்ட மியன்மாரின் அசின் விராது தேரரை நாட்டுக்குள் அனுமதித்தமை பெரும் குற்றமாகும்.
ஏற்கனவே பொதுபலசேனா அமைப்பினர் அளுத்கமயில் நடத்திய கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துவேசமான இனவாத கருத்துக்களை பரப்பியதையடுத்து அங்கு பெரும் வன்முறைகள் வெடித்தன. இந்நிலையில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் கொழும்பில் மீண்டுமொரு கூட்டமொன்றை நடாத்த அனுமதி வழங்கியமை பெரும் வரலாற்றுத் தவறாகும். அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கான நட்டஈட்டை இன்னும் அரசாங்கத்தினால் செலுத்த முடியாதிருக்கின்றது. இந்நிலையில் இன்னுமொருவன்முறைக்கு இடமளிக்கும் வகையில் பொது பல சேனாவுக்கு கூட்டமொன்றை நடாத்துவதற்கு அனுமதித்தமை பெரும் குற்றமாகும்.
அதேபோன்று ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா வன்முறைகளை கட்டவிழ்த்தது. இம்முறையும் ஜனாதிபதி நாட்டில் இல்லாத போது சர்வதேச தீவிரவாதியொருவரை பொது பலசேனா நாட்டுக்குள் அழைத்து வருகின்றமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என முஸ்லிம் உரிமைகளுக்கான ஜனநாயக அமைப்பின் தவிசாளர் எம்.ரீ.எம். றம்ஸி தாஜூதீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by


Leave a comment