அண்மையில் ஒரு சகோதரரை சந்திப்பதற்காக காங்கேயனோடைக் கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. அந்த ஊரின் தெற்கு எல்லையில் ஒரு அழகான பள்ளிவாயலோடு எழில் கொஞ்சும் முறையில் கட்டப் பட்டுள்ள “ஈரான் சிட்டி” என அழைக்கப் படும் வீடமைப்பு திட்டத்தில் அவர் வசிக்கிறார். அந்தப் பிரதேசம் பார்ப்பதற்கு அழகாகவும் ஊரின் உஸ்னத்தோடு ஒப்பிடும் போது ஆறுதலாகவும் இருந்ததது.
நான் சென்றிருந்தது சுமார் பனிரென்டாயிரம் அளவு சம்பளத்திற்கு வேலைசெய்யும் ஒரு ஏழை சகோதரரை சந்திப்பதற்காகும். அவரது வீட்டுக்குள் ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கான பண்ட பாத்திரங்கள் கூட போதுமானதாக காணப்படவில்லை. இரண்டு குழந்தைகளுடன் அந்த சிறிய வீட்டிலே அந்த குடும்பம் மிக எளிமையாக வாழ்ந்து வருகிறது.
அந்த வீட்டினைப் பார்த்த போது அது ஒரு சிறிய குடும்பத்தின் அடிப் படைத் தேவைகளிப்பூர்த்தி செய்யும் வகையில் அழகாகவே அமைக்கப்பட்டிருந்தது.
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு இவ்வாறான வீடு ஒன்றே பெரும் கனவாக இருக்கக் கூடும், இந்த கனவுகள் யாரோ புண்ணியவான்களின் அழகிய கொடைகளினால், உள்ளூர் பரோபகாரிகளின் அயராத முயற்சியின் மூலம் இவ்வாறான ஏழை எளியவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதை நினைத்தபோது அந்த கருணை உள்ளங்களுக்காக ஒருகணம் என் மனது இறைவனைப் பிரார்த்தித்தது.
இந்த மனப் பதிவோடு, எவ்வாறு இந்த வீடு அவர்களுக்கு கிடைத்தது அதற்கான பயனாளிகளின் தெரிவு எவ்வாறு இடம்பெற்றது என அறியும் நோக்கோடு அந்த சகோதரரை இந்த விடயங்கள் தொடர்பாக விசாரித்தேன். ஏனெனில் அந்த வீட்டினை பெற்றுக் கொள்வதற்கு மிக தகுதியான அவரை பயனாளியாக தெரிவு செய்திருப்பது மிகவும் பொருத்தமானது என்பது எனது அபிப்பிராயம்.
ஆனால் அவர் சொன்ன செய்திதான் என் மனதில் இடியைப்போல் இறங்கியது!
இந்த வீட்டில் நாங்கள் வாடகைக்கு இருக்கிறோம், மாதாந்த வாடகையாக ஆயிரத்து ஐந்நூறு செலுத்துகிறோம் என்றார். என் கற்பனைகள் சுக்கு நூறாக சிதறிப்போயின. இந்த வீட்டின் உரிமையாளர் வீடு தேவையற்றவராக இன்னுமொரு இடத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பதும் இந்த வீட்டுப் பகிர்வில் தில்லுமுல்லுகள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிகத் தெளிவாக புலப்பட்டது.
ஈரான் வீடமைப்பு திட்டத்தில்..
ஏனெனில் இவ்வாறான வீடோன்றே கனவாக இருக்கும் ஒரு குடும்பம் இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு இன்னுமொரு இடம் தேடித் போகும் அளவிற்கு வசதி வாய்ப்புக்ளோடு இருக்காது என்பது திண்ணம். இதனை அந்த சகோதரரிடம் விசாரித்தபோது ஒரு பிரபலமான காஜியாரின் பெயரைச் சொன்னார், அரசியல் வாதிக்கு கூஜா தூக்கும் வசதி படைத்த அவருக்கு அரசியல் வாதியின் காணிக்கையாம் அந்த வீடு.
இதுபோல பூநொச்சி முனைப் பிரதேசத்தில் வீட்டுத் திட்டம் ஒன்றிற்காக பெறப்பட்ட காணிக்குரிய கிரயத்தைச் செலுத்தாது இழுத்தடித்துவிட்டு அந்த காணிக்கு பதிலாக பூநொச்சி முனையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் குடும்பத்திற்கும் இதில் இரண்டு வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அதில் ஒன்றை அவர்கள் பணி ரெண்டு இலச்ச ரூபாய்க்கு விற்றும் விட்டார்கள். மற்றைய வீடு விற்பனைக்கு உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது, மேலும் பள்ளிவாயலுக்கு சொந்தமான இந்த வீட்டுத் திட்டத்திற்குரிய காணியை நயவஞ்சகமாக அபகரிக்க உதவிய நபருக்கும் ஒரு வீடு கொடுக்கப் பட்டு அந்த வீடும் விற்பனைக்கு வந்துள்ளது, இதுபோல் இன்னும் பல ஜீரணிக்க முடியாத அநியாயங்கள் அந்தப் பகுதி மக்காளால் சுட்டிக் காட்டப் பட்டது.
ஏழை எளியவர்களின் பெயரால் எத்தனை அநியாயங்கள். இந்த விடயங்கள் பற்றி அலட்டிகொள்ளாமல் எப்படி இருப்பது, இந்த சுரண்டலைக் கேள்விபட்டபோது உள்ளம் பதறியது. நமக்கு தேவையற்ற வேலை என்று இந்த சமூகம் வாய்மூடி இருப்பதை எண்ணி, இந்த சமகத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை எண்ணி மனது குறுகிப் போனது.
திரும்பும் திசையெல்லாம் தீன் மணக்கும் பேச்சுக்களும், தூய்மையாக இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கான முனைப்புகளும் மிக தீவிரமாக பறைசாற்றப்படும் ஒரு பிரதேசத்திலே, உணர்வுபூர்வமாக இஸ்லாமிய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் ஒரு கால சூழலிலே, இஸ்லாமிய எழுச்சி பற்றிப் பிரஸ்தாபிக்கப் படுகின்ற, அதற்கான உழைப்பில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளும் மக்களுக்கு மத்தியிலே வாழ்வதாக நாம் உணர்த்தப் பட்டிருக்கிறோம், மார்க்கமாக, மார்க்கத்தின் உயிர் நாடியாக நமக்கு கற்பிக்கப்படும் விடயங்களில் நுண்ணிய பிழைகளைக் கூட நுணுக்குக் காட்டி கொண்டு சோதித்து பிரச்சாரம் செய்கிறோம், தூய்மையிலிருந்து அதி தூய்மை நோக்கி இஸ்லாமிய இயக்கங்கள் மக்களை அழைக்கின்ற ஒரு சூழலில் வாழுகின்றோம்; எனினும் சுரண்டல் பற்றி சமூக அநீதிபற்றி நாம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கான பின்புலங்கள் என்ன?
சமூக அநீதிபற்றி, சுரண்டல் பற்றி அதிகம் கேள்விப் பட்டிருக்கிறோம். உலகின் பல தேசங்களில் சுரண்டலுக்கு எதிரான போர்களே இடம்பெற்றிருக்கின்றன. மற்றயவனுடைய உரிமையை பதறப் பதற பறித்தெடுத்து அனுபவிப்பதும், ஊழலும் மோசடிகளும் நமக்கு முன்னால் நமது சகோதரர்களால் எந்த தயவு தாட்சன்யமும் இன்றி கட்டவிழ்த்துவிடப்படும் போதும் நாம் கண்டும் காணமல் இருக்குமளவிற்கு நாம் உணர்வற்று இருப்பதற்கான காரணங்கள் என்ன? நீதியை நிலை நாட்டுவது பற்றிய, நேர்மையாக இருப்பது பற்றிய நமது இஸ்லாமிய வியாக்கியானங்கள் என்ன? இதுபோன்ற பல கேள்விகள் மனதுக்குள் சுழன்றன.
இந்த வீட்டுத் திட்டத்திலே இவ்வாறுதான் பலவீடுகள் வசதிபடைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் பலர் வாடகைக்குத்தான் குடி இருப்பதாகவும் மற்றுமொரு உபரித் தகவலையும் அந்த சகோதரர் சுட்டிக் காட்டினார்.
யாரோ கொடுக்கும் பணத்தை, உபகாரத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டிய அமானதமான சமூக பிரதி நிதித்துவத்தை இந்த மனிதர்கள் துஸ்பிரயோகம் பண்ணுகின்ற முறையினைப் பார்கின்ற போது; என்ன மனிதர்கள் இவர்கள்? என்கின்ற கேள்விதான் எழுகின்றது.
பெரும் செல்வந்தர்களிடம் சுரண்டுதல் என்பது வேறு, மாறாக வாய் பேசாத தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாத தமது உரிமைகள் என்ன என்பதே தெரியாத இந்த நலிவுற்ற கீழ்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தட்டிப் பறிப்பதில் நமது அரசியல் பிரதிநிதிகள் மட்டுமல்லாது அவரோடு ஒட்டி இருக்கும் ஜால்ராக்களும் ஈடுபடுவது வெட்கக் கேடு, சமூக அந்தஸ்த்தோடு வலம் வரும் இந்த பேராசைப் பிசாசுகள் இந்த வீடுகளை தங்களுக்கென்று பிரித்தெடுத்து உரிமைகொண்டாடுவதும், தங்களது பிள்ளைகளுக்கு வாரிசுச் சொத்தாக பகிர்ந்தளிப்பதும், எல்லாவற்றிற்கும்மேலாக ஏழைகளின் சொத்தை கேவலமான அரசியல் அடிவட்ருடித்தனத்தை பயன்படுத்தி அபகரித்ததோடு மட்டுமல்லாது அந்த ஏழைகளுக்கே வாடகைக்கு விட்டு அற்ப தொகைகளை ஏப்பம் விடுவதும் நினைத்தாலே அருவருக்கத் தக்க ஈனப் பிழைப்பாகும்.
இவ்வாறு அபகரிக்கும் சொத்துக்களை பணத்தை தங்கள் குழந்தைகளுக்காக குடும்பத்திற்காக என்ன மனோதைரியத்தில் இவர்கள் செலவு செய்கிறார்கள்? இவர்களின் இந்த அற்ப நடவடிக்கைகளால் இவர்கள் சம்பாதிப்பதை அறிந்தால் இவர்களது மனைவி மக்கள் என்ன அளவுகோல் கொண்டு இவர்களை அளவிடுவார்கள்? இறைவன் சொல்வதுபோல் இவர்கள்தான் “அற்ப சுகங்களுக்காக தமது வயிறுகளில் நெருப்பை நிறைத்துக் கொள்வோர்” என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஏழை எளியவர்களின் கஸ்டத்தை உணராத, வறுமையின் கோரத்தைப் புரிந்து கொள்ளாத இந்த அரசியல் பச்சோந்திகளுக்கு வால் பிடிக்கும் கேவலத்தை செய்து இவ்வாறான சொத்துகளை சேர்த்துக் கொள்வதில் நமது சமுகத்தின் மார்க்கம் படித்த, துறைசார் கல்வி பயின்றவர்கள் கூட ஈடுபடுகிறார்கள் எனும்போது, இவ்வாறான சில்லறைத் தனமானவர்களுக்கு சமூக அங்கீகாரமும் மரியாதையும் இன்னும் இருக்கிறது என்பதை எண்ணும் போது, சீ! என்ன தரம் கெட்ட சமுக அமைப்பில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து மனது இன்னுமும் உறுத்திக்கொண்டே இருக்கிறது .
Leave a comment