ஹஜ் வணக்கத்தை விமர்சித்ததால் தனது அமைச்சரை வெளியேற்றும் பங்களாதேஷ் அரசு!
– MJ
டாக்கா: ஹஜ் வணக்கத்தை விமர்சித்தமைக்காக பங்களாதேஷின் தொலைத்தொடர்பாடல் அமைச்சர் அப்துல் லத்தீப் சித்தீக் என்பவரை பங்களாதேஷ் அரசாங்கம் அமைச்சரவையிலிருந்து தூக்குவதற்கு 24 மணிநேர அவகாசத்தை அப்துல் லத்தீபிற்கு விதித்துள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேஹ் ஹஸீனாவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் அப்துல் லத்தீப் சித்தீக், அமெரிக்காவின் நியூயோர்க் தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தொன்றில் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ் வணக்கத்தைக் கொச்சைப்படுத்தியிருந்தார்.
“நான் ஹஜ் மற்றும் தப்லீஹ் ஜமாஅத் ஆகியவற்றுக்கு எதிராக மரணிப்பதற்கு விரும்புகிறேன். இரண்டு மில்லியன் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்குச் செல்கின்றனர். இது மனிதவர்க்கத்தின் வீணடிப்புச் செயல். இது இவர்களுக்கு எவ்விதப் பிரயோசனத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. இவர்களால் உள்ளுர் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், தங்களது பணத்தை வெளிநாட்டில் கொண்டுபோய் செலவுசெய்யும் ஓர் துர்ப்பாக்கிய நிலையே தோன்றுகிறது” என இவர் கூறியிருந்தார்.
இந்நிகழ்வில் பங்காளி மொழியில் பேசிய இவர், “மேலும் தப்லீஹ் ஜமாஅத் ஓர் வீனான இயக்கம், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எந்தப்பங்களிப்புமில்லாமல் பள்ளிவாயல்களில் உறங்கி எழுகின்றனர். வருடந்தோரும் வேலையில்லாமல் இலட்சக்கணக்கில் இஜ்திமா என்று ஒன்றுகூடி கலைகின்றனர்” எனவும் தெரிவித்தார்.
இவரது இக்கருத்திற்கு தப்லீஹ் ஜமாஅத்திலிருந்து இதுவரை எவ்வித மறுப்பறிக்கையும் வரவில்லை.
அமைச்சர் அப்துல் லத்தீப் சித்தீக்
இக்கூற்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.
இஸ்லாமிய கடமைகளுள் ஒன்றான ஹஜ் வணக்கத்தைக் கொச்சைப்படுத்திய இவரது இக்கூற்றுக்கு, பங்களாதேஷ் மாத்திரமல்லாது உலக முஸ்லிம்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தனது கருத்தை அப்துல் லத்தீப் வாபஸ்பெற்றால் அல்லது பொதுமன்னிப்புக் கோரினால், அமைச்சர் பதவி பற்றி ஆலோசிக்கப்படும் என பங்களாதேஷ் அரசாங்க அலுவலகம் கூறியிருக்கிறது. எனினும், உடனடியாக அப்துல் லத்தீபை அமைச்சரவையிலிருந்து தூக்கியெறியும்படி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும், பங்களாதேஷ் மக்களும் ஒன்றாக கோஷமிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment