சிறுவர், முதியோர் தினம் இன்று
கொழும்பு: சர்வதேச முதியோர் தினமும், சிறுவர் தினமும் உலகெங்கும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை யானது இவ்விரு தினங்களையும் ஒரே நாளில் பிரகடனப்படுத்திய காலம் தொடக்கம் உலக நாடுகள் இத்தினங்களை அனுஷ்டித்து வருகின்றன.
முதியோரும் சிறுவரும் எப்போதும் மற்றையோரில் தங்கி வாழ வேண்டி யவர்கள் என்பதனாலேயே இரு தினங்களும் ஒரே நாளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
சிறுவர் மற்றும் முதியோர் மத்தியில் ஆதரவற்ற நிலைமையில் பலர் உள்ளதனால் இன்றைய தினம் மிகவும் முக்கியத்துவம் மிகுந்ததாக விளங்குகிறது.
உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் முதுமைப் பருவத்தை எய்துவதென் பது மனிதன் உட்பட அனைத்து சீவராசிகளுக்கும் தவிர்க்க முடியாத பொதுநியதி ஆகும். இவ்வுலகில் அவதரிக்கும் ஒவ்வொரு மனிதனும் குழந்தை, சிறுவர், பதின்ம வயது, வாலிபம், நடுத்தரம் ஆகிய பல்வேறு பருவங்களைத் தாண்டி முதுமையினுள் பிரவேசிக்கின்றான்.
குழந்தைப் பருவம் முதல் வாலிபப் பருவம் வரையான காலப் பகுதியில் மனிதன் அனுபவிக்கும் குதூகலங்கள் யாவுமே திருமணப் பந்தத்தையடுத்து மாற்றம் பெறுகின்றன. மனிதனை பொறுப்புகள் வந்து சூழ்ந்து கொள்கின்றன.
கணவனும் மனைவியும் தங்களது குழந்தைகளுக்காகவே எதிர்காலத்தைத் தியாகம் செய்து ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபடுகின்றனர். பிள்ளைகள் ஆளாகி வாலிபப் பருவத்தையடைந்து சொந்தக் காலில் நிற்கும் திராணி ஏற்பட்டதும் பெற்றோரை முதுமை ஆட்கொண்டு விடுகிறது. தங்களது பிள்ளைகளின் நலனுக்காக அல்லும் பகலும் ஓயாது பாடு பட்ட அவர்கள் முதுமைப் பருவத்தையடைந்ததும் தங்கள் அன்றாட கருமங்களைக் கவனிக்கவே பலவீனமானவர்களாக மாறி விடுகி ன்றனர். ஒவ்வொரு கருமத்திலும் பிறரின் உதவியை நாட வேண்டிய பரிதாப நிலைமைக்கு உள்ளாகின்றனர்.
முதுமைப் பருவத்துக்குரிய பிரச்சினைகள் இங்கேதான் ஆரம்பமாகி ன்றன. அவர்கள் தங்களது அன்றாட சீவியத்தைக் கொண்டு நடத்து வதற்காக பிள்ளைகளின் தயவை நாட வேண்டிய கட்டாய த்துக்கு ஆளாகின்றனர். வறுமை, அரவணைப்பின்மை, பாசப் புறக்கணிப்பு, வியாதிகள், உடல் பலவீனம் போன்ற ஏராளமான உபாதைகளால் முதியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி அல்லல்படுகின்றனர்.
இந்நிலைமையானது மிகவும் உணர்வுபூவர்மானதாகும். இங்கேதான் பிள்ளைகளுக்கான பொறுப்பும் வந்து விடுகிறது. பெற்றோர் தங்களது வாழ்வை பிள்ளைகளுக்காக எவ்வாறு தியாகம் செய்தனரோ அவ்வாறே பிள்ளைகளும் தங்களது வாழ்வை பெற்றோருக்காகத் தியாகம் செய்யாத பட்சத்தில் இது துரோகத்துக்கு ஒப்பானதாகும். மனித இனத்துக்கேயுரிய குடும்பப்பாசக் கட்டமைப்பானது அர்த்த மில்லாததாகி விடுகின்றது.
மனித குலத்துக்கும் விலங்கு இனத்துக்கும் வேறுபாடே இல்லாமல் போய் விடுகின்றது. முதியோரை அரவணைக்க வேண்டிய முழுப் பொறுப்பும் பிள்ளைகளையே சார்ந்ததாகும். பிள்ளைகள் இல்லாத பட்சத்திலேயே முதியவர்கள் ஏனையோரின் உதவியை நாட வேண்டி யவர்களாக உள்ளனர்.
இத்தகைய தார்மிக யதார்த்தத்தை இள வயதினர் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வார்களேயானால் முதியோரின் அவலங்கள் முழு மையாகவே தீர்ந்து விடுமென்பது உண்மை. அத்துடன் முதுமைப் பருவமென்பது வாழ்வின் முடிவல்லவென்ற மனஉறுதியும் எதிர்கால நம்பிக்கையும் முதியோர் மனதில் ஏற்படுவதற்கும் இடமுண்டு. எனவே முதியோரின் மன ஆதங்கத்தையும் துன்பங்களையும் அனை த்துப் பருவத்தினரும் கவனத்தில் கொள்வது இங்கு அவசியமாகிறது.
இன்றைய தினத்தில் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் உலகம் விசேட கவனம் செலுத்துகிறது. உலக நாடுகளை எடுத்து நோக்குவோமானால் சிறுவர்கள் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வாழ்வதை நாம் அறிகிறோம். சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதும் தலையாய பிரச்சினையாகும். குடும்ப வறுமை காரணமாக கல்விகற்க வாய்ப்பு கிடைக்காமல் கையேந்திப் பிச்சையெடுக்கும் நிலையில் ஏராளமான சிறுவர்கள் உள்ளனர். இவற்றுக்கெல்லாம் மேலாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்வு சீரழிக்கப்பட்ட சிறுவர்களும் ஏராளம்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறுவர் பாதுகாப்பு விடயத்தில் எமது நாடு முன்னிலையில் உள்ளதென்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.
சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதுடன் அவர்களது உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங்கையில் காத்திரமான சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. பாடசாலை இடைவிலகலைக் கட்டுப்படுத்தி சிறுவர்களுக்கு கல்வி வாய்ப்பை அளிப்பதில் இங்கு விசேட கவனம் செலுத்தப்படுகிறது. இதுபோன்ற கடுமையான நடைமுறைகளின் காரணமாக இலங்கையில் சிறுவர் நலன்கள் மேம்பாடடைந்து காணப்படுகின்றன.
எனினும் சிறுவர் மீதான குற்றங்களையோ அல்லது முதியோர் அனுபவி க்கும் அவலங்களையோ முழுமையாகக் கட்டுப்படுத்துவதென்பது இன்னுமே பூரணமாக வெற்றியளிக்கவில்லையென்றே கூற வேண்டி யுள்ளது. பொதுமக்கள் தரப்பில் போதிய ஒத்துழைப்பின்மையும் விழிப்புணர்வின்மையும் இதற்குக் காரணமாகின்றன.
சிறுவரும் முதியோரும் எமது நாட்டின் விலைமதிக்க முடியாத பெரும் சொத்துகளென்பதைத் கவனத்தில் கொண்டு நாம் அனைவருமே போதிய விழிப்புணர்வு கொள்வதற்கு இன்றைய தினத்தில் உறுதி பூணுவோம்.!
– தினகரன்
Published by

Leave a comment