மாத்தளை: கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் தொடர்பாக நாடெங்கும் பரவலாக பொது மக்களால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தெருநாய்களால் மக்களுக்கு உண்மையிலேயே பெரும் தொல்லைதான். வீதியால் செல்லும் மக்களை நாய்கள்துரத்துவதுண்டு. சில நாய்கள் துரத்திக் கடிப்பதுமுண்டு. அதுவே விசர்நாயாக இருந்து விட்டால் நிலைமை இன்னும் பயங்கரம்!
சாதாரண நாயால் கடிக்கப்பட்டவரும் கூட தடுப்புமருந்து ஏற்றுவது கட்டாயம். ஒருவரைக் கடித்தது சாதாரண நாயா அல்லது விசர் நாயா என்பதைக் கண்டு பிடிப்பது இலகுவான காரியமல்ல. எனவேதான் நாயினால் கடியுண்டவருக்கு பாதுகாப்பு கருதி தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
நாய்கள் எங்குமே ஆக்கிரமித்திருக்கின்றன. வீதிகள், பஸ் நிலையம் உட்பட பொது இடங்களில் நாய்கள் பெருகிக் காணப்படுகின்றன. தெருநாய்களைப் பிடித்துக் கொலை செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டதனால் நாய்கள் தாராளமாகப் பெருகுகின்றன. நாய்களைக் கொல்வதை ஜீவகாருண்யமுள்ள எவரும் உண்மையில் ஏற்றுக் கொள்ளத்தான் மாட்டார்கள். அனைத்து உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு.
தெரு நாய்கள் தொடர்பாக மாத்தளை மாவட்டத்திலிருந்து கிடைத்துள்ள சுவாரஸ்யமான செய்தியை “வாசகர் கடிதம்” பகுதிக்கு இத்துடன் அனுப்பி வைக்கிறேன்.
மாத்தளை மாவட்டத்தில் உலவித் திரிகின்ற கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை சுமார் அறுபதாயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இம்மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது எட்டில் ஒரு பங்கு (1/8) எண்ணிக்கையில் நாய்கள் உள்ளன. அதாவது மக்கள் எண்ணிக்கை சுமார் 4,80,000 ஆகும்.
மாத்தளை மாவட்ட சுகாதார தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
அது மாத்திரமன்றி மாத்தளை மாவட்டத்திலுள்ள நாய்களில் சுமார் 95 சதவீதமான நாய்கள் தெருக்களிலேயே அலைந்து திரிவதாகவும் அவர் கூறுகிறார்.
வளர்ப்பு நாய்களுக்கு நோய்த் தடுப்பூசி போடப்படுவதுடன், விசர் நாய்க்கடி தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார். விசர்நாய்க்கடி குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுவது மிகவும் அவசியம்.
(அன்வர் தம்புள்ளை)
– தினகரன்
Published by

Leave a comment