ஹொங்கொங்: ஹொங்கொங்கில் ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசின் உத்தரவையும் பொருட்படுத்தாமல் வீதிகள் மற்றும் வர்த்தக மையப்பகுதியை முடக்கி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கலகம் அடக்கும் பொலிஸார் ஞாயிறு இரவு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் தடியடிப்பிரயோகம் நடத்திய நிலையிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர். பெரும்பான்மை மக்கள் அமைதியடைந்ததை அடுத்து கலகம் அடக்கும் பொலிஸார் அகற்றிக் கொள்ளப்பட்டதாக ஹொங்கொங் அரசு நேற்று திங்கட்கிழமை அறிவித்தது.
எனினும் ஒருசில வங்கிகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததோடு போக்குவரத்துகளும் முடங்கியிருந்தன.
ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் மற்றும் மைய சார்பு ஜனநாயக ஆக்கிரமிப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துள்ளனர். ஹொங்கொங்கிற்கான தலைமையை தேர்வுசெய்யும் 2017 தேர்தலில் சீனாவின் தலையீடு குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
ஹொங்கொங்கிற்கான நிறைவேற்று அதிகாரியை தேர்வுசெய்வதற்கு சுதந்திரமான வாக்குரிமையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர். எனினும் சீனா இதனை நிராகரிக்கிறது.
இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலகம் அடக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்தது. இதில் பலரும் கைதுசெய்யப்பட்டனர். கலவரத்திற்கு பின்னரும் அரச கட்டடங்களை சூழ அமைக்கப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்ட முகாம்களில் ஞாயிறு இரவிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்தனர். இதில் ஒருசிலர் தடுப்புகளையும் செய்திருந்தனர்.
சீன இராணுவம் தற்போதைய பதற்றத்தில் தலையிடப்போவதாக பொதுமக்களிடம் பரவிய வதந்தியை உண்மையில்லை என்று ஹொங்கொங் நிறைவேற்று அதிகாரி ‘p லியுங் நிராகரித்தார். “பொதுமக்கள் அமைதிகாப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். பொய்யான வதந்திகளால் மக்களை வழிதவறச் செய்ய வேண்டாம்” என்று நிறைவேற்று அதிகாரி கோரிக்கை விடுத்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியாக கலைந்துசெல்லும்படி அரசு கோரியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மூன்று மாவட்டங்களின் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் ஒருவர் விபரித்துள்ளார். “ஆர்ப்பாட்டக்காரர்களை குறைப்பதற்கு போதுமான பொலிஸ் அதிகாரிகள் இல்லாமல் உள்ளது” என்று இவான் யெங் என்பவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஆரம்பமான மாணவர்களின் ஒத்துழையாமை போராட்டாத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மைய சார்பு ஜனநாயக ஆக்கிரமிப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டதை அடுத்தே பதற்றம் தீவிரம் அடைந்தது.
இந்நிலையில் ஜனநாயக ஆதரவு இயக்கம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ஹொங்கொங் நிறைவேற்று அதிகாரி ‘p லியுங் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போதைய சூழலில் அரசியல் சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும் பதற்றத்தை தணிக்கவும் ‘p லியுங் பதவி விலகுவதே ஒரே வழி என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் தனது மக்கள் விடுதலை இராணுவத்தை நிலைநிறுத்தி வைத்திருக்கும் சீனா, ஆர்ப்பாட்டக்காரர்களை நகர நிர்வாகமே கையாளும் என்று குறிப்பிட்டுள்ளது.
சீனாவின்; ஹொங்கொங் மற்றும் மக்காவு விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடும்போது, சட்டம் ஒழுங்கை மதிக்காத மற்றும் சமூக அமைதியை பாதிக்கச் செய்யும் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று சீனாவின் சின்ஹவ் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மைய ஆக்கிரமிப்பு இயக்கம் சட்டவிரோதமானது என்று சீன வெளியுறவு அமைச்சு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியது.
சீன அரச பத்திரிகை ஒன்றான கிலோபல் டைம்ஸ் தனது ஆசிரியர் உரையில், ஹொங்கொங்கின் குழப்ப நிலை குறித்து சீனா கவலை அடைவதாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இதற்கு தீவிர எதிர்ப்பாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஹொங்கொங்கின் ஜனநாயக கோரிக்கை பிரதான நிலப்பகுதிக்கும் பரவும் அபாயம் குறித்து சீனாவின் ஆளும் கொம்மினிஸ்ட் கட்சி கவலை அடைந்திருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
‘ஒரு நாடு இரு ஆட்சி” முறை என்ற உடன்பாட்டின் கீழ் பிரிட்டன் கடந்த 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங்கை சீனாவிடம் கையளித்தது. இந்த ஆட்சி முறை மூலம் சீனாவின் பிரதான நிலப்பகுதியில் வாழும் மக்களை போலல்லாமல் ஹொங்கொங் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.
Published by


Leave a comment