கொழும்பு: இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் துடுப்பாட்ட வீரரும் அணியின் தலைவராக செயற்பட்டவருமான மாவன் அத்தபத்து, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்கு வெளிநாட்டவர்கள் பலர் விண்ணப்பித்திருந்த போதும், இறுதியாக இங்கிலாந்து நாட்டவரான ஜோன் லுயிஸ் மாவனுக்கு போட்டியாக இருந்துள்ளார்.
மாவன் அத்தபத்து கிரிக்கெட் விளையாடிய காலத்தில் சிறந்த நுட்பமான துடுப்பாட்ட வீரராக கருதப்பட்டதுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனைகளையும் புரிந்துள்ளார். இவர் இலங்கை அணியை தலைமை தாங்கி பல வெற்றிகளை இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.
மாவன் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பின்னர் 2011இல் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். பிறகு இவரது சிறப்பான சேவை காரணமாக 2013இல் இலங்கை அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட கிராம், போட்டிற்கு உதவி பயிற்சியாளராக நியமனம் பெற்றார்.
இலங்கை 20க்கு 20 உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த பின்னர் பயிற்சியாளர் கிராம் போட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிச் சென்றமையால் மாவன் தற்காலிக பயிற்சியாளராக நியமனம் பெற்றார். இக்காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துடனான டெஸ்ட், ஒருநாள், 20க்கு 20 போட்டிகளிலும் பின்னர் பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் வெற்றிபெற பயிற்சியாளராக மாவன் பெருமளவு பங்களிப்பு வழங்கியிருந்தார்.
மாவன் தனது பயிற்சியாளர் பொறுப்பில் படிப்படியாக முன்னேற்றம் கண்டு, பிரபல வெளிநாட்டு பயிற்சியாளர்களுடன் போட்டியிட்டு தற்போது இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளராக நியமனம் பெற்றுள்ளமை விசேடமாக குறிப்பிடத்தக்கதாகும்.
1999ம் ஆண்டு, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோய் டயஸ் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி வகித்த பின்னர், நீண்ட காலப்பகுதிக்கு பிறகு உள்நாட்டு பயிற்சியாளர் ஒருவராக மாவன் அத்தபத்து பயிற்சியாளராக கடமை புரிய உள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியை 2015இல் நடைபெற உள்ள உலகக் கிண்ண போட்டிகளுக்கு சிறப்பாக தயார்படுத்துவதே புதிய பயிற்சியாளரான மாவன் அத்தபத்துவின் பிரதான பொறுப்பாக அமைந்துள்ளது. 2015 பெப்ரவரியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment