காத்தான்குடி: 50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா 26.9.2014- நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி எஸ்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்னிந்தியாவின் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் முனைவர் கவிமாமணி தி.மு.அப்துல்காதர் கலந்து கொண்டார்.
தற்போதய சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பணிகளைப் பாராட்டி இலங்கையின் பல பிரதேசங்களையும் சேர்ந்த பிரபல்யமிக்க 50 தமிழ் முஸ்லிம் கவிஞர்கள் இந்நூலில் கவிதை யாத்துள்ளனர்.
இங்கு நூலின் நயவுரைகளை கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார், தென்கிழக்கு பல்கலைகழக மொழித்துறைத்தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
இதில் நூலின் முதற்பிரதியை சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும், விஷேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித்திடமிருந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைரும்,கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிஸாட் பதியுத்தீன் பெற்றுக் கொண்டார்.
இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும்,உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஸீர் சேகுதாவூத் , அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைரும்,கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிஸாட் பதியுத்தீன் ,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,நகர சபைத் தவிசாளர் முஹம்மது அஸ்பர் ஆகியோரினால் நூலில் கவிதைபாடிய 50 கவிஞர்களும் பொன்னாடை போர்த்தப்பட்டு பொற்கிழி மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் நூல் வெளியீட்டுவிழாவில் தென்னிந்திய பேராசிரியர் முனைவர் கவிமாமணி தி.மு அப்துல்காதர் தலைமையில் ‘நதியே…நீ பாடிக்கொண்டிரு..’எனும் தலைப்பில் கவியரங்கும் இடம்பெற்றது.
காப்பியக்கோ புலவர்மணி ஜின்னாஹ் செரிபுத்தீன் கவிஞர்களை அறிமுகம் செய்தார்.
இதில் கவிஞர்களான ரீ.எல்.ஜவ்பர்கான், நீலாபாலன், அன்புடீன், அ.கௌரிதாசன், என்.நஜ்முல் குசைன், செ.குணரட்னம், மௌலவி எம்.எச்.எம்.புஹாரி, எஸ்.ரபீக், தமிழ்த்தென்றல் அலிஅக்பர், கலைவாதி கலீல் ,ஆகியோர் கவிமழை பொழிந்தனர்.
கவிஞர்களான சுஐப் எம்.காசீம் கவிதாயினி கலைமகள் ஹிதாயா ஆகியோர் வாழ்த்துக்கவிதை வாசித்தனர்.
இந் நூலை சிரேஷ்ட ஊடகவியலாளரும், தேசிய சாஹித்ய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் இதனை தொகுத்துள்ளார்.
கவிஞர்.வீ.மைக்கல் கொலின் நூலாசிரியர் அறிமுகம் செய்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா , காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர, மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைவரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம். அலியார் (பலாஹி), ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் மும்தாஸ் மதனி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட் ,யூ.எல்.எம்.என்.முபீன் மற்றும் உலமாக்கள் ,முக்கியஸ்தர்கள் ,அரசியல் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள் ,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment