நியுயோர்க்: இலங்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச சமூகத்துக்கு நேரடியாக எடுத்துக்கூறியிருப்பதாக புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையை பாராட்டியிருக்கும் புத்திஜீவிகள் மற்றும் மதத் தலைவர்கள், ஐ.நா சபையில் சென்று அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டியிருப் பதானது ஜனாதிபதியின் துணிச்சலை எடுத்துக்காட்டியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
நாட்டில் நிலவிய 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி அவர்கள், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஸ்திரத்தன்மையை சர்வதேசத்துக்கு தெளிவாக துணிச்சலுடன் எடுத்துக்காட்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி தனது உரையில் வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கை கையாண்ட யுக்திகளுக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சட்டத்தரணி டயிள்யூ.எம்.கருணாதாச தெரிவித்துள்ளார்.
உலகம் எதிர்காலத்தில் செல்லவேண்டிய பாதைக்கான ஒரு வழிகாட்டியாக ஜனாதிபதியின் ஐ.நா. பொதுச்சபை உரை அமைந்துள்ளது என முன்னணி ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் என்ற போர்வையில் அரசியல் நோக்கங்களுக்காக ஏனைய நாடுகள் மீது ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடாது என்ற தெளிவானதொரு செய்தியை ஜனாதிபதி தனது உரையின் மூலம் பலம்மிக்க நாடுகளுக்குத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஐ.நா பொதுச்சபை உரை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை அபிவிருத்தியை நோக்கி முன்னேறிவரும் நிலையில் மனித உரிமையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த சர்வதேசம் முயற்சிக்கக் கூடாது என்பதை ஜனாதிபதி தெளிவாக எடுத்துக் கூறியிருப்பதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எந்தவொரு வெளி சக்தியின் தலையீடும் இன்றி உள்ளகப் பிரச்சினையை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்வதற்கு சர்வதேச சமூகம் இலங்கைக்கு சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதி தனது உரையின் மூலம் வெளிக்காட்டியிருப்பதாக கலாநிதி தயான் ஜயதிலக குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பலஸ்தீன் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை ஐ.நா பொதுச்சபையில் கண்டிப்பதற்கு பல முஸ்லிம் நாடுகளே தயக்கம் காட்டிவரும் நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது உரையில் அத்தாக்குதல்களை கண்டித்திருப்பதானது பலஸ்தீன மக்கள் மீது ஜனாதிபதி கொண்டிருக்கும் பற்றை வெளிக்காட்டியிருப்பதாக முஸ்லிம் மதத்தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
Published by
![Mahinda-US%20Speech[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/mahinda-us20speech1.jpg?w=127&h=150)
Leave a comment