– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிஅசின் விராது தேரரின் இலங்கைக்கான விஜயம் இனவாத வன்முறைகளை ஊக்கப்படுத்துவதற்கே உதவும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பொது பல சேனாவின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மியன்மார் நாட்டைச்சேர்ந்த அசின் விராது தேரர் வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. விராது தேரர் என்பவர் கடந்த காலங்களில் மியன்மாரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இனப்படுகொலைகள் மற்றும் அனைத்துவித தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருந்தவர். மாத்திரமின்றி வன்முறைகளையும் தீவிரவாத செயற்பாடுகளையும் தூண்டி இனங்களுக்கிடையேயான பிரச்சினைகளையும் மோதல்களையும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடத்திய ஒருவரே இந்த விராது தேரர். மனித நேயத்தையும், சமாதானத்தையும் விரும்பும் அனைவரும் விராது தேரரை ஒரு பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டுபவராகவும், மனித நேயத்துக்கும், இன நல்லுறவுக்கு அச்சுறுத்தலான ஒருவராகவுமே பார்க்கின்றனர்.
இதே கருத்தினை வலியுறுத்தும் வகையில் பல சர்வதேச சஞ்சிகைகளும் இவருக்கெதிரான பல செய்திகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் டைம்ஸ் சஞ்சிகை விராது தேரரை பௌத்த பயங்கரவாதத்தின் முகம் என வர்ணித்திருந்தது.
இவ்வாறான ஒருவரையே பொது பல சேனா தனது மாநாட்டிற்கு அழைத்திருக்கின்றது. இலங்கை நாட்டில் 30 வருட கால கோர யுத்தம் முடிவுற்று சமாதானம், நல்லிணக்கம், சக வாழ்வு என்பன அனைத்து மக்களாலும் வலியுறுத்தப்படுகின்றது. அத்தோடு பொது பல சேனா கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக பலவேறுபட்ட இனவாத பிரச்சாரங்களையும் அச்சுறுத்தல்களையும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கும் இவ்வாறான ஒரு சூழலில் அசின் விராது தேரர் போன்ற ஒருவரை இலங்கைக்கு அழைப்பதானது இனவாத செயற்பாடுகளை மேலும் ஊக்கப்படுத்துகின்ற ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படவேண்டியிருக்கிறது.
அழுத்கம மற்றும் பேருவளையில் நடந்த சம்பவங்களின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் இன இணக்கப்பாடுகளுக்கு எவ்வகையிலும் உதவாத நம் நாட்டின் நிரந்தர சமாதானத்திற்கு கேடு விழைவிப்பதாகவே இது அமையும்.
அந்த அடிப்படையில் விராது தேரரை இலங்கைக்கு அழைக்கின்ற செயற்பாடு குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிகுந்த கவலை கொண்டுள்ளது. அத்தோடு இதனை வன்மையாக கண்டிப்பதோடு இதற்கான கடும் எதிர்ப்பையும் தெரிவிக்கின்றது.
மேலும் இது விடயத்தில் ஜனாதிபதி மற்றும் உரிய உயர்மட்டங்கள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி அவர்கள் இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஐக்கியத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதாக வலியுறுத்தியிருக்கிறார். குறிப்பாக ஜனாதிபதியவர்கள் உலக இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டின் தலைவர்களை சந்தித்து இலங்கையில் முஸ்லிம்களோடு சகோதரர்களாக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்நிலையில் சர்வதேச ரீதியில் பாரதூரமான இன வன்முறைகளுக்கு காரணமான ஒருவராக அடையாளம் காணப்படுகின்ற அசின் விராது தேரர் போன்றவர்களை இந்நாட்டிற்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதிப்பதானது ஜனாதிபதி தெரிவித்துள்ள கூற்றுக்கு நேரெதிரானதாகவே அமைகிறது.
எனவே, இந்நாட்டில் தற்போது நிலவும் இனவாத சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு இன நல்லிணக்கத்தை உருவாக்கி நிரந்தர சமாதானத்தை உருவாக்குமுகமாக இவ்வாறான மனித இனத்துக்கே விரோதமான, முழு உலகுமே தீவிரவாதியாக நோக்கும் விராது தேரர் போன்றவர்களை இந்நாட்டுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி அவர்களையும் வெளிநாட்டு அமைச்சையும் கேட்டுக் கொள்கின்றோம்.
Published by

Leave a comment